Published:Updated:

திருச்செந்தூரில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா - அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருச்செந்தூரில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா - அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திருச்செந்தூரில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா - அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் எனப் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச மற்றும் திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான வெளியூர் வெளிமாநில பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மட்டுமல்லாமல் விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதில், முருகப் பெருமானின் படத்தை வைத்து அலங்கரித்து பாடல்களைப் பாடியபடியே பாதயாத்திரையாகவும் வந்துள்ளனர்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட தீப ஆராதனை, அதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. கடலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி மற்றும் சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி தைப்பூச மண்டபத்துக்குச் சென்றடைந்து அங்கு அபிஷேகம், விசேச அலங்காரத்தில் தீப ஆராதனையும் நடைபெற்றது.

கடற்கரைப் பகுதி முழுவதும் பச்சை நிற வேட்டி அணிந்த பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது. கடற்கரையில் புனித நீராடினர். கோயிலில் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருச்செந்தூரில் திரும்பிய திசையெல்லாம் முருக கோஷம், பஜனைப் பாடல்கள்தாம் ஓங்கி ஒலித்தன.

பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் நெல்லை – திருச்செந்தூர், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே திருச்செந்தூரில் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால், திருக்கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட அறைகள், தங்கும் விடுதிகள், மடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் என அனைத்தும் ஹவுஸ்ஃபுல் ஆனது.

கோயிலின் சுற்றுப் பிரகார மண்டபம் இடிந்து அகற்றப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும், மண்டபம் கட்ட எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிகக் கொட்டகைகளாவது அமைக்க வேண்டும் என பக்தர்கள் வைத்த கோரிக்கையை திருக்கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால், தங்க இடமின்றி இரவு நேரங்களில் பக்தர்கள் கடும் குளிரில்  அவதிப்பட்டனர்.