அலசல்
சமூகம்
Published:Updated:

“கோயில் உரிமை எங்களுக்குத்தான்!” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை!

“கோயில் உரிமை எங்களுக்குத்தான்!” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
“கோயில் உரிமை எங்களுக்குத்தான்!” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை!

“கோயில் உரிமை எங்களுக்குத்தான்!” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை!

‘காலம் காலமாக வழிபடும் தங்கள் கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தக்கூடாது’ என்று மதுரை அருகேயிருக்கும் 62 கிராமங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்து மனுக்கொடுத்திருக்கிறார்கள்.

“கோயில் உரிமை எங்களுக்குத்தான்!” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை!

மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கிறது வெள்ளலூர் கிராமம். சுற்றுப்பட்டில் இருக்கும் 62 சிறு கிராமங்களின் தாய் கிராமம் இது. பாரம்பர்யம் மாறாமல் பழைமையோடு விளங்கும் இந்தக் கிராமத்தை வெள்ளலூர் நாடு என்று அழைக்கிறார்கள். வெள்ளலூர், அம்பலக்காரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என்று ஐந்து மாகாணங்களைத் தலைமையாகக்கொண்டு 62 கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 62 கிராமங்களுக்கும் சேர்த்து 11 கரைகள், ஒரு கரைக்கு 2 அம்பலக்காரர் வீதம் 22 அம்பலக்காரர்கள் என நிர்வாகம் செய்து வருகிறார்கள். ஏழை காத்தம்மன் கோயில், வல்லடைக்காரர் கோயில், மந்தைக் கருப்பசாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களின் தெய்வங்கள்தான் இம்மக்களின் முதன்மை தெய்வங்கள். இந்தக் கோயில்களைத்தான் அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சி செய்வதாகத் தகவல் எழுந்துள்ளது. இதையடுத்துத்தான் இந்தப் பரபரப்பு.

சமட்டிக்கரை அம்பலக்காரர் குறிஞ்சி குமரனிடம் பேசினோம். “மூன்று கோயில்களும் வழிபாட்டுக்கானவை மட்டுமல்ல. எங்கள் வாழ்வுடன் ஒன்றிப்போனவை. நல்லது, கெட்டது அனைத்தையும் இந்தக் கோயில்களில் வைத்துத்தான் பேசி முடிவு எடுப்போம். 500 ஆண்டுகளாக இதுதான் நடைமுறை. ஆனால், யாரோ அளித்த பெட்டிஷனை வைத்துக்கொண்டு கோயில்களின் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறை முயற்சி செய்கிறது. அதனால்தான், ‘அறநிலையத்துறை கோயிலைக் கையகப்படுத்தக் கூடாது’ என அரசாங்கத்திடம் மனு கொடுக்க முடிவு செய்து, வெள்ளலூர் மந்தையில் திரண்டோம். ஐந்தாயிரத் துக்கும் அதிகமானோர் திரண்டவுடன் காவல் துறை, இந்து அறநிலையத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வந்தனர். மக்கள் சார்பாக அம்பலக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘கோயில் நிர்வாகம் முறையாகக் கவனிக்கப் பட்டுவருகிறது. இந்து அறநிலையத்துறை தலையீடு தேவையில்லை’ என்று மனு அளித்தோம். அதிகாரிகள், ‘சாதகமான முடிவு எடுக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்” என்றார்.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயன், “கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வது நோக்கம் அல்ல. அறங்காவல் குழு அமைக்கத்தான் முடிவு செய்தோம். அறங்காவல் குழுவுக்கான ஐந்து உறுப்பினர்களும் அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இடைக்கால ஏற்பாடாக தக்காரை நியமிக்கலாம் என்று கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுத்தோம். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போதைய நிலையே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளோம்” என்றார்.

- அருண் சின்னதுரை, படம்: வி.சதீஷ்குமார்