Published:Updated:

கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

மாசி மகத் திருவிழாவையொட்டி, கும்பகோணம் மகாமக தீர்த்தக் குளத்தில் இன்று அதிகாலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று மாசி மகா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதேவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கும்பமேளாவுக்கு இணையானதாக தென்னிந்திய கும்பமேளா என்று பெருமையுடன் போற்றப்படுகிறது.

மாசி மகா விழாவினை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கெளதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் என 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் அந்தந்த கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நான்கு கரைகளிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். 

சாரங்கபாணி பெருமாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 7 நாள்கள் தெப்பஉற்சவம் நடைபெறுவது வழக்கம். இறுதி நாளான இன்று கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கடந்த 6 ஆண்டுகளாக பொற்றாமரைக் குளத்தில் தண்ணீர் இல்லாததால், நிலை தெப்ப விழா நடைபெற்றது. தற்போது காவிரி ஆற்றிலிருந்து போர்வெல் மூலம் ராட்சத மோட்டார் அமைத்து, தெப்பகுளத்துக்குத் தண்ணீர் விட்டனர். இதையடுத்து இன்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்ப உற்சவம் கண்டு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மாசிமகம் விழாவின் ஒரு பகுதியாக சக்கரபாணி பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. வெட்டிவேர், சோற்றுக்கற்றாழை, வெள்ளெருக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகிய மருத்துவப் பொருள்கள், விருட்சி, மந்தாரை, சங்குப்பூ, உள்ளிட்ட புஷ்பங்கள், எலுமிச்சை, கொய்யா, பலா உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் கூந்தப்பனை, ஈச்சங்குலை, மாவிலைத் தோரணம், வாழை, துளசி, அருகம்புல், தர்ப்பை, வில்வம், அத்தி போன்ற இலை வகைகள் என மொத்தம் 108 வகையான திவ்ய மங்களப் பொருள்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேதராக சக்கரபாணி பெருமாள் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. 

50 ஆண்டுக்குப் பிறகு தீர்த்தவாரி:

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோயிலும் மாசிமகத் திருவிழா தொடர்புடைய கோயிலாகும். வராகபெருமாள் மூலவராகவும், அம்புஜவல்லி தாயாராகவும் உள்ளார். இந்தக் கோயிலின் பின்புறம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலுள்ள குளம், கடந்த மகாமகத்தின் போது 40 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி சீரமைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றிலிருந்து குளத்திற்கு தண்ணீர் நிரப்பியும் குளத்தில் தண்ணீர் நிற்காமல் வறண்டு விட்டது. கோயில் நிர்வாகத்தினர் குளத்தில் தண்ணீர் நிற்கும் வகையில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், களிமண் நிரப்பியும், ஆழ் குழாய்மோட்டார், தீர்த்தவாரி மண்டபம் அமைத்தும் சீரமைத்தனர். இதையடுத்து வராக தீர்த்தக் குளத்தின் கீழ்க்கரையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். கோயில் நகரமான கும்பகோணமே மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது.