‘கணக்கு வழக்கு இல்லாமல், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு... கோடிக்கணக்கு மதிப்பிலான கோயில் ஆபரணங்கள் அபகரிப்பு’ என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அல்லல்படுகிறது இந்து சமய அறநிலையத் துறை. இதுவரை இலைமறை காயாகப் பேசப்பட்டுவந்த அறநிலையத் துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்த மான நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாக திருத்தொண்டர் சபை சமீபத்தில் புகார் எழுப்பியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான தங்க, வெள்ளி ஆபரணங்களும் சட்டவிரோதமாக கையாளப் பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்திலும் அந்தக் கோயிலின் செயல் அலுவலர் அர்ஜுனன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது திருத்தொண்டர் சபை.

இதுகுறித்து திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் பல மாயமாகின. பல நகைகள் எடை குறைந்து காணப்பட்டன. இந்த விவகாரத்தில், 2015-ம் ஆண்டு கோயிலின் செயல் அலுவலராக பணிபுரிந்துவந்த அர்ஜுனன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக 85 லட்சம் ரூபாய் அபராதத்தை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அன்றைய இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி உத்தரவிட்டார். நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுனன் ஓய்வு பெற்றுவிட்டதால், அதிகாரிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்துவிட்டனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய கோயில்களின் ஏராளமான சொத்துகளையும் வி.ஐ.பி-க்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 2009-ம் ஆண்டில் பல்வேறு கோயில்களில் தங்க ரதங்கள் செய்யப்பட்டன. இதற்குச் செலவிடப் பட்ட தொகையை அளவீடு செய்வதற் காக, வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பின்னர் என்ன ஆனது எனத் தகவல் இல்லை. அறநிலையத் துறையின் முன்னாள் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவக்குமார், கரூர் கல்யாண பசுபதீஸ் வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தன் உறவினர் பெயரில் வைத்திருப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து முன்னாள் அறநிலையத் துறைச் செயலரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சிவக்குமார் கூறுகையில், “ராதாகிருஷ்ணன் சொல்லும் அந்தச் சொத்து என் மனைவியின் பெயரில்தான் உள்ளது. 1983-ல் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பெரியசாமி என்பவர் செயல் அலுவலராக இருந்தார். அவர், தனியாருக்குச் சொந்தமான நிலத்தைக் கோயில் நிலமாக ஜோடித்து, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதே பொய்யான ஆவணத்தை அடிப்படையாக வைத்துதான், நாங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகப் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது. எங்கள் தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். அதில் கோயிலுக்குச் சாதகமான முடிவு வந்தால், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்றார்.
காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயில் விவகாரம் குறித்து, சிவகங்கை மாவட்ட இணை ஆணையர் ஜெகநாதனிடம் கேட்டோம். “எதுவாக இருந்தாலும் கோயில் செயல் அலுவலரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்று மழுப்பினார்.
காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலின் செயல் அலுவலர் பிரதீபாவிடம் பேசினோம். “முன்னாள் செயல் அலு வலர் அர்ஜுனன் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியிருப்பதால் அதுகுறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. கோயில் அறங்காவலர் அருணாச்சலம், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து, திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அதற்காக, சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டதால், அறநிலையத் துறை மீது வீண் புகார்களைக் கிளப்பி வருகிறார்” என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திர னிடம் பேசினோம். “கோயில் சொத்துகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ‘ஆணை யரின் அனுமதியின்றி எந்தச் சொத்துகளையும் விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளோம். தங்க ரதம் குறித்த ஆய்வு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது உண்மைதான். ஊழல் தடுப்புத் துறைக்கு அறிக்கை முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அலுவலக விசாரணை காரணமாக காலதாமதம் ஆனது. விரைவில் ஆய்வு அறிக்கை முடிவுகளை வெளியிடுவோம்” என்றார்.
- பூ.பவித்ரா
படங்கள்: வீ.சதீஷ்குமார், நா.ராஜமுருகன்