Published:Updated:

திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்
திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்

திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்

பிரீமியம் ஸ்டோரி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என்ற சர்ச்சை அடங்குவதற்குள், அங்கு இரட்டைத் திருமாளிகையைச் சீரமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார், பக்தர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டைத் திருமாளிகை உள்ளது. கல்வெட்டுகள், கலைநயம்மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டை திருமாளிகையில் காணப்படுகின்றன. இந்த மாளிகையைச் சீரமைக்க 2014-ல் தமிழக அரசு ரூ.79.90 லட்சம் ஒதுக்கியது. மாளிகையின் கீழ்ப்பகுதியைச் சீரமைக்க ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள்கூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, காஞ்சிபுரம் சிவபக்தர் டில்லிபாபு என்பவர் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், ‘அறநிலையத் துறைத் திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்யவேண்டும்’ என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்

டில்லிபாபுவிடம் பேசினோம். “கோயிலின் உள்பகுதியில் இருக்கும் இரட்டைத் திருமாளிகை சிதிலம் அடைந்ததாகக் காரணம் காட்டி, அதைப் புனரமைப்பதற்காகத் தமிழக அரசு சார்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. கோயில் திருப்பணி குறித்துச் சரியான திட்ட அறிக்கை இல்லை. இதனால், பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசிடமிருந்து மூன்று முறை நிதியைப் பெற்றுத் திருப்பணியைச் செய்துவருகிறார்கள். தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்கிய பிறகும், கோயில் தரப்பில் தனியாக மக்களிடமிருந்து நன்கொடை பெறுகிறார்கள். ‘வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்கள் ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கி உதவவேண்டும். பணம் கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர், டி.டி., செக் போன்ற வழிகளில் பணம் கொடுக்கலாம்’ என ஆன்லைனில் விளம்பரம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து, ‘அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார்கள்... விளம்பரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது’ போன்ற விவரங்களைச் செயல் அலுவலர் முருகேசனிடம் கேட்டோம். ‘விளம்பரப்படுத்தவோ, நன்கொடை பெறவோ உத்தரவு வழங்கப்படவில்லை. அரசுப் பணத்தில்தான் நாங்கள் திருப்பணி செய்கிறோம். கோயிலில் இருக்கும் கேமராக்கள், பணிக்கு இடையூறாக இருந்ததால் எடுத்தோம்’ என அவர் பதில் அளித்தார்.

திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்

இதுவரை கிட்டத்தட்ட 150 புதிய கல்தூண்களை வைத்தார்கள். ஆனால் அகற்றப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் அடங்கிய கலைநயம் மிக்க பழைய தூண்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியவில்லை. அவை கோயிலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு சில தூண்களே கோயிலில் இருக்கின்றன. மற்ற தூண்களை வெளியில் எடுத்துச்சென்றுவிட்டதாக இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். அதுபோல், மதில் சுவரில் கல்வெட்டுகள் அடங்கிய கற்களையும் காணவில்லை. இந்தத் திருப்பணிக்கு தலைமை ஸ்தபதியின் அறிக்கையைக்கூட, கோயில் நிர்வாகத்தினர் பெறவில்லை. திருப்பணி ஆணையரின் அனுமதியும் பெறப்படவில்லை. தகவல் ஆணையரிடம் சென்றுதான் திட்ட அறிக்கையைப் பெற்றோம். அதில் பல இடங்களில் திருத்தங்கள் செய்யப் பட்டிருந்தன. இங்கு நடைபெறும் முறைகேடுகள் குறித்துக் காவல்துறை மற்றும் இந்து அறநிலையத் துறையிடம் பல முறைப் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான், நீதிமன்றம் சென்றோம்” என்றார்.

திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்

இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பேசினோம். “திட்ட அறிக்கையைப் பெறவேண்டும் என்று 2017-ல்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆணையர் அலுவலகத்தில் நிர்வாகரீதியாக வேலை மட்டும்தான் எங்களுடையது. மேற்சொன்ன குற்றச்சாட்டுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அந்தந்த கோயிலுக்கென உள்ள செயல் அலுவலர்களிடம்தான் கோயில் பொறுப்பு உள்ளது. தேவையில்லாமல் எங்கள் பெயரை இணைத்து வழக்குப் போடவைத்து மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர்” என்கிறார் விரக்தியாக.

ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசனிடம் பேசினோம். ‘‘கோயில் தரப்பில் எல்லாக் கணக்கு வழக்குகளும் சரியாக இருக்கின்றன. கோயில் பெயரைச் சொல்லி யாராவது வசூல் செய்திருப்பதாக ஆதாரத்துடன் சொன்னால் நாங்களே வழக்குப் பதியத் தயாராக இருக்கிறோம். திருப்பணிக்கு அரசுப் பணத்தைத் தவிர வேறு பணத்தைச் செலவு செய்யவில்லை. எல்லாத் தூண்களும் சரியாக இருக்கின்றன. உடைந்த தூண்களையும் தனியாக எடுத்து வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் தூண்களை எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். நீதிமன்றத்தில் எங்கள் துறையிடம் கருத்து கேட்காமல் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பணியைச் செய்கிறேன். நடப்பதை ஏகாம்பரநாதர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்” என்றார் ஆதங்கத்துடன்.

கடவுள் சிலைகளே அல்லவா காணாமல் போகின்றன!

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு