Published:Updated:

அழகருக்காகப் பொங்கி வந்திருக்கும் வைகை நீர்! - ஆனந்தமும் ஆபத்தும்

அழகருக்காகப் பொங்கி வந்திருக்கும் வைகை நீர்! - ஆனந்தமும் ஆபத்தும்
அழகருக்காகப் பொங்கி வந்திருக்கும் வைகை நீர்! - ஆனந்தமும் ஆபத்தும்

அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி, வைகை அணையில் நீர் திறக்கப்பட்டிருந்தது. அது, இன்று மதிய வேளையில் மதுரை நகரை அடைந்தது. மதுரைப் பகுதி மக்கள் கரையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து வைகை நீரை வரவேற்றனர்.

கடந்த சில மாதங்களாக, மதுரை நகர்ப்பகுதியில் வைகை முழுதும் வறண்டுபோய்க்கிடந்தது. இந்த வறட்சிக் காலங்களில், துணி சலவை செய்பவர்கள் தங்கள் துணிகளைக் காயப்போடுவதும், வைகையில் முளைத்திருக்கும் சிற்சில புற்களை ஆடு, மாடு, குதிரைகளை விட்டு மேயச் செய்வதும் நடைபெறும். சமூக விரோதச் செயல்களைச் சகித்துக்கொள்வது, மதுரை நகர்க் கழிவுகளைத் தன்னகத்தே வாங்கிக் கொள்வது என பிஸியாக இருந்தது வைகை. தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வந்தடைந்திருக்கிறது. வெயிலில் தகித்துக்கொண்டிருந்த மதுரைவாசிகள், தூரத்தில் தண்ணீர் மினுமினுப்பு தெரிந்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். தங்கள் பணிகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, கரையெங்கும் நிரம்பி நின்றனர்.

வறண்டு புழுதிபடிந்த பாறைகளையும், கரை மணலையும் மெள்ள மெள்ளப் புதுப்புனல் நீராட்டிக்கொண்டே வருவதைக் கண்குளிரக் கண்டனர். பொங்கிப் பிரவாகமெடுத்து, அகலக் கூடி ஏ.வி.பாலத்தின் படிகளில் அசுரவேகத்தில் ஆர்ப்பரித்துக்கொட்டியபோது, அங்கே இருந்த அத்தனை சிறுவர்களும் தங்களை மறந்து ஆனந்தக் கூச்சலிட்டுக் குதூகலித்தனர். கரை முழுதும் கவிந்திருந்த வெப்பக் காற்றை விழுங்கிய இந்தப் புதுப்புனல், ஈரக்காற்றை எடுத்து வீசத் தொடங்கியது. நீர் வந்த வேகத்தில் முகமெங்கும் பட்ட ஈரக்காற்றில் சொக்கிப்போய் நின்றிருந்த பெரியவரிடம் பேசினோம். “இப்படி அடிக்கடி புதுப்புனல் வந்து பார்த்ததுண்டு. ஆனா, அழகருக்காக வர்ற இந்தத் தண்ணீய பார்க்கும்போது அழகரே அனுப்பி வச்சிருக்காருன்னுதான் தோணுது” என்று புன்னகைத்தார். எல்லோருக்கும் ஒருபடி மேலே சென்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவரை ஆசுவாசப்படுத்தி பேச்சுக்கொடுத்தபோது, “நான் மதுரைக்காரி. இந்தக் கரையிலதான் பிறந்து வளர்ந்தேன். ஊட்டி, கொடைக்கானல்னு எல்லாம் சொல்றாங்க, ‘சுளீர்’னு அடிக்கிற இந்தப் புது சாரலுக்கு இணை எதுவும் இல்லை.” என்று சொல்லி நீர் தேங்கிய கண்களோடு நகர்கிறார்.

மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், ஆபத்தும் நெருக்கமாய் இருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ், வைகையாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுவருகிறது. இந்தப் பணி, திருவிழா காரணமாகத் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானப்பணிகளின்மீது துருத்திக்கொண்டு நீண்டிருக்கும் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. இதனால், நாளை லட்சக்கணக்கானோர் கூடி நிற்கப்போகிற இந்தப் பகுதியில் ஆபத்து நேரும் வாய்ப்புள்ளது. மேலும், கட்டுமானப்பணிகளுக்காக ஆங்காங்கே மேடும் பள்ளமுமாக இருக்கின்ற பகுதிகள் சமப்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதால், ஆற்றின் போக்குகளால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, ஆற்றைச் சரிபடுத்துதல் இனிமேல் சாத்தியப்படாது. நாளை கூடிநிற்கவுள்ள அந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தை முன்கூட்டியே முறைப்படுத்தி ஒழுங்குசெய்து, அசம்பாவிதம் நிகழாதவண்ணம் காத்துநிற்கவேண்டியது, காவல் துறை நண்பர்களின் கைகளில் உள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு