Published:Updated:

விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

சனம் ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சனம் ஷெட்டி

சனம் தொடங்கி வைத்த சர்ச்சை

விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

சனம் தொடங்கி வைத்த சர்ச்சை

Published:Updated:
சனம் ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சனம் ஷெட்டி
‘விவான்ட் சனம் ஷெட்டி’ எனத் தெருவில் இறங்கி கோஷமிடாதது ஒன்றுதான் பாக்கி, மற்றபடி போராட்டங்களின் டிஜிட்டல் கிரவுண்டான சமூக வலைதளங்களில் கொதித்துவிட்டார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.
விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

‘ஷோவிலிருந்து சனம் வெளியேற்றப்பட்டது முற்றிலும் போங்காட்டம்’ என்றுதான் இந்த எதிர்ப்பு. ரசிகர்கள் மட்டுமல்லாது செலிபிரிட்டிகளுமே சனத்துக்கு ஆதரவு கொடுத்து பிக் பாஸ் எதிர்ப்பை டிரெண்ட் ஆக்கினார்கள். ‘இது ஒரு கேம் ஷோதான். ஆனா உள்ளே போகிற போட்டியாளர்கள்தான் கேம் ஆடணுமே தவிர சேனல் ஆடக் கூடாது’ என்பதே எதிர்ப்பாளர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்தது.

முந்தைய வாரம் சம்யுக்தா எவிக்‌ஷனும் நியாயமாக நடக்கவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், இந்த எவிக்‌ஷன் புராசஸ் குறித்து பிக் பாஸ் முதல் சீசனில் பணிபுரிந்த சிலரிடம் பேசினோம்.

விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

‘‘ஷோவுக்குப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கிற போதே சில விஷயங்கள் முடிவாகிடுது. சேனல் ஒரு வரையறை வெச்சு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறதுதான் பொதுவான நடைமுறை. ஆனா போகப் போக ரெகமண்டேஷன்ங்கிற விஷயம் உள்ளே வந்திடுச்சு. ஷோ தர்ற பாப்புலாரிட்டியால, ‘யாரைப் பிடிச்சா ஷோவுக்குள் போகலாம்’னு முயற்சி செய்ற சிலர், அந்த முயற்சியில ஜெயிச்சதெல்லாம் நடந்திருக்கு. முந்தைய ஒரு சீசன்ல முதல்ல நிராகரிக்கப்பட்ட ஒரு போட்டியாளர் எப்படியோ ஒரு வழியில ஷோவுக்குள் வந்ததுடன் மட்டுமல்லாம, பைனல் வரைக்கும் வந்தாங்க. இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்கறதுதான் ஷோ பத்தி எதிர்மறையான பேச்சு எழக் காரணமாகிடுது’’ என்கிறார்கள் இவர்கள்.

விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

‘‘அந்த வீட்டுக்குள்ள எல்லாருக்கும் சமமான முக்கியத்துவம்தான் தரப்படுதுன்னு நமக்கு நம்பிக்கை வரணும். எனக்கு அந்த நம்பிக்கை வரலை. ஒரு சிலர் செய்ற சில விஷயங்கள்ல உடன்பாடு இல்லாம அதைப் பத்திக் கேள்வி கேக்கலாம்னு நினைக்கிறப்ப, `இவர் சேனலுக்கு வேண்டிய ஆளா இருப்பாரோ? இதைக் கேள்வி கேட்டா நம்மை உடனே வெளியில் அனுப்பிடுவாங்களோ?’ன்னு தோணிடுச்சுன்னா, அந்த இடத்துல நம்ம இயல்புல இருந்து விலகி போலியாத்தானே இருக்க வேண்டியிருக்கு’’ என்கிறார் சமீபத்தில் எவிக்‌ஷனில் வெளியேறிய அந்தப் போட்டியாளர்.

