Published:Updated:

ராஜராஜ சோழன் சதய விழாவில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு!

ராஜராஜ சோழன் சதய விழாவில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு!
ராஜராஜ சோழன் சதய விழாவில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு!

தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜ சோழன் சதய விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கோயிலுக்குள் சிலைகளை ஆய்வு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் தஞ்சையில் எழுப்பிய பெரிய கோயில் உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது. யுனஸ்கோவால் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமே வியக்கும் வகையில் ஆட்சி மற்றும் கட்டடக்கலையில் சிறந்து விளங்கிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு தஞ்சாவூர் பெரிய கோயில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 1033-வது சதய விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் அண்ணாத்துரை மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து வருவதோடு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

இந்தச் சூழ்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தொல்லியல் துறை நிபுணர்களுடன் கோயிலுக்கு வந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புராதன சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் கடந்த வாரத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இப்போது விழா நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் சிலைகளை ஆய்வு செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, ``கோயிலில் இருந்த 41 புராதன சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆய்வு செய்தோம். இன்றும் தொல்லியல் துறை நிபுணர்களுடன் ஆய்வு செய்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு புராதன சிலைகளை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே அமைப்பில் வேறு சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதா என தெரியவரும்" என்றனர்.