Published:Updated:

திருவாரூர் சிலைகள் பாதுகாப்பகத்தில் 5 போலிச் சிலைகள் கண்டுபிடிப்பு! - பொன்.மாணிக்கவேல்

திருவாரூர் சிலைகள் பாதுகாப்பகத்தில் 5 போலிச் சிலைகள் கண்டுபிடிப்பு! - பொன்.மாணிக்கவேல்
திருவாரூர் சிலைகள் பாதுகாப்பகத்தில் 5 போலிச் சிலைகள் கண்டுபிடிப்பு! - பொன்.மாணிக்கவேல்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம் புள்ளமங்கை என்ற ஊரின் பசுபதீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த 9 சிலைகளை சிலைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில் 5 சிலைகள் போலியான சிலைகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் சிலைகள் பாதுகாப்பகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4,539 ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தொல்லியல் துறையினர் மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் காப்பகத்தில் இன்று ஐந்தாம் கட்ட ஆய்வைத் தொடங்கினர். ஆய்வினை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் இன்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், திருவாரூர் அருகே உள்ள கரவீரநாதர் கோயில் சிலையைக் காண்பித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், `இந்தச் சிலையானது கி.பி. 918-ம் ஆண்டு பராந்தக சோழன்  செய்த சிலைகள். இந்தச் சிலைகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிலையை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. இதனால் இந்தச் சிலையின் தொன்மையும் தெரியவருகிறது. இதேபோல் தமிழகத்திலுள்ள அனைத்துச் சிலைகளிலும் எழுத்துகள் பொறிக்கப்பட வேண்டும். அவ்வாறு எழுத்துகள் பொறிக்கப்பட்டால் சிலைகள் திருடுபோகும் நிலை குறையும். வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதும் குறையும். ஏனென்றால் அந்தச் சிலையில் பொறிக்கப்பட்டிருக்கும் முத்திரை தடையாக இருக்கும். அதையும் தாண்டி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றால், அந்த முத்திரைகளைக் காட்டி நாம் திரும்பக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதனால் அனைத்து சிலைகளிலும் எழுத்துகள் பொறிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ``திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் பாதுகாப்பகத்தில் உள்ள அனைத்துச் சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்பு உடையது. அவற்றின் விலையைக் கேட்டால் மயக்கம் வந்துவிடும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்டு கொண்டுவந்த நடராஜர் சிலையே 30 கோடி ரூபாய் மதிப்பு உடையது. அதைவிட பல தொன்மையான சிலைகள் இங்கு உள்ளன. ஆனால், இதுவரை எந்த ஒரு அசிஸ்டன்ட் கமிஷனரோ, ஜாயின்ட் கமிஷனரோ இதுவரை இங்கு வேலை பார்க்க வரவே இல்லை. பல்வேறு தகவல்கள் கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அவர்கள் வரவில்லை என்றால் என்ன நோக்கம் இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். எவ்வளவு முறை போன் செய்தாலும் எடுப்பதும் இல்லை; பதில் கூறுவதும் இல்லை.

இதுவரை நடைபெற்ற ஆய்வில் தஞ்சாவூர் மாவட்டம் புள்ளமங்கை என்ற ஊரின் பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள 9 சிலைகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 5 சிலைகள் போலியான சிலைகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகள் மாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆய்வு முடிவில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான்  காலை முதலே ஆய்வு செய்துவருகிறேன். இதில், செம்பியன் மஹாதேவி கோயிலில் பாதுகாப்பு வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. அக்கோயிலில் உள்ள அனைத்துச் சிலைகளும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வைத்து பராமரிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குவளை கோயிலை ஆய்வு செய்தேன். தமிழ்நாடு அளவில் பாதுகாப்பில் மிகவும் மோசமான நிலையில் அந்தக் கோயில் உள்ளது. எப்படிக் கூறுகிறேன் என்றால், இன்று காலையில் நான் கோயிலுக்குச் சென்று ஆய்வு செய்தேன். அங்கு காவலராக இருந்த 86 வயதுடைய முதியவர் ஒருவர் இருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தால் என்னவாகும்?. சிலைகள் சுலபமாக திருட்டு போய்விடும். எந்த நேரத்திலும் வேண்டும் சிலைகளை வெளியே கொண்டுபோய் விடும் நிலை உள்ளது.

திருவாரூர் தியாகராஜர்  கோயில் பாதுகாப்பகத்தில் உள்ள சிலைகளில் 5 சிலைகள் போலிச் சிலைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது இதுபோல் பல கோயில்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்படும். அதற்காகத்தான் பல்வேறு துறையிலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். டெல்லியிலிருந்து சத்யபாமா என்ற பெண் அதிகாரி வந்துள்ளார். இவர்களுடைய குழுக்களுக்கு போலிச் சிலைகளைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்குண்டு. திருவாரூர் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் சிறைக் கைதிகள் போல் இருப்பதால் அந்தந்தக் கோயில்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்கு சிலைகள் வைக்கப்படவேண்டும்’’ எனக் கூறினார்.