சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்?

வடிவேல்’ பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேல்’ பாலாஜி

சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் வடிவேல் பாலாஜி. ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணிட்டிருந்தவரை ரியாலிட்டி ஷோ பிரபலமாக்குச்சு.

42 வயதில் ‘வடிவேல்’ பாலாஜி மாரடைப்பால் இறந்த சோகம் இன்னும் சின்னத்திரை நட்சத்தி ரங்களை விட்டு அகல வில்லை. வடிவேல் பாலாஜி யின் அகால மரணம் ஒரு அதிர்ச்சி என்றால், ‘மருத்துவச் செலவைச் சமாளிக்க முடியாத நிலையிலா வடிவேல் பாலாஜி இருந்தார்?’ என்பது இன்னொரு அதிர்ச்சி யளிக்கும் கேள்வி. தொலைக் காட்சிகளில் முகம் காட்டிப் புகழ் சேர்த்த பிரபலங்கள் பொருளும் சேர்த்திருப்பார்கள் என்ற பிம்பம் உடைந்துபோனது.

‘இன்னைக்கு ரியாலிட்டி ஷோ கலைஞர்களோட வாழ்க்கை எப்படி இருக்குங்கிறதை, வடிவேல் பாலாஜி வாழ்ந்த வாழ்க்கையை வெச்சே சொல்லிடலாம்’ என்று சொல்லும் பழனி பட்டாளம், நகைச்சுவைத் திறமையை நம்பி ரியல் எஸ்டேட்டிலிருந்து டிவி பக்கம் வந்தவர்.

வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்?

“சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் வடிவேல் பாலாஜி. ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணிட்டி ருந்தவரை ரியாலிட்டி ஷோ பிரபலமாக்குச்சு. டிவிக்கு வந்ததும் இன்னும் திறமையை வளர்த்துக்கிட்டார். ஒரு கூட்டத்துக்குப் போனா, ஆன் தி ஸ்பாட் அங்க வந்திருக்கிற ஆடியன்ஸ்கிட்ட இருந்தே கன்டென்ட் எடுத்துத் தனியாளா ரெண்டு மணி நேரம்கூட சிரிக்க வைப்பார். எல்லாம் சரிதான். ஆனா பேரு கிடைச்ச அளவுக்குப் பணம் கிடைக்கலை.

‘கலக்கப் போவது யாரு’ புகழ், `அது இது எது’ புகழ்னு விசிட்டிங் கார்டு போட்டுக்கிட்டா, நாலு ஊர்களில் ஸ்டேஜ் ஷோவுக்குக் கூப்பிடுவாங்க, அங்க கிடைக்கிறதுதான் வருமானம். உடனே எத்தனை லட்சம்னு அவசரப்படாதீங்க. முழுசாக் கேட்டுட்டு முடிவுக்கு வாங்க’’ என்றவர் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்...

வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்?

‘`ஷோவுக்குக் கூப்பிடுறவங்ககிட்ட ‘கார் அனுப்பிடுங்க’ன்னு கேக்க சமயங்களில் எங்களுக்கே கூச்சமா இருக்கும். பஸ்ல போய் இறங்கறதை நம்ம கௌரவம் தடுக்கும். வேற வழியே இல்ல... லோன் போட்டு முதல்ல ஒரு கார். லோனுக்கு மூணு டியூதான் கட்டியிருப்போம். டிவியில எங்க ஷோவுடைய சீசனே முடிஞ் சிருக்கும். அடுத்த டியூ கட்ட றதுக்குப் பணத்தைத் தேட வேண்டிய நிலையில இருப்போம். இதுதாங்க எதார்த்தம். வடிவேல் பாலாஜி பரவால்ல, அவரளவுக்குப் பிரபல்யம் கிடைக்காதவங்க இங்க நிறைய இருக்காங்க. அவங்க நிலைமைல்லாம் ரொம்ப மோசம்.

வெளிநாடுகளுக்கு ஷோ போனாக்கூட என்ன கிடைக்கும்னு நினைக்கிறீங்க? வீட்டுக்கு ஆசையா ரெண்டு பொருள் வாங்கினா, சம்பளம்னு வாங்கினதுல பாதிக்கு மேல காலியாகிடும். ஏற்கெனவே இதுதான் நிலைங்கிறபோது கொரோனாவும் சேர்ந்துக்கிட, மிடில் கிளாஸ் மனநிலையில, யார்கிட்டயும் உதவி கேட்கவும் தயங்கியிருக்காங்க அவங்க வீட்டுல. ப்ச்... இப்போ இந்த நிலைமைல இருக்காங்க!’’ என்கிறார் பழனி.

அறந்தாங்கி நிஷாவிடம் பேசினேன்.

‘‘எனக்கு ஏழு மாசக் குழந்தை இருக்கு. பொறந்த அறுபதாவது நாளிலிருந்து அதை விட்டுட்டுத்தான் ஷோ பண்ணிட்டிருக்கேன். உள்ள வர்றது முக்கியமில்லை. ஆனா, இறங்கிட்டா கடைசி வரைக்கும் போராட்டம்தான். இதை மட்டுமே நம்பினோம்னா செத்தேபோயிடுவோம். போட்டியாளரா இருக்கிற வரைக்கும் அஞ்சு பைசா கிடைக்காதுங்கிறது மட்டுமல்ல, கைக்காசு செலவு பண்ண வேண்டியிருக்கும். கலர் கலர் லைட் வெளிச்சத்தைத் தேடி விட்டில் பூச்சிகளா வந்துட்டா வேற வழியே கிடையாது. நான் பரவால்ல. பெண்ணாப் பிறந்துட்டேன். என் புருஷன் கவர்மென்ட்ல வேலை பாக்குறார். டிவியில `போதும்’னு சொல்லிட்டாங்கன்னா வீட்டோட உட்கார்ந்துடுவேன். இதுல இருக்கிற ஆண்களோட நிலையை நினைச்சுப் பாருங்க. அவங்களை நம்பிக் குடும்பம் இருக்கும். சுருக்கமாச் சொல்லணும்னா, தினக்கூலிகளைவிட மோசமானது எங்க நிலைமை’’ என்றார் இவர்.

‘‘ஸ்கிரீன்ல எங்களுடைய பளபள காஸ்ட்யூம், மேக்கப்லாம் பார்த்து மக்கள் அவங்களா ஒரு முடிவுக்கு வந்திடுறாங்க. அதெல்லாம் சேனல் தர்றது. வடிவேலு சொல்ற மாதிரி உசுப்பேத்தி ரணகளப்படுத்தி விட்டுடுறாங்க. அதனால எங்களுக்குள்ளும் ஒரு போலியான இமேஜ் உருவாகிடுது. ஷோவுக்கு புக் பண்ண வர்றவங்க, ‘மதுரை முத்து வர்றார்’, ’அறந்தாங்கி நிஷா வர்றார்’னு வழியெங்கும் போஸ்டர் ஒட்டிடுறோம்’னு சொல்றப்பவே, ‘ச்சே, அப்படின்னா பஸ்ல போய் இறங்கினா நல்லாவா இருக்கும்’னு நினைச்சு லோன்ல கார் வாங்குவோம். அங்கே ஆரம்பிக்கும். அதேபோலத்தான் சில கலைஞர்களும். நல்ல நல்ல திறமைசாலிகள் பலர் ஒரே சீசனுடன் வாய்ப்பே கிடைக்காம அவதிப்பட்டுட்டே இருப்பாங்க. ’கோவை குணா’வை எல்லாருக்கும் தெரியும். இப்ப அவருடைய குடும்பம் எங்க எப்படி இருக்குன்னு யாருக்கும் தெரியாது. இப்படிச் சொல்லிட்டே போகலாம்ணே, கொடுமைகளை’’ என்கிற மதுரை முத்து, இன்னொன்றையும் சொன்னார், ‘‘கொரோனா காலத்துல கஷ்டப்படுற பத்துக் கலைஞர்களுக்கு அரிசி பருப்பு வாங்கித் தருவோம்னு நினைச்சேன். நான் செட்டில் ஆகிட்டேன்னு அர்த்தமில்லை. பகிர்ந்து சாப்பிடுவோம்னுதான். எங்கூட இருக்கிறவங்ககிட்ட இதுபத்திச் சொன்னப்ப மௌனமா இருந்தாங்க. விசாரிச்சா அவங்களே அந்த நிலையிலதான் இருந்திருக்காங்க. எவ்ளோ பெரிய சோகம் எனக்கு இது’’ என்றார்.

வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்?