‘‘சேனல் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே ஷோவுக்குள் வருகிறார்கள் போட்டியாளர்கள். அதேநேரம் ஷோவுக்குள் வந்த பிறகு அனைத்துப் போட்டியாளர்களையும் சமமாக நடத்த வேண்டியது சேனலின் பொறுப்பு. போட்டியாளர்கள் இயல்பாக இருக்கிறார்களோ அல்லது நடிக்கிறார்களோ... சேனலானது அவர்களுக்கு இடம் கொடுத்து ஆட்டத்தை நடுநிலையில் இருந்துதான் நடத்த வேண்டும். ‘இது நம்ம ஆளு; இது நம்ம ஆளு இல்ல’ என சேனல் நினைக்கக் கூடாது. ஆனால் இந்த நான்காவது சீசன் மட்டுமல்ல, முந்தைய சீசன்களிலுமே கூட சேனல் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. சேனலின் இந்த ஒருதலைப்பட்சமான அணுகுமுறைதான் சனத்துக்கு ஆதரவாக அத்தனை பேரையும் குரல் எழுப்ப வைக்கிறது’’ என்பது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் குற்றச்சாட்டு.

விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

‘‘ஆரம்பத்துல இருந்தே இது ஸ்கிரிப்ட்ங்கிற ஒரு கருத்து இருக்கு. ஸ்கிரிப்டாவே இருக்கட்டும். அதன்படி நல்ல கன்டென்ட் தர்றவங்க தொடர்ந்து ஷோவுல இருக்கணும்தானே? அப்படி இல்லைங்கிறதுதான் இப்ப பிரச்னை. கன்டென்ட் தர்றவங்களாவே இருந்தாலும் அவங்க சேனலுக்குத் தொடர்புடையவங்களா இல்லாட்டி ஷோவுல நீடிக்க முடியாதுன்னு தெரியுது. அதேநேரம் சேனலுக்கு வேண்டியவங்க சும்மா உட்கார்ந்திட்டிருந்தாலும் எவிக்‌ஷன் ஆகாம தொடர்ந்து இருந்திட்டிருக்காங்க. இதுல ஓட்டெடுப்புன்னு இன்னொரு ஆட்டம் வேற. இப்படியே போயிட்டிருந்தா ‘இவங்களுக்குத்தான் டைட்டில்னு முன்கூட்டியே தீர்மானிச்சி டுறாங்க’ன்னுதானே சொல்ல வேண்டியிருக்கு. அப்படித் தீர்மானிக்கப்பட்டா தினமும் உட்கார்ந்து பார்த்திட்டிருக்கிற ரசிகர்கள் ஏமாளியா?’’ என்கிறார், தினமும் பிக் பாஸைத் தவறவிடாத ரசிகர் ஒருவர்.

விகடன் TV: பிக்பாஸ் வெளியேற்றம் நியாயம்தானா?

சம்யுக்தாவிடம் ‘‘உங்களது எவிக்‌ஷனில் சேனல் நியாயமாக நடந்துகொண்டதா’’ எனக் கேட்டதற்கு, ‘போட்டியாளர்களைப் பொறுத்தவரைக்கும் அந்த வீட்டுக்கு வெளியில் நடக்கிறது பத்தி எதுவுமே தெரியாது. நானும் அப்படித்தான் இருந்தேன். அதனால எவிக்‌ஷன் பத்தி என்னால எந்தக் கருத்தையும் சொல்ல முடியலை’’ என முடித்துக் கொண்டார்.

சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் இந்த எவிக்‌ஷன் குற்றச்சாட்டுகள் குறித்து சேனல் தரப்பின் கருத்தை அறியத் தொடர்பு கொண்டோம். ஆனால் அணுகிக் கருத்தைப் பெற முடியவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகள் சேனலுக்கு மட்டுமல்ல, பிக்பாஸின் முகமான கமல்ஹாசனுக்கும் கெட்ட பெயர்தான். ஊழல் முறைகேடுகளை விமர்சித்து, அதை நிகழ்ச்சியிலும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கும் கமல், நிகழ்ச்சிக்குள்ளேயே நடக்கும் இந்த விஷயங்களை அனுமதிக்கிறாரா, ‘தப்பு நடந்தா தட்டிக்கேட்பேன்’ என்பது வெறும் விளம்பரம்தானா என்ற கேள்வி எழத்தானே செய்யும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism