Published:Updated:

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மாற்றத்துக்கு என்ன காரணம்?
திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராகப் பதவி வகித்து வந்த பாரதி, திடீர் மாற்றம் செய்யப்பட்டதற்குப் பல்வேறு புகார்களும், அவரது பொறுப்புகளில் அதிருப்தியும்தான் காரணம் என்கின்றனர் பக்தர்கள். 

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி ஆகிய பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில், கந்த சஷ்டி திருவிழாவில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள். சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள். தென் மாவட்டங்களில் உள்ள முருகத் தலங்களில் முக்கிய தலம் என்பதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் உள்ள முதுநிலைக் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. தமிழகத்தில் உண்டியல் மற்றும் நன்கொடைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் கோயில்களின் பட்டியலிலும் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படுவதில்லை எனப் பக்தர்கள் எந்நாளும் சொல்லி வரும் புகார்கள் காற்றில் கரைந்த வண்ணமே உள்ளது.  

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டோம். ``இக்கோயிலின்  இணை ஆணையராகப் பணியாற்றி வந்தவர் பாரதி. இவர் திடீரென சென்னை, திருவேற்காடு மாரியம்மன் கோயிலுக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் குமரதுரை, திருச்செந்தூர் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இணை ஆணையர் மாற்றப்பட்டதன் பின்னணி குறித்து சிலரிடம் பேசினோம், ``திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி கிரிப் பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மோர் விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் பலியானார். நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு வெளியூர் பக்தர்கள் படுகாயமடைந்தனர்.  இதனையடுத்து, கோயில் கிரிப் பிரகார மண்டபம் உட்பட பலமிழந்த கட்டடங்களை அகற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பிறகு கிரிப் பிரகாரம் மண்டபம் முழுமையாக இடிக்கப்பட்டது. அதேபோல, திருவாவடுதுறை சஷ்டி மண்டபமும் இடித்து அகற்றப்பட்டது. மேலும், கடந்த 2018-ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவுக்கு, ஒருவாரத்துக்கு முன்பாகக் கோயில் வளாகத்தில் உள்ள 308 விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டன. இதனால் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் திண்டாடினார்கள். இதைக் காரணம் காட்டி, தனியார் லாட்ஜ்கள், ஹோட்டல்களில் அறைகளின் கட்டணம் மூன்றுமுதல் நான்கு மடங்குவரை உயர்ந்தது. இப்படிக் கோயில் வளாகத்தில் எவ்வித வளர்ச்சிப் பணிகள் இல்லாமல் பிரகார மண்டபம் இடிப்பு, விடுதிகளுக்கு சீல், கோயில் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு, கோயில் அபிஷேக கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது, டோல்கேட்டில் வாகனக் கட்டணம் உயர்வு, பன்னீர் பாட்டில் கட்டண உயர்வு  என அனைத்துக் கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்ட காரணங்களால் அறநிலையத் துறை மீது பக்தர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. பலகட்சியினரும் இவற்றுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் கோயில் விஸ்வரூப தரிசன டிக்கெட்டை, எப்போதும் இல்லாத வகையில் ரூ.1,000 ஆக உயர்த்தி வசூலித்தது எனப் பல்வேறு கட்டணங்களும் தாறுமாறாக உயர்த்தப்பட்டன. கோயில் வளாகத்தில் டீ, வடை, பூ, சுண்டல், ஐஸ், தள்ளுவண்டி வியாபாரிகளிடம் தினசரி வியாபாரத்துக்குக் கட்டணம் வசூலிக்கும் உரிமத்தைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டது. பலதரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கோயில் வளாகத்தில் அனுக்கிரக மண்டபம், வெள்ளைக் கல் மண்டபம் எனக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இருந்த பாரபட்சத்தால், வியாபாரிகள் வேதனையடைந்தனர்.

ஒதுக்கப்பட்ட கடைகளுக்குத் தற்போதுவரை மின் இணைப்பு கொடுக்காமல் காலதாமதம் செய்யப்பட்டது. இப்படிக் கோயில் வருமானம் என்ற பெயரில் பக்தர்கள் தலையில் கட்டணத்தைத் தள்ளியது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற காரணங்களால், ஒரு மாதத்தில் குறைந்தபட்சம், மூன்று முறையாவது திருச்செந்தூர் கோயில் குறித்து ஏதாவது ஒரு செய்தி ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும். இதனால்,  அறநிலையத் துறை உயரதிகாரிகளும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின்மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் இணை ஆணையரை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இக்கோயிலின் புதிய தக்காராக சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் ராமச்சந்திர ஆதித்தனின் மகனும், மாலைமுரசு நாளிதழின் நிர்வாக இயக்குநருமான கண்ணன் ஆதித்தன் கடந்த 2018, பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இவர் நியமனம் செய்யப்பட்டதிலிருந்து இணை ஆணையர் பாரதிக்கும் இவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. திருக்கோயிலில் பல பணிகளைத் தக்காருக்கு தெரிவிக்காமலேயே, அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே தக்கார் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்கள் தக்கார் காதுகளுக்குப் போக கொந்தளித்த அவர், முதல்வர் பழனிசாமியை நேரிலேயே சந்தித்துப் புகார் கூறினாராம்.

மாவட்டத்தின் அமைச்சரான செய்தி மற்றும் விளம்பரத் துறை கடம்பூர் ராஜூ மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய இருவர் மட்டும் இணை ஆணையருக்கு ஆதரவாக, ஆணையாளரை மாற்றவிடாமல் முட்டுக்கட்டை போட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் இணை ஆணையர் மாற்றம் தாமதமாகியே வந்தது. இதற்கிடையே உளவுப்பிரிவு போலீஸாரும் கோயில் நிர்வாகத்தின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தனர். இப்படிப் பலதரப்பினர் அதிருப்தி, ஆட்சேபம், வேதனை காரணமாக இணை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்" என்றனர்.  

இக்கோயிலில் கட்டுமானப் பணிகளைக் கவனிக்கும் உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருந்துவந்தது. இதனால் கோயிலில் சப்பரங்கள் பராமரிப்பது, திருவிழா பணிகளைக் கவனிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கிப் போயிருந்தன. இணை ஆணையருக்கு வேண்டியவர்கள் எனக் கூறி எந்தவித உத்தரவும் இல்லாமல் திருச்சியிலிருந்து வந்த இன்ஜினீயர்கள் கோயில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இணை ஆணையர் மாற்றத்தால் திருச்சியிலிருந்து வந்த கட்டுமானப் பொறியாளர்களும் உடனடியாகத் திரும்பிச் சென்றுவிட்டனர்.