Published:Updated:

"லாபத்தை மக்கள் சேவைக்காக செலவு செய்த ஆதிதமிழர்கள்" -புதுக்கோட்டை கல்வெட்டில் தகவல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"லாபத்தை மக்கள் சேவைக்காக செலவு செய்த ஆதிதமிழர்கள்" -புதுக்கோட்டை கல்வெட்டில் தகவல்!
"லாபத்தை மக்கள் சேவைக்காக செலவு செய்த ஆதிதமிழர்கள்" -புதுக்கோட்டை கல்வெட்டில் தகவல்!

"லாபத்தை மக்கள் சேவைக்காக செலவு செய்த ஆதிதமிழர்கள்" -புதுக்கோட்டை கல்வெட்டில் தகவல்!

ஆதிதமிழர்கள் தங்கள் வணிக லாபத்தின் ஒரு பகுதியை மக்கள் சேவைக்காகச் செலவு செய்திருப்பது, புதுக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. அக்கல்வெட்டில், கிபி 11ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கூட்டுறவு வணிகம் செய்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், செல்லக்குடியில் பழைமையான கல்வெட்டுகள் இருப்பதாக, எல்லைப்பட்டி அரசு பள்ளி மாணவர் பூவரசன் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கன் ஆகியோர், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் மற்றும் ராஜேந்திரன், முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய தொல்லியல் ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்து அடி உயரமுள்ள ஒரு கல்வெட்டில் அதன் நான்கு பக்கமும் மொத்தம் 83 வரிகள் எழுதப்பட்டிருந்தன. கல்வெட்டுச் சான்றுகள், அரிவாள், குத்துவிளக்குகள் ஆகியவை கோட்டோவியமாக வரையப்பட்டிருந்தன. கல்வெட்டில் காலங்கள் குறிப்பிடப்படவில்லை. அதன், நான்காவது பகுதி சிதைந்த நிலையில் உள்ளபோதிலும் இறுதி வரிகள் தெளிவாக உள்ளன.

ராஜேந்திர சோழன் வலங்கை தலைமையின் சிறப்பு பெயரான 'பழியலி கள்ளிடைக்கொடி தலை' இருப்பதாலும், முதலாம் ராஜேந்திர சோழன் பெயர் மற்றும் மெய்க்கீர்த்தி அடிப்படையிலும் இக்கல்வெட்டு கிபி 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது. மேலும், இக்கல்வெட்டில் “திசைவிளங்கு திசையாயிரத்து ஐஞ்நூற்றுவர்” எனும் கூட்டு வணிகக் குழு இருந்ததும், இக்குழுவில் வீரர்கள், வணிகர்கள், விவசாயிகள், கணக்காளர்கள், கீழ்நிலை பணியாளர்கள் என ஏராளமான பிரிவுகள் கொண்டு இயங்கியதும் தெரியவந்துள்ளது. 18 துறைமுக நகரங்கள், 2ம் நிலை வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய பாதுகாப்பான 32 நகரங்கள், பொருட்களை சேமித்து வைப்பதற்கான பெரிய கிடங்குகள் அந்த வணிகக் குழுவில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

இதில், “பதினெண் கொடி வீரக்கொடியார்” எனும் பிரிவாக விளங்கிய வீரர்கள், பாதுகாப்புப் பணியோடு குழுவின் மிக உயர்ந்த பிரிவாகவும், அரசர்களுக்கு இணையாக  உரிமை உள்ளவர்களாகவும் விளங்கி இருக்கிறார்கள். பாதுகாப்பு வீரர்கள், வணிகர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் ஆகியோர் இணைந்து நம்பகத்தன்மையுடன், பொருள்பெற்று லாபத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் சேவைக்காகச் செலவு செய்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

" 'குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி வலக்கை வல்லபர் செல்விக்குடிக்கு' என்பது இக்கல்வெட்டின் இறுதி வரியாக உள்ளது. இதன்மூலம் இந்தக் கூட்டு வணிகக் குழுவானது, செல்லகுடிக்கு நற்பணிகள் செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய உலக வரலாற்றில் கூட்டுறவு வணிகத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டாலும்,

தெற்காசியாவைப் பொறுத்தவரை தென்னிந்திய வணிகர்களில், இந்தக் கூட்டு வணிகக் குழுவினர் நிர்வாக அமைப்புகளுடன் நிதியை முறையாகப் பகிர்ந்து கொள்வது குறித்த வரையறை கொண்டிருந்துள்ளனர். மேலும், சூழலுக்கு ஏற்றவாறு அரசர்களுடன் உறவை ஏற்படுத்தி செயல்படும் நுட்ப அரசியலைக் கொண்டிருந்தார்கள்" என்கிறார்கள் ஆய்வுக் குழுவினர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகி  மணிகண்டன், “இதுவரை தென்னிந்திய வணிகர் குழுக்களின் கல்வெட்டுகள் தமிழகத்தில் 118, கர்நாடகாவில் 132, ஆந்திராவில் 35, மகராஷ்டிராவில் 2, கேரளத்தில் 8 எண்ணிக்கையிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து, மியான்மர் ஆகியவற்றில் நான்கும், இலங்கையில் 15 எண்ணிக்கையிலும் என 314 வணிகக் குழுக்களின் கல்வெட்டுகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மன்னருக்கு இணையான உரிமைகளுடன் மதிப்புமிக்கவர்களாக வணிகர்களும், அவர்தம் பதினெண் கொடி வீரக்கொடியாரும் கருதப்பட்டனர். குறிப்பாக சோழர்களின் காலத்தில் இத்தகைய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். எனவே, பெரும்பாலும் பக்கத்து நாடுகளுக்கு தூதுவர்களாக வணிகக்குழுவைச் சேர்ந்தவர்களையே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

தெற்காசியாவை பொறுத்தவரையில் தென்னிந்திய வணிகர்களான ஐந்நூற்றுவரே தனக்கான முறையான நிர்வாகக் கட்டமைப்புகளுடனும், நிதி வருவாயை தமக்குள் முறையாகப் பகிர்ந்து கொள்வது குறித்த வரையறை கொண்டிருந்ததோடு, சூழலுக்கு ஏற்றவாறு மன்னர்களுடன் உறவை ஏற்படுத்திச் செயல்படுபவர்களாக இருந்துள்ளனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு