`அந்த அம்மாவை வெளியேத்திட்டு, அவங்க போட்டோவ வச்சு ஓட்டு கேக்கறாங்க! - குமுறும் எதிரணி | bose venkat team speaks about tv union election

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:34 (25/01/2019)

`அந்த அம்மாவை வெளியேத்திட்டு, அவங்க போட்டோவ வச்சு ஓட்டு கேக்கறாங்க! - குமுறும் எதிரணி

சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சுமார் 1,600 பேர் வரை உறுப்பினர்களாக இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நாளை மறுதினம் (26.1.2019) சென்னையில் நடக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்குப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமியில் ஒரு அணி, போஸ் வெங்கட் தலைமையில் ஒரு அணி, நிரோஷா தலைமையில் ஒரு அணி, ரவி வர்மா தலைமையில் ஒரு அணி என மொத்தம் நான்கு அணிகள் களத்தில் உள்ளன.

நளினி

இவற்றில் நிரோஷா அணி சில நாள்களுக்கு முன் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது. அங்கு வைத்திருந்த விளம்பரப் போஸ்டரில் ஒரு பக்கத்தில் நிரோஷாவின் சகோதரரும் நடிகருமான ராதாரவியின் புகைப்படத்தையும் எதிர்புறத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவரான நடிகை நளினியின் புகைப்படத்தையும் போட்டு வாக்குச் சேகரித்தார்கள். இதைக் குறித்தே தற்போது புகாரை எழுப்பியுள்ளனர், எதிரணியினர். இதுகுறித்து புகார் கூறிய எதிரணியினரிடம் சிலரிடம் பேசினோம்.

``தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் தலைமையில் போட்டிபோட்டு ஜெயிச்சாங்களே, அந்த மாதிரி டிவி நடிகர் சங்கத்திலும் இளைய தலைமுறை பொறுப்புக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்தல்ல என்னென்ன தில்லுமுல்லு வேலைகளைச் செய்யக் காத்திருக்காங்கன்னு தெரியலை. இப்பவே அவங்க அந்த வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ஓர் உதாரணம், நளினி அம்மா போட்டோவைப் போட்டு ஓட்டுக் கேக்கறாங்க. வேடிக்கை என்னன்னா, இதே நளினி அம்மா தலைவரா இருந்தப்ப அவங்களை சங்கத்துல இருந்து வெளியேத்த முயற்சி செய்த சிலரே, இப்ப அந்த அணியில போட்டியிடுறாங்க. நாங்க ஒட்டுக் கேட்டுப் போனப்ப, 'என்னைக் கேக்காமலே என் பெயரைப் பயன்படுத்தறாங்க'ன்னு நளினி அம்மாவே புலம்பறாங்க’’ என்றார்கள்.