Published:Updated:

''வெங்கடேசப் பெருமாள் எங்கள் வீட்டு மருமகன்!''- உரிமையுடன் வணங்கும் இஸ்லாமிய மக்கள் 

''வெங்கடேசப் பெருமாள் எங்கள் வீட்டு  மருமகன்!''- உரிமையுடன் வணங்கும் இஸ்லாமிய மக்கள் 
''வெங்கடேசப் பெருமாள் எங்கள் வீட்டு மருமகன்!''- உரிமையுடன் வணங்கும் இஸ்லாமிய மக்கள் 

ஸ்லாமில் உருவ வழிபாட்டுக்கு இடமில்லை. ஆனால், மனமிருந்தால் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்பதற்கு உதாரணமாக, கடப்பா வெங்கடேச பெருமாள் கோயில் திகழ்கிறது.  தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி தினத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வெங்கடேசப் பெருமாளை மனமுருக  வணங்கிச் செல்கிறார்கள்.  

ஆந்திர மாநிலம் கடப்பாவில், தேவுனிகடப்பா லக்ஷ்மி வெங்கடசப் பெருமாள் கோயில் உள்ளது. திருப்பதியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கே, அருள் பாலிக்கும் வெங்கடேசப் பெருமாள், கி.பி 1311- ம் ஆண்டில் இந்தியா மீது படையெடுத்து வந்த மாலிக்காபூரின் மகள் பிபி நான்சரம்மாவைத் திருமணம் செய்துகொண்டதாக ஐதீகம் சொல்கிறது. இதனால், வெங்கடேசப் பெருமாளை கடப்பா சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள், தங்கள் வீட்டு மருமகனாகக் கருதுகிறார்கள். உகாதி தினத்தில் வழிபாட்டைத் தொடங்கிவைக்கும் உரிமையும் இஸ்லாமிய மக்களிடமே உள்ளது. 

 உகாதி தினத்தில், அதிகாலை 5 மணி முதலே இஸ்லாமிய மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இங்கே வழிபாடு நடத்துகிறார்கள். சாமியை வழிபடுவது, தேங்காய் உடைப்பது, தீர்த்தம் அருந்துவது என இந்துக்கள்போலவே இஸ்லாம் மக்களும் பெருமாளை சேவிக்கிறார்கள். பிரசாதம்கூட சாப்பிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது. தலையில் கும்பம் வைத்தும் ஆசீர்வாதம் பெறுகிறார்கள். இந்த உகாதி தினத்திலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று பெருமாளை வணங்கிச் சென்றனர். ஆனந்தப்பூர், சித்தூர் மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமிய மக்களும் இங்கு வந்து பிரத்தியேக வழிபாடு செய்கிறார்கள். 

கோயிலின் அர்ச்சகர் மாச்சா சேஷர்யாலு கூறுகையில், '' உகாதி தினத்தின் முதல் வழிபாட்டை இஸ்லாமிய மக்கள்தான் நடத்துவார்கள். பிறகுதான் மற்றவர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். காலங்காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புத்தாண்டு தினத்தில்,  தங்கள் மகளாகக் கருதும் பிபி நான்சரம்மாவுக்கு, புதிய  சேலைகள் எடுத்துக்கொண்டு வருவார்கள். மருமகனான பெருமாளுக்கும் வேட்டி, சட்டைகள் எடுத்து சாத்துவார்கள். இன்னும் சிலர், தங்க நகைகள் செய்துகொண்டு வருவார்கள் '' என்கிறார்.

இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரிந்து சண்டையிட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், கடப்பா வெங்கடேசப் பெருமாளும் கடப்பா வாழ் இஸ்லாமிய மக்களும் மத ஒருமைப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.