Published:Updated:

`உற்சவத்தின்போது வெளியே கொண்டு செல்வதற்குக் கூட உற்சவர் சிலை இல்லை!’- காஞ்சிபுரம் பக்தர்கள் வருத்தம்

`உற்சவத்தின்போது வெளியே கொண்டு செல்வதற்குக் கூட உற்சவர் சிலை இல்லை!’- காஞ்சிபுரம் பக்தர்கள் வருத்தம்
`உற்சவத்தின்போது வெளியே கொண்டு செல்வதற்குக் கூட உற்சவர் சிலை இல்லை!’- காஞ்சிபுரம் பக்தர்கள் வருத்தம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள உற்சவர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 25ம்தேதி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் தற்போது புதிய உற்சவர் சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் இல்லாத நிலையில், மீண்டும் தொன்மையான சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட உற்சவர் சிலைகளில் தங்கம் கலக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்து அறநிலையத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிலை தொடர்பான வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 25ம்தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கும்பகோணம் எடுத்துச்சென்று நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் சிலைகள் அளவீடு செய்யப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கோயிலில் இதற்கு முன்பாக பயன்படுத்தி வந்த தொன்மையான சிலைகளை பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் “திருவிழா போன்ற விஷேஷ நாட்களில் உற்சவத்தின் போது வெளியே கொண்டு செல்வதற்கு கோயிலில் உற்சவர் சிலை இல்லை. இதனால் திருவிழாக்கள் பழைய உற்சாகத்துடன் நடைபெறுமா என்ற அச்சம் பக்தர்களிடையே நிலவுகிறது. இதற்கு முன்பு பயன்படுத்திய உற்சவர் சிலைகள் இந்த கோயிலில்தான் இருக்கின்றன. அதில், பீடத்தில் உள்ள சிறிய குறைபாட்டை சரிசெய்து பயன்படுத்த முடியும். பொங்கல் விழாவின் போது ஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவம் கோலாகலமாக நடக்கும். அதற்குள் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீண்டும் பழைய சிலைகளை வழிபாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.