Published:Updated:

“என் நிறமே என் அடையாளம்!”

சுருதி பெரியசாமி
பிரீமியம் ஸ்டோரி
சுருதி பெரியசாமி

வெற்றிப் பெண் சுருதி பெரியசாமி

“என் நிறமே என் அடையாளம்!”

வெற்றிப் பெண் சுருதி பெரியசாமி

Published:Updated:
சுருதி பெரியசாமி
பிரீமியம் ஸ்டோரி
சுருதி பெரியசாமி

“கலரா இல்லையேங்கிற ஏக்கம் சின்ன வயசுல ரொம்ப இருந்திருக்கு. ஆனா, அப்போ எதை என்னோட மைனஸ்னு நினைச்சேனோ, அதுதான் இப்போ ப்ளஸ்ஸா மாறியிருக்கு. எத்தனையோ அவமானங்களைக் கடந்து எனக்குக் கிடைச்ச இந்த அங்கீகாரம், மாநிற பொண்ணுங்களுக்கான வெளிச்சமா இருக்கும்'' - பெருமையாகப் பேசுகிறார் சுருதி பெரியசாமி. ‘பிக் பாஸ்’ பிரபலம், மாடல், தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை என பல அடையாளங்களைக் கொண்டவர். அவரின் வெற்றிப் பயணத்தை வாசிக்கும் பெண்களுக்கு வாழ்க்கையின் மீது நிச்சயம் காதல் பிறக்கும்.

``சொந்த ஊர் சேலம். நடுத்தர குடும்பம். என்னோட பதினோரு வயசுல அப்பா தவறிட்டார். பொருளாதார ரீதியா எந்த சப்போர்ட்டும் கிடையாது. அம்மாவும் அதிகம் படிக்கல.

அம்மாவுக்கு டெய்லரிங் தெரியும். வீட்ல இருந்த நகையை வித்து தையல் மெஷின் வாங்கி, டெய்லரிங் பண்ண ஆரம்பிச்சாங்க. ராப்பகலா தைப்பாங்க. அவங்களோட உழைப்புதான் என்னைப் படிக்கவெச்சது. அம்மாவை நல்லா பாத்துக்கணுங்கிற எண்ணம் அப்பவே மனசுல பதிஞ்சிருச்சு'' - அம்மாவின் மடி சாய்கிறார் ஆசை மகள். அம்மா மகேஷ்வரி தொடர்ந்தார்...

சுருதி பெரியசாமி
சுருதி பெரியசாமி

``சுருதி ரொம்ப பொறுப்பான பொண்ணு. ஸ்கூல்ல பேஸ்கட் பால் டீம்ல இருந்தா. நிறைய பரிசுகளைக் குவிச்சிருக்கா. அரசாங் கத்துலேருந்து மாசாமாசம் கிடைச்ச 600 ரூபாய் ஊக்கத் தொகையில நோட்டு வாங்குறது, நாப்கின் வாங்குறதுன்னு அவ செலவுகளை அவளே பார்த்துகிட்டா. ஸ்போர்ட்ஸ் பிரிவுல பாரத் யூனிவர்சிட்டியில பேச்சிலர்ஸ் இன் இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜில சீட் கிடைச்சுது. மூணு வருஷப் படிப்பை வெள்ளிப் பதக்கத்தோட முடிச்சதோட, எட்டு கம்பெனிகள்ல வேலைக் கும் செலக்ட் ஆகியிருந்தா. கோயம்புத்தூர்ல ஒரு பிரபல கம்பெனியில பயோ டெக்னா லஜிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்தா. என் வீட்டுக்காரர் இறந்தப்போ, ‘பொம்பளப் புள்ளைய வெச்சுக்கிட்டு என்னல்லாம் கஷ்டப்படப் போறியோ’ன்னு சொன்னவங்க முன்னாடி, என் மக கையைப் பிடிச்சுக்கிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன்'' - நெகிழ்ந்து உடைகிறார் மகேஷ்வரி. அம்மாவைத் தேற்றி விட்டுப் பேசுகிறார் சுருதி.

``கைநிறைய சம்பளம். ஆனாலும் எதையோ மிஸ் பண்ற ஃபீல் இருந்துச்சு. வேலையை விட்டுட்டு ஐ.ஏ.எஸ் எக்ஸாமுக்கு படிக்கப் போறேன்னு சென்னைக்கு வந்துட்டேன். ஃபிரெண்ட்ஸ் மூலமா மாடலிங் ஃபீல்டு அறிமுகமாச்சு. உயரமா இருக்கறதால சில நிகழ்ச்சிகள்ல ராம்ப் வாக் பண்ணக் கூப்பிட் டாங்க. அப்படி ஒரு நிகழ்ச்சியில ‘கறுப்பா இருக்கு, இதெல்லாம் மாடலா... இதையெல் லாம் மக்கள் ஏத்துப்பாங்களா’னு என் காதுபட பேசினாங்க. இந்த விமர்சனம் என்னைத் தொடர்ந்தது. ஆரம்பத்துல அழுதுருக்கேன். அப்புறம் என்னை நானே தேத்திக்கிட்டு மாடலிங்ல சாதிக்கணும்னு முடிவு பண்ணேன். சொந்தபந்தங்களோட விமர் சனங்களுக்கு பயந்து, அம்மா ‘நோ’ சொன்னாங்க. அம்மாவுக்குப் புரிய வெச்சு சம்மதிக்கவும் வெச்சேன்.

‘டார்க் டிவைன்’னு ஒரு போட்டோ ஷூட் வாய்ப்பு வந்துச்சு. அம்மன் தமிழர்களோட பாரம்பர்ய நிறத்துல இருந்தா எப்படி இருப்பாங்கன்னு பிரதிபலிப்பது தான் கான்செப்ட். அதுல நான்தான் அம்மன் ரோல் பண்ணியிருந்தேன். அந்த போட்டோக் கள் சோஷியல் மீடியாவுல வைரல் ஆகி, அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைச்சுது.

ஃபெமினா மிஸ் இந்தியா - தமிழ் நாடு - 2019 போட்டியில மூணாவது இடம் கிடைச்சது. மிஸ் திவா - 2020 போட்டியில தென் இந்தியா சார்பா கலந்துகிட்டு இந்தியாவை ரெப்ர சென்ட் பண்ணேன். டஸ்கி ஸ்கின் மாடலா பிரபலமாக ஆரம்பிச்சேன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மிகப்பெரிய அங்கீகாரமா அமைஞ்சது. எந்த நிறத்தை வெச்சு என்னை கேலி, கிண்டல் பண்ணாங்களோ, இப்போ அந்த நிறத்துக்காகவே எனக்கு வாய்ப்புகள் வருது. இப்போ ஒரு படத்துலயும் கமிட் ஆகியிருக்கேன். என் நிறம் இன்னிக்கு என் அடை யாளமா மாறியிருக்கிறதுல ரொம்பவே பெருமை”

- கம்பீரமாகச் சொல்கிறார் கறுப்பு நிறத்தழகி.