Published:Updated:

கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா? - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்!

கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா? - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்!
கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா? - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்!

சினிமாக்களில்தான் கோயில் விழாக்களில் கோஷ்டி பூசலில் பிரசாதம், அன்னதான உணவுகளில் விஷம் கலப்பது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். உண்மையிலேயே கர்நாடகாவில் அதேபோன்ற உண்மைச் சம்பவம் நடந்து நெஞ்சைப் பதற வைத்துள்ளது. 

சாம்ராஜ் நகர் மாவட்டம்,  ஹனூர் அருகே சுல்லிவாடி என்ற கிராமத்தில் உள்ள  கிச்சுக்குத்தி மாரம்மா கோயில் பிரசித்தி பெற்றது, கோயிலில் கோபுரம் கட்டும் பணி நிறைவடைந்திருந்த நிலையில், மேலே கலசம் அமைக்கும் பணிக்காக நேற்று கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூடியிருந்தனர். இதையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகளும் அன்னதானத்துக்காக தக்காளிசாதம் போன்றவை தயார் செய்யப்பட்டிருந்தன. இந்தச் சமயத்தில், தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் கோயிலுக்குச் செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் மாரம்மா கோயிலை கடந்து சென்றுள்ளனர். 

பக்தர்களைப் பார்த்த கோயில் பூசாரி, `மாரம்மாவை தரிசித்து விட்டுச் செல்லுங்கள்' என்று அவர்களை அன்புடன் அழைத்துள்ளார். பூசாரியின் அழைப்பை ஏற்றப் பக்தர்கள் கோயிலில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாரம்மாவை வழிபட்டனர். தொடர்ந்து, கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் அதைச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கினர். உடனடியாக  காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ராமபுரா, கமெகெரே, கொள்ளேகால், மைசூரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரசாதத்தைச் சாப்பிட்ட 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தைச் சாப்பிட்ட 50 காக்கைகள் உட்பட 300 பறவைகள் துடி துடித்து உயிரிழந்தன. கோயில் வளாகத்தைச் சுற்றி பறவைகள் இறந்து கிடந்ததை கண்ட மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். 

முதல்கட்ட விசாரணையில் கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கோபால் கூறுகையில், `` கோயிலை நிர்வகிப்பதில் இரு பிரிவினருக்கிடையே தகராறு இருந்துள்ளது. அதன் காரணமாக எதிர் பிரிவினர் பிரசாதத்தில் விஷம் கலந்துள்ளனர். அதைச் சாப்பிட்ட சிறுவன் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்'' என்று கூறியுள்ளார். 

சாம்ராஜ் நகர் போலீஸ எஸ்.பி தர்மேந்திர குமார் மீனா சுல்லிவாடி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பி, மதேஷ் என்கிற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடத்தில்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமி  தகவல் கிடைத்ததும் உடனடியாக மைசூர் விரைந்து அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.