Published:Updated:

விகடன் TV: மறுபடியும் வந்துட்டோம்!

உங்க கேரக்டர் இப்படி இருக்கணும், இதைச் செய்யணும், இதப் பண்ணக் கூடாது’ன்னு தெளிவாச் சொல்லிக் கொடுத்தார்.

பிரீமியம் ஸ்டோரி
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தெய்வ மகள்’ மற்றும் ‘நாயகி’ சீரியல்கள் மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. (திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு மணி 7–8 தெய்வமகள், 8-9 நாயகி)

இதன்மூலம் தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கலைஞர் தொலைக்காட்சியும் தமிழ் மக்களின் அபிமான விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கிருஷ்ணா, வாணி போஜன், நடித்த ‘தெய்வ மகள்’, சிறந்த நெடுந்தொடருக்கான தமிழக அரசின் விருது, விகடன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சீரியல் என்பது நினைவிருக்கலாம்.

விகடன் TV: மறுபடியும் வந்துட்டோம்!
விகடன் TV: மறுபடியும் வந்துட்டோம்!

‘திரும்ப வந்துட்டோம்னு சொல்லுங்க’ என்றபடி இந்த இரு சீரியல்களும் மறு ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிற சூழலில், ‘தெய்வ மகள்’ அண்ணியார் ரேகா குமாரிடம் பேசினேன்.

‘‘நான் ’தெய்வ மக’ளுக்கு முன்னாடியே ஒரு சீரியல்ல தமிழ்ல நடிச்சிருந்தாலும் தமிழ் மக்களுக்கு என்னை அடையாளம் காட்டியது இந்த சீரியல்தான். மலையாள சீரியல் ஒண்ணுல என்னைப் பார்த்துட்டு பெங்களூர்ல என் வீட்டுக்கே வந்து ஆடிஷன் பண்ணினாங்க. ‘தமிழ் சரியா வராது’ங்கிற ஒரு பிரச்னைதான் எனக்கு அப்ப இருந்தது. அதைத் தாண்டி செலக்ட் ஆகிட்டேன்.

விகடன் TV: மறுபடியும் வந்துட்டோம்!

முதல் நாள் ஷூட்டிங்லயே டைரக்டர் குமரன் சார், ‘உங்க கேரக்டர் இப்படி இருக்கணும், இதைச் செய்யணும், இதப் பண்ணக் கூடாது’ன்னு தெளிவாச் சொல்லிக் கொடுத்தார். அந்த நாள்லயே அவருடைய ரசிகையா கிட்டேன் நான். அதோட விளைவு, சீரியல்ல நெகட்டிவ் ரோல் பண்ணின எனக்கு தமிழ்நாட்டுல நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்க.

பொதுவா எனக்கு நெகட்டிவ் ரோல் பண்றதுன்னா ரொம்பவே இஷ்டம். என்னைப் பொறுத்தவரைக்கும் சீரியல்ல ஸ்கோர் செய்யணும்னா வில்லியா இருந்தாதான் முடியும்னு நினைக்கிறேன். அதனால சண்டை போடறது, கத்தறது மாதிரியான காட்சிகள்ல என்ஜாய் பண்ணிதான் நடிச்சேன். சொல்லப்போனா, சத்தமாப் பேசற காட்சிகள்ல நானே டெசிபலை ஏத்தியெல்லாம் நடிச்சிருக்கேன்.

விகடன் TV: மறுபடியும் வந்துட்டோம்!

ஷூட்டிங் ஸ்பாட் எக்ஸ்பீரியன்ஸும் என்னைக்குமே மறக்க முடியாததுதான். கிருஷ்ணாவையே ஜாலியா ராக்கிங்லாம் பண்ணியிருக்கேன். `ஹீரோயினைப் பார்க்கறதைவிட நீங்க என்னைப் பார்க்கறதுதான் அதிகமா இருக்கே’ன்னு சொல்வேன்.

அதேபோல அண்ணியார் கேரக்டருடைய ரீச் வேற லெவல். கன்னடத்துல அண்ணியை ’அத்திஹே’ன்னுதான் சொல்வாங்க. ஆனா இந்த சீரியல் பார்த்துட்டு பெங்களூருலயே ‘அண்ணியார்’னு என்னைக் கூப்பிட்டவங்க அதிகம். தமிழ்நாட்டுல வயசு வித்தியாசமில்லாம எல்லாருக்குமே இன்னைக்கும் நான் அண்ணியார்தான். என்னைவிட வயசுல பெரியவங்களா இருக்கிற வங்களும் அப்படிக் கூப்பிடறப்பத்தான் கொஞ்சம் வெட்கமா இருக்கும். ‘தெய்வ மகள்’ சீரியல் என் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம்’’ என்றார் ரேகா.

‘தெய்வ மகள்’ மற்றும் ‘நாயகி’ என இரு சீரியல்களிலுமே நடித்த கிருஷ்ணாவிடம் பேசினேன்.

விகடன் TV: மறுபடியும் வந்துட்டோம்!

‘‘ரீ டெலிகாஸ்டுக்கு வாழ்த்துச் சொல்லி நிறைய நண்பர்கள் பேசினாங்க. என்னுடைய சினிமா மற்றும் சீரியல் கரியர்லயே ‘தெய்வ மகள்’ தந்த பேரும் புகழும்தான் டாப். விகடன் தயாரிப்புல இதுவரை மூணு சீரியல்கள்ல லீட் ரோல் பண்ணிட்டேன். அதுல என்னுடைய ஃபேவரைட் ‘தெய்வ மகள்’. ‘இதுக்கு முன்ன நடிச்ச மாதிரி இல்லாம, கொஞ்சம் வெரைட்டி காமிச்சா இந்தக் கேரக்டர் பயங்கர சக்சஸ் ஆகும்’னு குமரன் சார் சொன்னார். அவர் சொல்படி நடிச்சேன். அவர் சொன்னதும் நடந்தது.

இதுல வேடிக்கை என்னன்னா, முதன்முதலா இந்த சீரியலுக்கு என்னை நெகட்டிவ் ரோலுக்குத்தான் கேட்டாங்க. ஒருவேளை அது ஒர்க் அவுட் ஆகியிருந்தா அண்ணியாரும் நானும் கூட்டாளியா இருந்து அதகளம் பண்ணியிருப்போமோ என்னமோ’’ எனச் சிரித்தவர் தொடர்ந்தார்...

`` ‘நாயகி’ சீரியலுக்குள் நான் வந்த நேரம் எல்லாருக்குமே சவாலான காலகட்டம். கோவிட் தொற்றுக்குப் பிறகான சீரியல்களின் ஷூட்டிங் ஸ்பாட் சூழலே வித்தியாசமானதா இருந்தது. எச்சரிக்கை உணர்வு, பயம், பதற்றத்துக்கு நடுவுலயும் கதையையும் வித்தியாசமான களத்துக்கு நகர்த்தி விறுவிறுப்பாக் கொண்டு போனார் டைரக்டர்.

‘தெய்வ மகள்’ சீரியல்ல வேகமாப் பேசறது, பாடி லாங்க்வேஜ்ல வித்தியாசம் காட்டறதுன்னு ஒரு முரடனா இருந்துட்டு அதுக்கு நேரெதிரா சாஃப்ட் கேரக்டரா இருந்தது `நாயகி’ல நான் பண்ணுன ரோல்.

இப்ப நான் நடிச்ச ரெண்டு சீரியல்களுமே ஒரே சமயத்துல ரீ டெலிகாஸ்ட் ஆகறதை நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் கிருஷ்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு