Published:Updated:

`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி!’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு

பிரசாதத்தில் மோனோக்ரோடோபோஸ் (monocrotophos) மற்றும் ஆர்கனோபாஸ்பேட் (organophosphate) என்ற இரு ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவை விளைநிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்தில் கலக்கப்படுபவை. மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி!’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு
`ஆண்டுக்கு 3 கோடி வருமானம்; தொழில் போட்டி!’ - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு

க்தர்களுக்கு வழங்கிய பிரசாதத்தில் விஷம் வைத்து 15 பேர் பலியான விவகாரத்தில், மாதேஸ்வரன் மலை இளைய மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். `ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வருமானத்தை மாரம்மா கோயில் தந்துகொண்டிருக்கிறது. தொழில் போட்டியின் காரணமாகவே பிரசாதத்தில் விஷம் வைத்துள்ளதை அறிகிறோம். தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில். 

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழக எல்லையின் அருகில் உள்ளது ஆனூர் தாலுகா. இங்குள்ள சுள்ளுவாடி கிராமத்தில் உள்ளது கிச்சுகிச்சு மாரம்மா கோயில். மாதேஸ்வரன் மலையில் உள்ள ஸ்ரீமாதேஸ்வராசாமியின் தங்கை என்ற சொல்லப்படும் இந்த மாரம்மா கோயில், மாதேஸ்வர மலை உள்ளிட்ட 14 மலைகளையும் அதிலுள்ள கோடிக்கணக்கான சொத்துகளையும் நிர்வகிக்கும் சாலூர் மடத்துக்குச் சொந்தம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், `தமிழகத்தில் உள்ள சித்தேஸ்வர சுவாமியை வழிபடும் தேவர்மலை மடத்துக்கும் சொந்தமானது' என்றும் சர்ச்சை நிலவி வந்தது. இதனால் இரு மடங்களுக்கும் இடையில் போட்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த இரண்டு மடங்களின் தலையீடு இல்லாமல் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் மூலம் கோயில் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. தவிர, கடந்த சில நாள்களாக மாரம்மா கோயிலின் முன்பாக ராஜகோபுரம் கட்டும் பணிகளும் நடந்தன. 

கடந்த சனிக்கிழமை அன்று கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று, ராஜக் கோபுர கலசங்கள்  நிறுவப்பட்டன. இதற்காக, வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே மாரம்மாவுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை அன்று காலையில் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீரூற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர்,  பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தக்காளி சாதம், தேங்காய், பழம், பஞ்சாமிர்தம் ஆகியவை வழங்கப்பட்டன. அன்று மதியம் இந்தப் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

இதைக் கண்டு அதிச்சி அடைந்த சக பக்தர்கள், உடனே ராமாபுரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்தனர் போலீஸார். அதற்குள் பிதிராள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாந்தராஜ் (30), கோபி (35), பாப்பையா (70), அன்னையா (65), அணித் (12) ஆகியோர் உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 95 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் ஆம்புலன்ஸ் உதவியோடு மீட்டு காமேகரே, கொள்ளேகால், மைசூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்களில் தற்போது வரையில் ஒன்பது பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டனர். 

மேலும் 26 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ் அரஸ் அரசு மருத்துவமனை, விக்டோரியா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை எனப் பல்வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. கோயில் அறங்காவலர்களால் வழங்கப்பட்ட தக்காளி சாதத்தில் பூச்சிக் கொல்லி விஷம் கலந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்றுவரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்துப் பேட்டியளித்த கர்நாடகத் துணை முதல்வர் பரமேஷ்வரா, `கோயில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தின் சிறிய பகுதி தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் பிரசாதத்தில் மோனோக்ரோடோபோஸ் (monocrotophos) மற்றும் ஆர்கனோபாஸ்பேட் (organophosphate) என்ற இரு ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பொருள்கள் பொதுவாக விளைநிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்தில் கலக்கப்படுபவை. இது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை' என்றார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து வரும் ராமாபுரம் போலீஸார், கொள்ளேகால் டி.எஸ்.பி, புட்டுமாதேவப்பா, இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். நான்கு நாள்களாக நீடித்த விசாரணை முடிவில், கிச்சுகிச்சு மாரம்மா கோயிலின் ஊழியர் மாதேஸ், அவரின் மனைவி அம்பிகா, தமிழகத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த தொட்டண்ணா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பக்தர்களுக்குப் பிரசாதத்தில் விஷம் வைப்பதற்காகத் தூண்டியதாகக் கூறப்பட்டதின் பேரில், மாதேஸ்வரன் மலையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி இம்மடி மாதேவ்சாமியையும் நேற்று மாலை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார் போலீஸ் ஐ.ஜி.கே.வி.சரத்சந்திரா விசாரணை நடத்தி வருகிறார். இதையடுத்து கொள்ளேகால் நீதிமன்றம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொள்ளேகால் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

`கோயிலில் இருந்து வரும் வருமானத்தில் உள்ளூர் நிர்வாகிகள் சொகுசு வாழ்க்கையை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 3.5 கோடி ரூபாய் வருமானம் கோயில் மூலமாக வந்துள்ளது. இதுதவிர, கணக்கில் வராத அளவுக்குத் தொகைகளும் புழங்கியுள்ளன. இதை மடத்துக்கு வேண்டிய சிலர் ரசிக்கவில்லை. இந்தத் தொழில் போட்டியின் காரணமாகவே பிரசாதத்தில் விஷம் வைக்கப்பட்டதாக அறிகிறோம். விசாரணை முடிவில் மேலும் தகவல்கள் வெளியாகலாம்' என்கின்றனர் கர்நாடகப் போலீஸார்.