`வசந்த் குடும்பம் எங்க இருக்காங்கன்னே சங்கத்துல சிலருக்குத் தெரியல! - ரவி வர்மா | tv actor ravi varma shares about tamil television union election

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (25/01/2019)

கடைசி தொடர்பு:15:50 (25/01/2019)

`வசந்த் குடும்பம் எங்க இருக்காங்கன்னே சங்கத்துல சிலருக்குத் தெரியல! - ரவி வர்மா

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்துப் பேசுகிறார் ரவிவர்மா

சீரியல் நடிகர் நடிகைகளை உறுப்பினராகக் கொண்ட 'சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல், நாளை (26/1/19) சென்னையில் நடக்கிறது. சுமார் 1600 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்குப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ரவி வர்மா

தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையில் ஓர் அணி, நிரோஷா தலைமையில்  ஓர் அணி, ரவி வர்மா தலைமையில் ஓர் அணி, போஸ் வெங்கட் தலைமையில்  ஓர் அணி என மொத்தம் நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. 'வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களை முடித்த நாள் முதல், அணிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

ரவி வர்மா

தொடர்ந்து, சின்னத்திரை சங்கத் தேர்தலில் போட்டியிட்டுவரும் ரவி வர்மாவிடம் தேர்தல்குறித்துப் பேசினோம்.

''தேர்தலை மனசுல வச்சு மட்டுமே உறுப்பினர்களோட பேசுறவன் இல்ல நான். இது எல்லாருக்குமே தெரியும். உறுப்பினர்களுக்கு வேலை, அதாவது சீரியல் வாய்ப்பு வாங்கித் தர்ற விஷயத்துல, இன்னைக்கு பல மட்டங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கு. 'நாங்க அதுக்கான முயற்சிகளை எடுப்போம்'னு உறுப்பினர்களுக்குத் தெரிவிச்சிருக்கேன். அதனால எங்களை நம்பி ஓட்டுப் போடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.

வசந்த்

இன்னொரு விஷயத்தையும் பதிவுசெய்ய விரும்புறேன். டிவி நடிகர் சங்கம் உருவாக முழுமுதல் காரணம், வசந்த். அவர் இறந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துட்ட நிலையில அவரோட குடும்பத்தை சங்கம் கண்டுக்கவே இல்லைங்கிற ஒரு வருத்தம், அந்தக் குடும்பத்துக்கு இருக்கு. சங்கத்துல பொறுப்புல இருந்த சிலருக்கு வசந்த் குடும்பம் எங்க இருக்குனுகூடத் தெரியாது. இது, வருத்தப்படவேண்டிய விஷயம். நான் தனிப்பட்ட முறையில வசந்த் மகனுடன் தொடர்புலயே இருந்ததால, எங்களோட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு வசந்த் மனைவி சாரதாவும் மகனும் வந்து கலந்துகிட்டுப் பேசினாங்க. ரொம்ப நெகிழ்வா இருந்தது அந்தத் தருணம். வசந்த் ஆசி நிச்சயம் எங்களை ஜெயிக்கவைக்கும்'' என்கிறார் இவர்.

'ஆடுகளம்' நரேன், ஜெயந்த், ராஜ்காந்த், லக்ஷ்மி, டாக்டர் ஷர்மிளா, ஈஸ்வர், ஸ்வேதா பண்டேகர் உள்ளிட்ட 22 பேர் ரவி வர்மா அணியில் போட்டியிடுகின்றனர்.