Published:Updated:

சிலைகள் மாயமான வழக்கில் எழுத்தர் ராஜா வீட்டுக்கு சீல் - மனைவி மற்றும் பாட்டி தற்கொலை முயற்சி!

சிலைகள் மாயமான வழக்கில் எழுத்தர் ராஜா வீட்டுக்கு சீல் - மனைவி மற்றும் பாட்டி தற்கொலை முயற்சி!
சிலைகள் மாயமான வழக்கில் எழுத்தர் ராஜா வீட்டுக்கு சீல் - மனைவி மற்றும் பாட்டி தற்கொலை முயற்சி!

பந்தநல்லுார் சிலைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்டு ஜாமீனில் வெளியே வந்த  தலைமை எழுத்தர் ராஜா என்பவர் வீட்டுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜாவின் மனைவி மற்றும் பாட்டி விஷம் குடித்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில்,``நான் அறநிலையத்துறை அதிகாரிகளைக் காட்டிக் கொடுத்துவிடுவேன் என்கிற பயத்தில் என் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்” என ராஜா குற்றம் சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் அருகே  உள்ள பந்தநல்லூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட  1,000 ஆண்டுகள் பழைமையான கோயில். பந்தநல்லுாரைச் சுற்றியுள்ள 73 கிராமங்களில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களிலிருந்து பழைமையான, ஐம்பொன் சிலைகள், வெங்கலச் சிலைகள் அவற்றின்  பாதுகாப்புக் கருதி அந்தந்த கோயில்களிலிருந்து பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து வைத்தனர். இந்த சிலைகளை 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் கணக்கு எடுத்தனர். இதில் பாதுகாப்பாக வைக்கபட்டு இருந்த சிலைகளில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வாணை, சந்திரசேகர அம்மன்  சிலைகளும் ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோவிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை சரக இணை ஆணையராக இருந்த கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர்கள் காமராஜ், ராமச்சந்திரன், கோவில் தலைமை எழுத்தர் ராஜா உள்ளிட்ட 10 பேரை போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில்  வெளியே வந்தனர். இந்நிலையில் நேற்று கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, திருவிடைமருதுார் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸார் கொண்ட குழுவினர் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயில் கோட்டை தெருவில் குடியிருக்கும் ராஜாவின் வீட்டுக்குச் சென்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் இடத்தில் குடியிருக்கும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வீடு சீல் வைக்கப்படும் என உதவி ஆணையர் தெரிவித்தார். அதற்கு ராஜா கால அவகாசம் கேட்க அதற்கு அறநிலையத்துறையினர் மறுத்ததுடன், 

உடனடியாக வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இதனால் வீட்டுக்கு வெளியே வந்த ராஜா மனைவி அபினேஸ்வரி, பாட்டி சந்திரா ஆகிய இருவரும் வீட்டின் தோட்டத்தில் வைத்திருந்த வாழை மரங்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து ராஜா கூறுகையில், ``பந்தநல்லுார் கோயில் கோட்டையைச் சுற்றி ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம். இந்நிலையில், நான் சிலை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். இந்த வழக்கு வரும் 11-ம் தேதி கும்பகோணத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் நான் அறநிலையத்துறை அதிகாரிகளைக் காட்டிக் கொடுத்துவிடுவேன் எனப் பயந்துபோய் என்னுடைய வீட்டுக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வீட்டை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டும் கொடுக்கவில்லை. எங்களுடைய அனைத்துப் பொருள்களும் வீட்டின் உள்ளேயே உள்ளது. தற்போது நான், பாட்டி, மனைவி, மகன், மகளை வைத்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறேன்” என்றார்.