சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரேயா

இறைவன் மிகப் பெரியவன். நடந்தது, நடக்குறது எல்லாம் அவனுக்குத் தெரியும். கடந்துபோன விஷயங்கள் குறித்து நாங்க இந்த நேரத்துல பேச விரும்பவில்லை

முனீஸ் ராஜா - பிரியா நாச்சியார்
முனீஸ் ராஜா - பிரியா நாச்சியார்

‘`உங்களைப் பிடிச்சிருக்கு, நாம கல்யாணம் செய்துக்கலாம்னு அந்தப் புள்ள முதன்முதலாச் சொன்ன போது நான் ஏத்துக்கலை. `ஜாதியும் மதமும் குறுக்க வந்து நிக்கும்னு எனக்குத் தெரியும். இந்தப் பேச்சே வேண்டாம்'னு போன் நம்பரை பிளாக் செய்துட்டேன். ஒரு வருஷத்துக்கும் மேல தொடர்பில்லாம இருந்தோம். ஆனா ‘எது நடக்கணுமோ, அது நல்லாவே நடக்கும்'னு இருக்கே! அதான் இன்னைக்கு தம்பதியா உங்க முன்னாடி நிக்குறோம்' - தலை தீபாவளிக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த‌ முனீஸ் ராஜா உற்சாகத்துடன் பேச, அவரைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தார், அவர் மனைவியும் நடிகர் ராஜ்கிரணின் மகளுமான பிரியா நாச்சியார்.

‘‘ஃபேஸ்புக் மூலமா எனக்கு அறிமுகமானாங்க பிரியா. எங்க அம்மாவைப் போல, என்மீது பாசம் காட்டினாங்க. ஆனா வெளிப்படையா என் விருப்பத்தைச் சொல்ல முடியாதபடி ஒரு தயக்கம் இருந்துச்சு. வேறென்ன, ஜாதியும் மதமும்தான் பிரச்னை. அதனால அவங்க மனசுல ஆசைய வளர்க்க வேண்டாம்னு தவிர்க்கத் தொடங்கினேன். அவங்க வீட்டுலயுமே இப்படி நடக்கணும்னுதான் எதிர்பார்த்திருக்காங்க. அதனால பிரியாகிட்டயும் என்னப் பத்தி என்னென்னவோ சொல்ல, அதால சில மாதங்கள் நாங்க பேசிக்காமலே இருந்தோம்.

திரும்ப ஒரு நல்ல நாள்ல எதேச்சையா எங்களுக்குள் பேச்சு தொடங்குச்சு. நீண்ட இடைவெளிக்குப் பிறகும் நான் வேணும்னு நினைக்கிற பிரியாவாகவே அவங்க இருக்க, அதுக்குப் பிறகுதான் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன். எங்க வீட்ல எனக்கு ஆதரவா இருந்தாங்க. ஆனாலும் பிரியா தரப்புல சுமுக முடிவுக்கு ஒத்துழைப்பு இல்லாததாலதான் களேபரத்துக்கு நடுவுல கல்யாணம் நடக்கற மாதிரி ஆகிடுச்சு'' - கலகலவெனச் சிரித்தார்.

‘நடிகர் ராஜ்கிரண் உங்களைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தாரே, உங்க மனைவியையும் தன் மகளே இல்லை என்றாரே, சமாதானம் ஆகி விட்டாரா' எனக் கேட்டோம்.

முனிஸ் தன் மனைவியைப் பார்க்க, குறுக்கிட்ட பிரியா, ‘‘இறைவன் மிகப் பெரியவன். நடந்தது, நடக்குறது எல்லாம் அவனுக்குத் தெரியும். கடந்துபோன விஷயங்கள் குறித்து நாங்க இந்த நேரத்துல பேச விரும்பவில்லை'’ எனச் சொல்ல, தம்பதிக்குத் தலை தீபாவளி வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

****

விகடன் TV: ரிமோட் பட்டன்

தீபாவளி முதலான பண்டிகை நேரங்களில் சீரியல் நடிகைகள் ப‌லருக்கும் விளம்பரப் படங்களில் நடிக்க‌ வாய்ப்புகள் வருவது வழக்கம்தான். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு ‘ரஜினி’ சீரியல் ஸ்ரேயாவுக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தனவாம். ஆனால் தொடர்ச்சியான சீரியல் ஷூட்டிங் காரணமாக அவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். லேசான வருத்தத்தில் இருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்னத்திரை வட்டாரத்தில் ரொம்பவும் அர்ப்பணிப்பாக இருக்கும் சிலரில் ‘வள்ளி' சீரியல் நடிகை வித்யா வினுவும் ஒருவர். நேரந்தவறாமையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் இவர் ஒரு விஷயத்தில் மட்டும் கறாராக இருந்துவிடுகிறாராம். அதாவது ‘கழுத்தில் அணிந்திருக்கும் தாலி தெரியக் கூடாது; அதனால் அதைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள்' எனச் சொல்லப்பட்டால் யோசிக்காமல் அந்த சீரியலே வேண்டாமெனச் சொல்லி விடுகிறாராம்.

விரைவில் ஒளிபரப்பாக பிளாக் ஷீப் யூ டியூப் குழுமத்தின் புதிய‌ தொலைக்காட்சி சேனலை விளம்பரப்படுத்த நடிகர் வடிவேலுவைத் தூதராக கமிட் செய்திருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சேலை கட்டச் சொல்லித் தரும் ஒர்க் ஷாப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி தரத் தொடங்கி யிருக்கிறார் தொகுப்பாளர் தட்சு என்கிற தாட்ஷாயினி.

****

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

பெரிய வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு வந்தது அந்த ‘ஊர்’க்காருக்கு. ‘போகலாமா’, ‘வேண்டாமா’, ‘போனா அது பொழப்புக்கு உதவுமா’, ‘இல்லாட்டி, இருக்கிற பெயரையும் ரிப்பேர் ஆக்கிவிடுமா’ இப்படி ஏகப்பட்ட கேள்விகளைத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருந்தவருக்கு முக்கியமான ஒரு சந்தேகமும் வந்தது. தலைக்கு விக் வைத்திருப்பதை அந்த வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்கள் பொதுவெளியில் பேசிவிடுவார்களா என்பதுதான் அந்த சந்தேகம். முன்பு கலந்துகொண்ட சிலரிடம் பேசியிருக்கிறார். அவர்கள் ‘‘ஆமாண்ணே, அதுக்கு வாய்ப்பு இருக்கு’’ எனச் சொல்லிவிட, அதன்பிறகே ‘ஆளை விடுங்க சாமிகளா’ என எஸ்கேப் ஆனாராம்.