Published:Updated:

அப்பாவாக அம்மா; அம்மாவாகக் கணவர்! - புது மனுஷியாய் சுடர்விடும் தீபா

தீபா
பிரீமியம் ஸ்டோரி
தீபா

வாழ்க்கையில யாரையும் எதுக்காகவும் உருவகேலி செய்யாதீங் கய்யா.

அப்பாவாக அம்மா; அம்மாவாகக் கணவர்! - புது மனுஷியாய் சுடர்விடும் தீபா

வாழ்க்கையில யாரையும் எதுக்காகவும் உருவகேலி செய்யாதீங் கய்யா.

Published:Updated:
தீபா
பிரீமியம் ஸ்டோரி
தீபா

வெகுளியான பேச்சு, களங்கமற்ற சிரிப்பு, யதார்த்தமான நடிப்பால் கைத்தட்டல்களைக் குவிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ தீபா, சின்னத்திரையின் நம்பிக்கை முகம். நிறப்பாகுபாட்டால் ஏராளமான புறக்கணிப்புகளை எதிர்கொண்டு, பொறுமை யுடன் எதிர்நீச்சல் அடித்திருப்பவரின் தற்போதைய வளர்ச்சி, பலருக்கும் தன்னம் பிக்கைப் பாதை. எல்லா வலிகளையும் கடந்து, புது மனுஷியாகச் சுடர்விடும் தீபாவின் பேச்சில் சந்தோஷம், சிரிப்பு, தன்னம்பிக்கை...

“ஸ்கூல் லைஃப்தான் நான் மறக்க நினைக்கிற காலகட்டம். எங்க ஊர் திருவிழாக்கள்ல கரகாட்டக்காரங்களைக் கைதட்டி ஊக்கப் படுத்துவாக. ‘டான்ஸ் ஆடினா கைத்தட்டல் கிடைக்கும்போல’ன்னு மனசுல பதிவாகிடுச்சு. படிப்பைவிடவும் டான்ஸ்லதான் நாட்டம் அதிகரிச்சது. கறுப்பா இருந்ததாலயே, ‘நீயெல்லாம் முன்னாடி நின்னு ஆடக் கூடாது’ன்னு ஸ்கூல் நிகழ்ச்சிகள்ல காயப் படுத்தினாங்க. பாராட்டு, கைதட்டலுக்கு ஏங்கித் தவிச்சேன். தனிமைப்படுத்தப்பட்டு, தன்னம்பிக்கையை இழந்து நிறைய அவமானங்களைச் சந்திச்சேன். இதெல்லாம் நடிக்க வந்த பிறகும்கூட எனக்குத் தொடர்ந்தது தான் பெரும் சோகம். ஸ்கூல் படிப்பைக்கூட முழுசா முடிக்காம சென்னையில டான்ஸ் கத்துக்கிட்டேன்.

அப்பாவாக அம்மா; 
அம்மாவாகக் கணவர்! - 
புது மனுஷியாய் சுடர்விடும் தீபா

சின்னத்திரை, சினிமானு கிடைச்ச சின்ன ரோல்கள்லயெல்லாம் நடிச்சேன். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு என்னோட வாழ்க்கை ரொம்பவே பாசிட்டிவ்வா மாறிடுச்சு. எதிர்பார்ப்புகளெல்லாம் படிப்படியா பூர்த்தியாகிட்டு இருக்கு. தூத்துக்குடி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவ நான். எங்களுக்கு அடையாளமே எங்க ஊர் ஸ்லாங்தான். வீட்டுல பேசுறது போலவே, வெளிநிகழ்ச்சிக்குப் போனாலும் எந்த வித்தியாசமும் கூச்சமும் பார்க்காம என்னோட சனத்தோட பேசுறதா நினைச்சு யதார்த்தமா பேசுவேன். அதேபோலத்தான் நடிக்கவும் செய்யுறேன். அது, ‘நம்மல்ல ஒருத்தி’ங்கிற உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்குது போல. எல்லோரும் என் பேச்சைக் கைதட்டி ரசிக்கிறாக. என்னோட நடிப்பையும் பாராட்டுறாக. இப்ப கிடைக்கிற ஊக்க மெல்லாம் என்னைத் திக்குமுக்காட வைக்குது”

- ஏறும் மேடைகளிலெல்லாம் தனது இயல்பான உடல்மொழியால் பெரிதாக ஸ்கோர் செய்யும் தீபாவின் உள்ளத்தைச் சாந்தப்படுத்துகிறது ஆனந்தக் கண்ணீர்.

திரையில் பிரகாசிக்கும் தீபாவுக்கு அவரின் அம்மாவும் கணவருமே தூண்டுகோலாக இருந்துள்ளனர். அது குறித்துப் பேசுபவர், “நடிக்கிற தொழிலையெல்லாம் எங்க குடும்பத் துல ஏத்துக்கிட மாட்டாக. சென்னையில டான்ஸ் கத்துக்கிட்ட காலத்துல, வீட்டுக்குத் தெரியாம ‘மெட்டி ஒலி’ சீரியல் ஆடிஷன்ல செலக்ட் ஆனேன். இந்த விஷயத்தை வீட்டுல சொன்னதும் அப்பா பெல்ட்டுல அடிச்ச அடியில ரெண்டு நாள்கள் படுக்கை யிலயே இருந்தேன். ‘பொட்டப் புள்ள வெளி யுலகத்தைத் தெரிஞ்சுகிட்டா என்ன? அவ நடிச்சு சாதிக் கட்டுமே’ன்னு எங்கம்மாதான் எனக்குச் சம்மதம் வாங்கிக் கொடுத்தாக. அம்மாவோட ஸ்தானத்துல இப்ப வரைக்கும் என்னை ஊக்கப்படுத்துறது வூட்டுக்காரர்தான்.

ஆரம்பத்துல நடிப்புத் தொழில்ல எனக்குச் சொற்ப வருமானம்தான் கிடைக்கும். ஆனாலும், உனக்குப் பிடிச்சதைச் செய்னுதான் அவர் ஊக்கப்படுத்தினார். நான் ஷூட்டிங் போயிட்டா, சமைக்கிறது, குழந்தைகளைக் கவனிச்சுக்கிறதுனு எல்லா வேலைகளையும் கூச்சம் பார்க்காம இப்பவும் செய்யுறார்.

சின்ன வயசுல ஸ்கூல், வீடு தவிர எதையுமே நான் பார்த்ததில்ல. வெளி யுலகத்துடன் அதிகம் கலக்காமலேயே வளர்ந்துட் டேன். அதனால, அந்தந்த வயசுக்கே உரிய பக்குவம் எனக்கு இல்லாம போச்சு. குழந்தைத்தனமாவும் விளையாட்டுத்தனமாவும் இருக்கிறதுதான் என்னோட குணமே. வயசுக்கு ஏத்த பொறுப்போடு இருக்க என்னை வழிநடத்துறது

என் வூட்டுக்காரர்தான். ஒதட்டளவுல அவரை மாமான்னு கூப்பிட்டாலும், மனசளவுல அவர் மேல எனக்குத் தாய்மை உணர்வுதான் இருக்கு”

- கணவர் மீதான அன்பில் நெகிழ்ந்து பேசும் தீபா, பல ஆண்டு களாக நடன வகுப்புகளை நடத்தி வருவதுடன், ஏழைக் குழந்தை களுக்குக் கட்டணமின்றி சேவை நோக்கத்துடனும் பயிற்றுவிக்கிறார்.

“கோபம், கஷ்டம்னு வருத்தமான நேரத்துலயெல்லாம் வயிறு நிறைய சாப்பிடுவேன். இல்லைனா, டான்ஸ் ஆடுவேன். இது ரெண்டும்தான் என்னை உற்சாகப்படுத்தும். இப்போ வெயிட் போட்டுட்டதால அடிக்கடி டான்ஸ் ஆட முடியல. ஆனா, கிளாஸ் எடுக்கிறப்போ மட்டும் டான்ஸ் சொல்லிக்கொடுப்பேன். சீரியல், சினிமா வாய்ப்புகளுக்கு நடுவே, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலயும், ‘குக் வித் கோமாளி’ முதல் சீசன்லயும் என்னைக் கூப்பிட்டாக. என்னால போக முடியல.

‘குக் வித் கோமாளி’ ரெண்டாவது சீசன்ல கலந்துகிட்டு, தெரிஞ்சதை வெச்சு ஓரளவுக்குத்தான் சமைச்சேன். ஆனா, பலரோட அன்பை நிறைவா சம்பாதிச்சேன். திரை மறைவுல என்னை ஊக்கப்படுத்துற வூட்டுக் காரரை, இப்போ ‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில தெரியப் படுத்துறதுல பெருமையா இருக்கு.

‘உங்களுக்கு என்ன தேவைனாலும் என்கிட்ட தயங்காம கேளுங்கக்கா’ன்னு அன்போடு சொன்னார் நடிகர் சூர்யா சார். ‘உங்களைப் பார்த்ததும் கையெடுத்துக் குடும்பிடத் தோணுதுக்கா. நீங்க நிறைய சாதிக்கணும்’னு வாஞ்சையா பேசினார் சமுத்திரக்கனி சார்.

அப்பாவாக அம்மா; 
அம்மாவாகக் கணவர்! - 
புது மனுஷியாய் சுடர்விடும் தீபா

இப்படி என்னைவிட வயசுல பெரியவங்க பலரும் ‘அக்கா’ன்னு உள்ளத்துல இருந்து கூப்பிடுறாக. என்னோட வளர்ச்சிக்கு ஏணியா இருந்தவக பலருக்கும் எப்படி நன்றிக்கடன் செலுத்தப்போறேன்னு தெரியல. மக்களைச் சிரிக்க வைக்கிறதுதான் என் நோக்கம். நகைச்சுவை ரோல்கள்ல அதிகம் நடிக்க ஆசைப்படுறேன். வடிவேலு சார் உட்பட நகைச்சுவை நடிகர் களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.”

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ஜோதிகா – சசிகுமார் நடிக்கும் படம் உட்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தீபா.

“எனக்கான அடையாளம் கிடைக்க 18 வருஷங்கள் ஆகியிருக்கு. இப்போ கிடைக்கிற அங்கீகாரத்தால, வயிறு முட்ட சாப்பிட உணவு கிடைச்சுடுச்சு. என்னோட எல்லா ஏக்கமும் தீர்ந்துடுச்சு. வாழ்க்கையில யாரையும் எதுக்காகவும் உருவகேலி செய்யாதீங்கய்யா. அந்த வலியால தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டா, அதுல இருந்து மீள்றது ரொம்பவே கஷ்டம்”

- எல்லோருக்குமான மெசேஜ் சொல்லி முடிக்கும் தீபாவின் முகமும் உள்ளமும் பாசிட்டிவிட்டியால் ஜொலிக்கிறது.