Published:Updated:

`ஒரு மாதம் உள்ளே வரவே கூடாது!' - கட்டாய வசூலுக்குக் கடிவாளம் போட்ட திருச்செந்தூர் கோயில் ஜே.சி.

திரிசுதந்திரர்கள், இக்கோயிலின் அங்கமாக இருப்பவர்கள். பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களே பக்தர்களிடம் கட்டாயப் பண வசூலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் கடற்கரையோரத் தலமாகவும் பார்க்கப்படுகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இது குருஸ்தலம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் பணம் கேட்பதாகத் திரிசுதந்திரர்கள் மீது பக்தர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

கோயில் கடற்கரை
கோயில் கடற்கரை

இதையடுத்து, கோயில் இணை ஆணையர் அம்ரித் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார். இதில், சோமாளி ஹரிஹரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இரண்டு திரிசுதந்திரர்களையும் எச்சரித்ததுடன் ஒரு மாதம் கோயிலுக்குள் நுழையவும் தடை விதித்தார். இதுகுறித்த அறிவிப்பு நோட்டீஸும் திருக்கோயில் அலுவலகம் முன்பாக ஒட்டப்பட்டுள்ளது.

`விக்ரகத்திலிருந்து கீழேவிழுந்து நசுங்கிய கிரீடம்!'- திகிலில் உறைந்த திருச்செந்தூர் பக்தர்கள்

இந்த நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய கோயில் ஊழியர்கள், ``கோயிலுக்குள் திடீர் என ஆய்வு நடத்தினார் ஜே.சி. அப்போது கோயிலின் சண்முகவிலாசப் பகுதியில் கோயில் திரிசுதந்திரர் சோமாளி ஹரிஹரன் என்பவர், கோயிலுக்குள் அழைத்துச் செல்வதாகக் கூறிப் பணம் கேட்டதைப் பார்த்தார். உடனே, அவரை அழைத்து எச்சரித்தார்.

இணை ஆணையர் அம்ரித்
இணை ஆணையர் அம்ரித்

இதேபோல் கோயில் பிராகாரத்திலுள்ள பெருமாள் சந்நிதி அருகில் சந்தனம் தேய்க்கும் அறைக்கு முன்பாக, மடப்பள்ளி மற்றும் சந்தன முறைதாரருமான சுப்பிரமணியன் என்பவர் கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி நைவேத்யப் பிரசாதம் என்ற பெயரில் பொங்கல் கட்டிகளை விற்பனை செய்ததையும் நேரில் பார்த்து எச்சரித்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து பொங்கல் கட்டிகள் அகற்றப்பட்டன. இரண்டு திரிசுதந்திரர்களையும் ஒரு மாதத்துக்குக் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்தார்” என்றனர்.

இணை ஆணையரின் நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார், ``மற்ற கோயில்களைவிட திருச்செந்தூர் கோயிலில் திரிசுதந்திரர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் இக்கோயிலின் அங்கமாக இருப்பவர்கள். பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்களே பக்தர்களிடம் கட்டாயப் பண வசூலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. இதில், இணை ஆணையரே நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது. இதேபோல, திரிசுதந்திரர்களின் சங்கமும் சஸ்பெண்டு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சுப்பிரமணியசுவாமி கோயில்
சுப்பிரமணியசுவாமி கோயில்

திருக்கோயில் இணை ஆணையர் அம்ரித்திடம் பேசினோம். ``சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களிடம் சில திரிசுதந்திரர்கள் கட்டாயமாகப் பணவசூலில் ஈடுபடுவதாக பக்தர்கள் புகார் கூறினார்கள். அதன்படி நேரில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இரண்டு திரிசுதந்திரர்கள் ஒருமாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காத வகையில் அடிக்கடி ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் உள்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார் உறுதியான குரலில்.