வடிவேல் பாலாஜி மாரடைப்பால் இறந்தார். அதேநேரம், வேலையின்மை, நிதிச்சுமை போன்ற பிரச்னைகள் அவருக்கும் இருந்திருக்கிறது. ஆனால் இன்னொரு புறம், இந்த லாக்டௌன் தொடங்கியது முதல் இப்போது வரை சில கலைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

‘டான்ஸ் ஆடிட்டிருந்த பையன் சார்.

சினிமாவுல பெரிசா வாய்ப்பு கிடைக்காததால ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டிட்டிருந்தான். அங்கயும் பெரிசா காசு வரலைங்கிற விரக்தியில தற்கொலை செய்துகிட்டான்’

என்கிறார்கள். நடன ரியாலிட்டி ஷோக்களில் பிஸியாக இருந்த சிலர் தற்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டும், சிலர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தும் வருகிறார்களாம். சீரியல் கம் ரியாலிட்டி ஷோ இரண்டிலும் தலைகாட்டி வந்த ‘குக் வித் கோமாளி’ சாய் சக்தி ஒரு சமயத்தில் தற்கொலை முடிவு வரை சென்று வந்தவர். அவரிடம் பேசினேன்.

‘`சீரியலோ, ரியாலிட்டி ஷோவோ செலிபிரிட்டிங்கிற ஒரு பெயர் வாங்கித் தரும், அவ்ளோதான். புத்திசாலித்தனமா இருக்கிறவங்க அந்தப் பேரை வாழ்க்கைக்குப் பயன்படுற மாதிரி மாத்திக்கணும். லைம்லைட்டுல இருக்கிறப்ப வர்ற காசை வெச்சு நிலையான ஒரு பிசினஸ் தொடங்கலாம். கொஞ்சத்தைச் சேர்த்து வைக்கலாம். இப்படி ஏதாச்சும் செஞ்சாத்தான் தப்பிக்க முடியும். எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சு, இப்பத்தான் ஒருவழியா தெளிவுக்கு வந்திருக்கேன்’’ என்கிறார்.

வடிவேல் பாலாஜி குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக நட்புபாராட்டி வந்தவர்கள் ரோபோ சங்கர் குடும்பத்தினர். ரோபோ சங்கரின் மனைவி பிரியாவிடம் பேசினேன்.

``எனக்குமே `பிரச்னை ஏதும் இருந்துச்சான்னு கேக்காம விட்டுட் டோமே’ங்கிற குற்ற உணர்ச்சி இருக்கு. விலை கொடுக்க முடியாத அளவுக்கு நடந்திடுச்சு. இனி அதுக்கு என்ன காரணம்னு அலசிட்டி ருக்கறதுல பலனில்லை. ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. அந்தப் பசங்களுடைய எதிர்காலத்துக்கு ஏதாவது செய்யணும்னு யோசிச்சிட்டிருக்கோம்!’’ என்கிறார் குரல் கம்ம.

நீர்க்குமிழிகளைப் போலத்தான் வெளியில் இருந்து பார்க்கும்போது மட்டும் பிரமாண்டமாக இருக்கிறது இந்தப் பிரபலங்களின் வாழ்க்கை.

வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்?

சிவகார்த்திகேயன் முதல் ராமர், ரமணியம்மாள் வரை!

’ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுக்கிறவர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியாகவே இருப்பதாக பொத்தாம் பொதுவாக மதிப்பிடுவது சரியல்ல’ என்கிற குரல்களும் டிவி ஏரியாவில் கேட்கின்றன.

’ரியாலிட்டி ஷோங்கிறது நிரந்தரமா வேலை தர்ற இடம் கிடையாது. திறமைகளை வெளிப்படுத்த ஒரு பிளாட்பாரம். இங்க கிடைக்கிற வாய்ப்புகளை வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கிடறது அவங்கவங்க கையிலதான் இருக்கு. சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர்... இவங்க கூட ரியாலிட்டி ஷோக்கள் மூலமாத்தான் மக்களுக்கு அறிமுகமானாங்க. எங்கோ ஒரு கிராமத்துல அரசு வேலையில இருந்த ராமர் அந்த வேலையிலேயே இருந்திருந்தா, அவருடைய திறமைகள் வெளி வராமலேயே போயிருக்கும். ஏன் வீட்டு வேலை பார்த்திட்டிருந்த அறுபது வயசு ரமணியம்மாள், ரியாலிட்டி ஷோவுல வந்த பிறகு அவங்க வாழ்க்கையே மாறிடுச்சே’ என்கிற குரல்களையும் நாம் ஒதுக்கிவிட முடியாது!