Published:Updated:

“நானும் இன்னொரு சித்ராவாக மாறிவிடக் கூடாது!” கண்கலங்கும் சீரியல் நடிகை ஜெனிஃபர்

நடிகை ஜெனிஃபர்
பிரீமியம் ஸ்டோரி
நடிகை ஜெனிஃபர்

மாதவரத்தில் பெட்ரோல் போடும்போது கார் கண்ணாடியை இறக்கி, அங்கிருந்த ஒருவரின் செல்போன் மூலம் நவீன்குமாரின் அம்மா பவானிக்கு விவரத்தைக் கூறி, கதறி அழுதேன்.

“நானும் இன்னொரு சித்ராவாக மாறிவிடக் கூடாது!” கண்கலங்கும் சீரியல் நடிகை ஜெனிஃபர்

மாதவரத்தில் பெட்ரோல் போடும்போது கார் கண்ணாடியை இறக்கி, அங்கிருந்த ஒருவரின் செல்போன் மூலம் நவீன்குமாரின் அம்மா பவானிக்கு விவரத்தைக் கூறி, கதறி அழுதேன்.

Published:Updated:
நடிகை ஜெனிஃபர்
பிரீமியம் ஸ்டோரி
நடிகை ஜெனிஃபர்
சீரியல் கதைகளைவிடவும் அதிகமாக நீண்டுகொண்டிருக்கின்றன சீரியல் நடிகைகளின் சோகக் கதைகள். அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் சீரியல் நடிகை ஜெனிஃபர். “என்னை நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்ததோடு, என் தங்கையையும் மானபங்கப்படுத்தியதற்கு நீதி வேண்டும்’’ என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவரிடம், ‘என்ன விவகாரம்?’ என்று பேசினோம்.
நடிகை ஜெனிஃபர்
நடிகை ஜெனிஃபர்

‘‘நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக சில சீரியல்களில் நடித்துவருகிறேன். நானும், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவரும் சரவணனும் 25.8.2010-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். கருத்து வேறுபாடு காரணமாக சரவணனைப் பிரிந்து வாழ்ந்துவருகிறேன். இந்தச் சமயத்தில், நான் நடிக்கும் சீரியலின் துணை இயக்குநரான நவீன்குமாரும் நானும் காதலித்தோம். சரவணனுடனான விவாகரத்து வழக்கு தீர்ப்புக்குப் பிறகு நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். திடீரென நவீன்குமாரை சீரியலிலிருந்து நீக்கிவிட்டனர். அவ்வப்போது செலவுக்குப் பணம் தேவை எனக் கூறி என்னிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய் வரை நவீன்குமார் வாங்கினார்.

மார்ச் மாதம் 22-ம் தேதி, புதுச்சேரிக்கு ஷூட்டிங்குக்கு நான் சென்றிருந்தேன். மார்ச் 25-ம் தேதி அங்கு வந்த நவீன்குமார், என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். அப்போது எனக்கும் நவீன்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், அவர் என்னுடைய கன்னம், கை மற்றும் பல இடங்களில் ஆழமாகக் கடித்துத் துன்புறுத்தினார். சென்னைக்கு வந்த பிறகும், என்னைப் பலருடன் இணைத்துச் சண்டை போட்டார். அதனால் அவரைவிட்டு விலக ஆரம்பித்தேன். 14.4.2021-ல் சென்னை போரூரில் ஷூட்டிங் நடந்தபோது அங்கு வந்த நவீன்குமார், என் கார் சாவியைப் பறித்துக்கொண்டார். என்னிடம் கெஞ்சி மன்னிப்புக் கேட்டவர், பிறகு என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி விடியற்காலை வரை அவரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கிண்டி, சென்ட்ரல், மாதவரம், வியாசர்பாடி, புரசைவாக்கம், மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சிங்கபெருமாள்கோயில், வண்டலூர் ஆகிய இடங்களுக்கு காரில் என்னை அழைத்துச் சென்றார். அப்போது என்னை நிர்வாணமாக காரின் முன் சீட்டில் உட்காரவைத்து அடித்துக் கொடுமைப்படுத்தினார். அதை வீடியோவாகவும் எடுத்தார். வழியில் என் செல்போனை உடைத்துவிட்டு, சிம்கார்டை வைத்துக்கொண்டார்.

“நானும் இன்னொரு சித்ராவாக மாறிவிடக் கூடாது!” கண்கலங்கும் சீரியல் நடிகை ஜெனிஃபர்

மாதவரத்தில் பெட்ரோல் போடும்போது கார் கண்ணாடியை இறக்கி, அங்கிருந்த ஒருவரின் செல்போன் மூலம் நவீன்குமாரின் அம்மா பவானிக்கு விவரத்தைக் கூறி, கதறி அழுதேன். அதன் பிறகே நவீன்குமார், என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நவீன்குமாரின் அம்மா பவானி, அரை குறை உடைகளுடன் இருந்த எனக்குத் தன்னுடைய உடைகளைக் கொடுத்தார். காரில் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக நவீன்குமார் மிரட்டினார்.

18.4.2021-ல் நான், அப்பா, அம்மா, தம்பி, தங்கை ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது நவீன்குமார், அவரின் அப்பா உதயகுமார், அம்மா பவானி, தம்பி பிரவீன்குமார் மற்றும் சிலர் சேர்ந்து காரை வழிமறித்தார்கள். பின்னர் எங்களை அவர்கள் தாக்கினார்கள். அப்போது என் தங்கையின் மேலாடையை நவீன்குமாரும், அவரின் தரப்பினரும் கிழித்து மானபங்கப்படுத்தி அரைநிர்வாணமாக் கினார்கள். அதைப் பார்த்த நான், என் தங்கையை அருகிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். பின்னர் காவல் உதவி எண் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தேன்.

மணலி இன்ஸ்பெக்டர் சிட்டிபாபுவும், போலீஸாரும் இந்தச் சம்பவம் தொடர்பாக என்னிடமும் என் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். நவீன்குமாரின் அப்பா உதயகுமார், சென்னை மாநகர போக்குவரத்துத்துறையில் அமைச்சுப்பணியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுவதால், அவர்களுக்குச் சாதகமாகவே இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு நடந்துகொள்கிறார். புகாரை வாபஸ் வாங்கவில்லையென்றால், விபசார வழக்கு பதிவுசெய்வதாக மிரட்டினார். உடனே உதவி கமிஷனர் நந்தகுமாரைச் சந்தித்து முறையிட்டேன். அதன் பிறகே நவீன்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது மணலி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்கள். அந்த வழக்கில் நவீன்குமாரையும், அவரின் நண்பர்களையும் போலீஸார் கைது செய்தார்கள். ஆனால் உதயகுமாரைக் கைதுசெய்யவில்லை. நவீன்குமாரால் பலவகையில் டார்ச்சர்களை அனுபவித்துவருகிறேன். கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள். பணம் தரவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று நவீன்குமார் மிரட்டினார். எனக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது; தற்கொலை எண்ணமெல்லாம் தோன்றுகிறது. நானும் நடிகை சித்ராவைப்போல் மாறிவிடக் கூடாது இல்லையா?!” என்றார்.

நவீன்குமாருடன்
நவீன்குமாருடன்

ஜாமீனில் வெளிவந்த நவீன்குமாரிடம் பேசியபோது, ‘‘புதுச்சேரிக்கு வரச்சொல்லி மிரட்டியதே ஜெனிஃபர்தான். என்னிடம் ஜெனிஃபர் 4.5 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார். காரில் அழைத்துச் சென்று ‘திருமணம் செய்துகொள்ளவில்லையென்றால் பொய் வழக்கு போடுவேன். வேண்டாமென்றால், 10 லட்சம் ரூபாய் கொடு’ என்று என்னை ஜெனிஃபர்தான் மிரட்டினார். இது குறித்து எங்கள் தரப்பில் நாங்களும் கமிஷனரிடம் விளக்க மனு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

இன்ஸ்பெக்டர் சிட்டிபாபுவிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``நடிகை ஜெனிஃபர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து நவீன்குமார், பிரவீன்குமார், கார்த்திக் ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். இந்த வழக்கில் நவீன்குமாரின் பெற்றோரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நியாயமான முறையில் விசாரணை நடந்துவரும் சூழலில் எதற்காக ஜெனிஃபர் என்மீது குற்றம் சாட்டினார் என்று தெரியவில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism