Published:Updated:

பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17
பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17

சென்ற இதழ் தொடர்ச்சி...

பிரீமியம் ஸ்டோரி

சைமனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், ‘சிவபுரம் நடராஜர் சிலையைத் திருப்பி அளிப்பதற்குக் கைமாறாக, அடுத்த ஓர் ஆண்டுக்கு நார்டன் சைமன், எந்த இந்தியக் கலைப் பொருள்களை வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வெளியே வாங்கிக்கொள்ளலாம். நாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம்’ என்று இந்திய அரசு எழுதிக் கொடுத்திருக்கிறது. இதுபற்றி யாரும் மூச்சுவிடவில்லை. அந்த ஓர் ஆண்டில் மட்டும் சைமன் கிட்டத்தட்ட 800 இந்தியச் சிலைகளை வாங்கியிருக்கிறார். அவற்றில் சிவபுரத்தில் நடராஜர் சிலைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட சோமாஸ்கந்தர் உள்ளிட்ட ஐந்து சிலைகளும் அடக்கம். ஆனால், நடராஜர் சிலையை மட்டும் மீட்டுவிட்டு, அந்த வழக்கை முடித்துவிட்டார்கள்” என்று அதிர்ச்சி கொடுக்கிறார், விஜயகுமார்.

கடந்த 1998-ம் ஆண்டில் ‘பீட்டர் வாட்சன்’ எனும் பி.பி.சி செய்தியாளர், இந்தியாவில் சிலை திருடும் நெட்வொர்க் செயல்படும் விதம் பற்றி ஒரு புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில், ‘சோத்பை’ஸ் (Sotheby’s) என்ற ஏல நிறுவனத்தைச் சேர்ந்த ஃபோர்ஜ் (forge) மற்றும் லின்ச் (Lynch) ஆகியோர், இந்தியச் சிலை கடத்தல்காரனான வாமன் கியாவுடன் (vaman ghiya) இந்தியா முழுவதும் சுற்றி, சிலைகளைத் தேர்வு செய்வார்கள். அந்தச் சிலைகளை வாமன் கியாவும் சிலைக் கடத்தல் மன்னர்களான ஷ்யாம் சகோதரர்களும் கடத்துவார்கள். பிறகு, இந்தச் சிலைகளுக்குப் போலியான பதிவுச் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் பீட்டர் வாட்சன். அந்த நூல் வெளியான பிறகு, வாமன் கியா கைது செய்யப்பட்டார். அவர் மட்டும் சுமார் 10,000 சிலைகளைக் கடத்தி விற்றதாகச் சொல்லப்படுகிறது. அவரது டெல்லி வீட்டிலிருந்து மட்டும் 800 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் 400 சிலைகள் தொன்மையானவை என்று தொல்லியல் துறையினர் அறிக்கை கொடுத்தார்கள். அப்படியிருந்தும், ‘தண்டிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை’ என்று நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் வேறு துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். வாமன் கியா மூலம் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17

குற்றவியல் சட்டம் 380-ன் படி வீடு புகுந்து திருடுபவர்களுக்குக் கிடைக்கும் ஆறு ஆண்டு காலச் சிறைத் தண்டனை, சிலை திருடர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், தமிழக அரசு இந்தச் சட்டத்தைத் திருத்தி, ‘கோயில்களில் திருடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை’ என்று மாற்றிவிட்டது. எத்தனை சிலைகளைத் திருடி, எத்தனை கோடி டாலர்களுக்கு விற்றாலும் அதிகபட்ச சிறைத் தண்டனை மூன்று ஆண்டுகள்தான்.

மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் பழங்கால சிலைகள் பெரும்பாலும் முகலாயப் படையெடுப்பு காலத்தில், பாதுகாப்புக்காக மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள். இப்படிக் கிடைக்கும் சிலைகளைப் பலர் திருட்டுத்தனமாக விற்றுவிடுகிறார்கள். அதேபோல கோயில்களில் வழிபாட்டிலிருக்கும் சிலைகளில் சிறு சேதம் ஏற்பட்டாலும் அவை ‘பின்னமாகிவிட்டன’ என்று சொல்லி அவற்றுக்குப் பதிலாக புதிய சிலைகளை நிர்மாணித்து விடுவார்கள். அந்தப் பழைய சிலைகளும் கடத்தப்பட்டுவிடுகின்றன.

‘இந்தியாவிலிருந்து பழைமையான கலைப்பொருள்கள் மற்றும் பாரம்பர்ய சின்னங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன’ என்று 1960-ம் ஆண்டில் இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டு, ‘சிலை கடத்தலைத் தடுக்கவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு சர்வதேச சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தது. அதன்படி 1970-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ, சர்வதேச தீர்மானம் (The UNESCO 1970 Convention on the Means of Prohibiting and Preventing the Illicit Import, Export and Transport of Ownership of Cultural Property) ஒன்றைக் கொண்டுவந்தது. இந்தியா, அந்தத் தீர்மானத்தில் 1972-ம் ஆண்டில் கையெழுத்திட்டது. அந்தத் தீர்மானத்தின்படி, 1972–ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாட்டிலிருந்து கலைப்பொருள்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தால், நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே நேரடியாக ஆதாரத்தைக் காட்டி திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தத் தீர்மானம் போடப்பட்டதற்கு முன்பு திருடப்பட்ட சிலைகளைச் சர்வதேச நீதிமன்றம் மூலம்தான் பெறமுடியும்.

பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17

இத்தீர்மானம் இயற்றப்பட்ட பிறகு காவல் அதிகாரிகள், தொல்லியல் வல்லுநர்கள் என்று 3,500 பேரை உள்ளடக்கி ‘காராபினியரி ஆர்ட் ஸ்குவாட்’ (Carabinieri Art Squad) என்னும் தனிப்படையை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூலம் அமைத்தது, இத்தாலி. இந்தத் தனிப்படை 1970-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டுக்குள் 3,00,078 பாரம்பர்ய கலைச் சின்னங்களை மீட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் 1972-ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டுக்குள் 17 சிலைகள் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளன. 2000 - 2012-ம் ஆண்டுவரை ஒரு சிலைகூட மீட்கப்படவில்லை.

இதுகுறித்து பேசும் வரலாற்று ஆய்வாளர் கோமகன், “சிலை கடத்தல் தடுப்புத் துறையினர், சென்னையில் ரன்வீர் ஷா மற்றும் அவரது தோழி கிரண் ராவ் வீடு மற்றும் பண்ணை யிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள் மற்றும் கல் தூண்களை மீட்டனர். ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளிநாடுகளில் உள்ள சிலைகளில் எத்தனை சிலைகளை மீட்டிருக்கிறார்கள், எத்தனை கடத்தல்காரர்களைக் கைது செய்திருக்கிறார்கள், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேருக்குத் தண்டனை கிடைத்துள்ளது என்று கேட்கப்படும் எந்தக் கேள்விக்குமே இங்கு விடை கிடைக்காது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இன்னும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்” என்கிறார்.

முதலில் தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள செப்புத் திருமேனிகள், கருங்கல் சிலைகள், நகைகள் என அனைத்தையும் புகைப்படம் எடுத்து, அவற்றின் தரவுகளோடு ஆவணப்படுத்த வேண்டும். அவற்றைச் சம்பந்தப்பட்ட கோயில் களில் அறிவிப்புப் பலகையிலும் இடம்பெறச்செய்ய வேண்டும். இப்படி ஆவணப்படுத்தப்பட்ட சிலைகள், சர்வதேச சந்தையில் விலைபோகாது. அதனால், அவற்றை யாரும் கடத்த முயற்சி செய்யமாட்டார்கள். இதுவரை, ‘பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி’ என்னும் நிறுவனம் 1950-ம் ஆண்டிலிருந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கும் கோயில் சிலைகளின் படங்கள் மட்டும்தான் நம்மிடம் ஆவணமாக உள்ளன. அந்தப் படங்கள்தான் திருடப்பட்ட சிலைகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கின்றன. திருடப் பட்ட சிலைகள் மற்றும் கலைப் பொருள்களின் புகைப்படம் நமது கையில் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

கோயில்களில் உள்ள மூலவர் சிலைகளுக்குப் பூஜைகள் செய்யப்படுவதுபோல, உற்சவச் செப்புத் திருமேனிகளுக்கும் பூஜைகள் செய்ய வேண்டும். ஆனால், பல கோயில்களில் உள்ள செப்புத் திருமேனிகளைப் பாதுகாப்பு என்ற பெயரில் பெட்டகத்தில் வைத்துப் பூட்டி விடுகிறார்கள். இதுவும் சரியான நடைமுறையல்ல.

பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17

சர்வதேச போலீஸார், ‘இண்டர்போல் ஸ்டோலென் ஆர்ட் வொர்க் டேட்டா பேஸ்’ (www.interpol.int/Crime-areas/Works-of-art/Database) என்னும் இணையதளத்தை நிறுவியுள்ளனர். இது திருடப்பட்ட கலைப்பொருள்களை மீட்பதற்கென்றே உள்ள பிரத்யேக இணையதளம். தமிழகத்தில் திருடுபோயுள்ள சிலைகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இந்த இணையதளத்தில் பதிவுசெய்து அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்ய வேண்டும்.

சிலைகள் விலை மதிப்பில்லாத பாரம்பர்ய பொருட்கள் மட்டுமல்ல... நமது நாட்டின் தொன்மையான பண்பாட்டு வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் காலக் கடிகாரமும்கூட. அதை மீட்பதும் காப்பதும் அரசுகளின் கடமை!

- சி.வெற்றிவேல்

‘‘சிலை மீட்பில், சட்டச்சிக்கல் இருக்கிறது!’’

சி
லைகடத்தல் விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். “வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் தமிழகப் புராதனச் சின்னங்களை மீட்க சர்வதேச அருங்காட்சியகக் கூட்டமைப்புடன் இணைந்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு, கலாசாரத் துறையின் கீழ் ஒரு குழு அமைத்துச் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தக் குழுவிலும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சிங்கப்பூரில் இருக்கும், ‘இந்தியா பிரைடு புராஜெக்ட்’ (India Pride Project) போன்ற தன்னார்வ அமைப்புகளுடனும் இணைந்து, அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம். ‘சட்டப்படி சிலைகளை நாங்கள் விலை கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறோம். சிலை கடத்தல்காரர்களிடம் வாங்கவில்லை’ என்று அருங்காட்சியக உரிமையாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் காட்டுகிறார்கள். நம் சிலைகளை வைத்திருக்கும் ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ என்ற அருங்காட்சியக உரிமையாளர்கள், ‘நாங்கள் சட்டப்படி பல கோடி ரூபாய் கொடுத்து இவற்றை வாங்கி வைத்திருக்கிறோம். எங்களுக்கு விற்கப்பட்ட சிலைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது என்றால், கைதுசெய்யப்பட்ட சிலை கடத்தல்காரர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து எங்களுக்கு இழப்பீடு கொடுங்கள்’ என்று கேட்கிறார்கள். இதுபோன்ற நடைமுறை சட்டச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. அருங்காட்சியகங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பறிபோன பாரம்பர்ய சின்னங்கள்... 43 ஆண்டுகளில் இத்தாலி மீட்டது 3,00,078; 40 ஆண்டுகளில் இந்தியா மீட்டது 17

தமிழகத்தில் உள்ள 91 புராதனச் சின்னங்கள் தமிழக அரசாலும், 412 புராதன சின்னங்கள் மத்திய தொல்லியல் துறையாலும் நிர்வகிக்கப்படுகின்றன. புராதன சின்னங்களை அருங்காட்சியகங்களில்தான் பாதுகாத்து வருகிறோம். மொத்தம் 1,22,000 அரும்பொருள்களைக் கணக்கெடுத்து அவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறோம். கிடங்கில் இருக்கும் அரும்பொருள்களையும் மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு