Published:Updated:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்!

கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. செண்பக பாண்டியன் எனும் மன்னன் இக்கோயிலை எழுப்பியதால் இக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு செண்பகவல்லி என்ற பெயர் வந்ததாகவும், ”கோவிற்புரி” என அந்த மன்னன் உருவாக்கிய இந்நகரே கோவில்பட்டி என்றானதாகவும் சொல்லப்படுகிறது. சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.  

மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சியே நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு, நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம் ஆகிய  முக்கியத் திருவிழாக்களில் பங்குனித் திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு, இத்திருவிழா கடந்த 5-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா வரும் 15-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடக்கிறது. இவ்விழா நாள்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழாவான இன்று காலை, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, மேள தாளம் முழங்க முதலில் அம்பாள் தேரும், அதைத் தொடர்ந்து சுவாமி தேரும் நான்கு ரதவீதிகளிலும் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட எஸ்.பி, முரளி ரம்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 10-ம் திருநாளான நாளை, 14-ம் தேதி மாலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, தீபாராதனையும் நடக்கிறது. 11-ம் திருநாளான வரும் 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.