தமிழிசையுடன் பொங்கல் வைப்பேன்; காங்கிரஸ் சேனலில் காம்பியரிங் செய்வேன்! - `முதல் மரியாதை’ ரஞ்சனி | muthal mariyathai ranjani hosts a debate in congress channel

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (22/01/2019)

கடைசி தொடர்பு:16:50 (22/01/2019)

தமிழிசையுடன் பொங்கல் வைப்பேன்; காங்கிரஸ் சேனலில் காம்பியரிங் செய்வேன்! - `முதல் மரியாதை’ ரஞ்சனி

`முதல் மரியாதை’ ரஞ்சனியை நினைவிருக்கிறதா? திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். நடப்புச் சம்பவங்கள் குறித்து தைரியமாகத் தன்னுடைய கருத்தைப் பொதுவெளியில் வைத்து வருகிறவர், தற்போது சபரிமலை விவகாரத்திலும் `பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்' எனக் குரல் கொடுத்து வருகிறார்.

ரஞ்சனி

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழிசை சௌந்தரராஜனுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். தொடர்ந்து மத்திய அரசு நடத்திய சில கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சினிமா தொடர்பாகப் பேசினார். எனவே, `பாரதிய ஜனதாவில் சேரப்போகிறார்’ எனத் தகவல்கள் கிளம்பின.

இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் சேனலான `ஜெய்ஹிந்த்’ சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கக் களம் இறங்கியிருக்கிறார்.

`நீங்க பா.ஜ.க-வா, காங்கிரஸ் ஆளா?’ என அவரிடமே கேட்டோம்...

``எனக்கு எல்லாக் கட்சியிலயும் நண்பர்கள் இருக்காங்க. முதல்ல நான் பாரதிய ஜனதாவுல சேரப்போறேன்னு பேசினாங்க. இப்ப காங்கிரஸ்ல சேரப் போறேன்கிறாங்க. நான் என்ன சொல்றது? எனக்கு எல்லாக் கட்சியிலயும் நண்பர்கள் இருக்காங்க. எந்த விஷயம்னாலும் எனக்குன்னு ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கு. அதை வெளிப்படுத்த நான் தயங்கியதே இல்லை. என்னோட கருத்துக்கு முரண்பட்டுதான் இயங்கணும்னா அந்த வேலையை நான் செய்ய மாட்டேன், அவ்ளோதான். மத்தபடி பாலிடிக்ஸ்ல வருவேனா இல்லையாங்கிறதை இப்ப உறுதியாச் சொல்ல முடியாது' என்கிறார்.