
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இனி அடிக்கடி தன் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச நினைத்திருக்கிறாராம்.
இயக்குநர் திருமுருகன் மீண்டும் பெரிய திரைக்கு வரவிருக்கிறார். சேனல் ஏரியாவில் நிகழும் மாற்றங்கள் அவரிடமும் மாற்றத்தைக் கொண்டு வந்திருப் பதாகத் தெரிகிறது.

`அடுத்தும் சீரியல்தான்’ என்றிருந்தவர், அந்த முடிவை மாற்றிக்கொண்டு படம் இயக்குவது குறித்துப் பேசி வருகிறாராம். கதை, ஆர்ட்டிஸ் டுகள் எல்லாம் அடுத்த சில மாதங்களில் உறுதியானதும் ஷூட்டிங் கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.

ஆங்கர் ஐஸ்வர்யாவை நினை விருக்கிறதா... கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டிலானாரே, அவரேதான். சென்னையிலிருந்தபோது வீட்டில் பூனைக்குட்டி ஒன்று வளர்த்தார். கோடையில் அந்தப் பூனைக்கென்றே தனியாக ஏசி அறையை ஒதுக்கிவிடுவார். இப்போது அமெரிக்காவிலும் பூனைக்குட்டி ஒன்று வளர்த்து வருகிறாராம், அந்தப் பூனைக்குட்டியின் பெயர் என்ன தெரியுமா? வெள்ளை வடிவேலு. ஐஸ்வர்யா, வடிவேலுவின் நகைச்சுவைக்கு ரசிகை என்பதால் இந்தப் பெயராம்.

சின்னத்திரையில் ஆரம்பத்தில் இயக்குநராக வலம் வந்த கவிதா பாரதி ஜீ தமிழ் சேனலுக்காக சீரியல் தயாரிப்பில் இறங்கி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘சித்திரம் பேசுதடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாம். ஒளிபரப்பு தொடங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறதாம்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் டைட்டில் வென்ற முகேன் ஹீரோவாக நடிக்கிற படத்தில் பாடல் ஒன்றைப் பாடும் வாய்ப்பு பி.பா 4-வது சீசனில் கலந்து கொண்ட வேல்முருகனுக்குக் கிடைத்துள்ளது. வேல் முருகன் பாடல் என்றால், நடனம்? வேறு யார், தினேஷ் மாஸ்டர்தானாம்.

இன்ஸ்டாகிராமில் ரச்சிதாவைப் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டுவிட்டது. காதலர் தினத்தன்று அதைக் கொண்டாடிய ரச்சிதா, ‘இவங்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப்போறேன்’ என ரொம்பவே உருகி விட்டார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இனி அடிக்கடி தன் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேச நினைத்திருக்கிறாராம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!
முன்னாள் தொகுப்பாளினி அவர். நினைத்தால், தென் தமிழகத்தின் எல்லையில் இருக்கும் அந்த மலையடிவாரத்துக்குச் சென்றுவிடுகிறாராம். ஒரு வாரம் அல்லது பத்து நாள் அங்கிருந்தால் தொலைபேசியில்கூட அவரை அந்த நாள்களில் தொடர்புகொள்ள முடியாது. தொலைத்தொடர்பு உள்ளிட்ட வசதிகளுக்கு அங்கு அனுமதி இல்லை என்கிறார்கள். மண்குளியல் முதலான இயற்கை சார்ந்த வாழ்க்கைக்காகவும் மன அமைதிக்காகவுமே அங்கு செல்வதாகச் சொல்கிறார்கள் அவரின் நெருக்கமான நட்பு வட்டத்தினர். சிலரோ, ‘‘அது ஒரு ஆசிரமம். அங்கு ஒரு சாமியார் இருக்கிறார், அவரின் சீடராகவே அங்கு செல்கிறார்’’ என்கிறார்கள். எது நிஜம் என்பது தொகுப்பாளினிக்கே வெளிச்சம்.
மதிய நேரம் ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியல் இரு மாதங்களுக்கு முன் திடீரென இரவு பத்து மணிக்கு மாற்றப்பட்டதும், ரேட்டிங் கொஞ்சம் அடிவாங்கியது. தொடர்ந்து பத்தரை மணிக்கு மாற்றினார்கள். இன்னும் அடி. தயாரிப்பாளர் சேனலிடம் சண்டைக்கே போய்விட்டாராம். சமாதானப் படுத்தும் விதமாக இப்போது அதே சீரியலின் மறு ஒளிபரப்பை மதிய நேரம் ஒளிபரப்பிவருகிறார்கள்.