`'பூனை ஜாய்க்கு ஆபரேஷன் முடியறவரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது! - ஆங்கர் ஐஸ்வர்யா | anchor iswarya talks about her pet cat 'joy's little surgery

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (21/01/2019)

`'பூனை ஜாய்க்கு ஆபரேஷன் முடியறவரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது! - ஆங்கர் ஐஸ்வர்யா

சன் டி.வி ஆங்கர் ஐஸ்வர்யாவை மறந்திருக்க மாட்டீர்கள். ஆங்கரிங்கில் பிசியாக இருந்தபோதே திருமணமாகி கணவருடன் அமெரிக்கா சென்றவர், அங்கு தமிழ் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து கரகாட்டம் உள்ளிட்ட தமிழ்ப் பாரம்பர்யக் கலைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திவருகிறார்.

ஐஸ்வர்யா

தமிழ்க் கலாசாரம், கலை என ஒருபுறம் இயங்கிக்கொண்டிருப்பவரின் இன்னொரு முக்கியமான குணம், செல்லப்பிராணிகளின் மீதான காதல். சென்னையில் இருந்தபோது நாய், பூனைகளை வீடு நிறைய வளர்த்துவந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கோடை வெயிலை பூனைகளால் தாங்கிக்கொள்ள இயலாது என்று, தன்னுடைய சென்னை வீட்டில் பூனைகளுக்கென்று தனி ஏசி அறையை ஒதுக்கி வைத்திருந்தார்.

ஐஸ்வர்யா

தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்துவருகிறவர், அங்கு தான் வளர்க்கும் ஒரு பூனைக்குட்டிக்கு, 'ஜாய்' எனப் பெயர் சூட்டியுள்ளார். அந்த 'ஜாய்'க்குதான் சில மாதங்களுக்கு கழுத்தில் சின்னப் பிரச்னை.

'எப்படி அடிபட்டுச்சுனே தெரியல, கழுத்துல அடிபட்டு ரெண்டு நாளா தலையைத் தூக்க முடியாம கஷ்டப்பட்டுச்சு. என்னால பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியலை. பெட் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். அங்க, 'சின்னதா ஒரு சர்ஜரி பண்ணினா சரியாகிடும்னு' சொன்னாங்க. உடனே பண்ணிடுங்க'ன்னு ஆபரேஷனுக்கு ரெடி பண்ணச் சொல்லிட்டேன். ஒரு மணி நேரம் நடந்திருக்கும் அந்த ஆபரேஷன். அது நடந்து முடியற வரைக்கும் எனக்கு படபடன்னு இருந்தது. ஒருவழியா ஆபரேஷன் சக்சஸா முடிஞ்சது. ஜாய் கழுத்தை நல்லா திருப்பி விளையாடறதைப் பார்த்த பிறகே என்னால சாப்பிட முடிஞ்சது' என்கிறார் ஐஸ்.