Published:Updated:

தடைகளை உடைக்கும் பிரதோஷ பிள்ளையார்

விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
விநாயகர்

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர்

தடைகளை உடைக்கும் பிரதோஷ பிள்ளையார்

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர்

Published:Updated:
விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
விநாயகர்

சகல தோஷங்களையும் பொசுக்கவல்லது பிரதோஷ வழிபாடு. சிவபெருமானுக்கே உரிய இந்த வைபவத்தில் பிள்ளையார் பெருமானும் மிகச் சிறப்பாக பூஜிக்கப்படுகிறார் ஓர் ஆலயத்தில். அதனால் அந்தப் பிள்ளையாரை பிரதோஷப் பிள்ளையார் என்றே சிறப்பித்துப் போற்றுகிறார்கள் பக்தர்கள். அது எந்தக் கோயில் தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம். தென்னகத்தில் ஆறுமுகமங்கலம் சுடலைமாட சுவாமி கோயில் மிகவும் பிரசித்தம். இதே ஊரில் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலும் உண்டு. இங்குதான் பிரதோஷ நாளில் பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடுகளும் மூஷிக வாகனத்துக்கு அபிஷேக ஆராதனைகளும் அமர்க்களமாய் நடைபெறுகின்றன.

ஆயிரத்தெண் விநாயகர்
ஆயிரத்தெண் விநாயகர்


சரி, அதென்ன... ஆயிரத்தெண் விநாயகர் எனும் திருநாமம்?!

இதற்கு அற்புதமான காரணக் கதை ஒன்று உண்டு.

ஹோமம் செய்ய வந்த பிள்ளையார்!

கொற்கையையே தலைநகரமாகவும் துறைமுகமாகவும் கொண்டு கோமார வல்லபன் எனும் மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை, ராகு-கேது தோஷங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக 1,008 அந்தணர்களை அழைத்து வந்து பிரமாண்டமாக யாகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டார் மன்னர்.

மன்னரின் கட்டளைப்படி யாகத்துக்கான ஏற்பாடுகள் செவ்வனே நடைபெற்றன.நர்மதை நதி தீரத்திலிருந்து மரக்கலங்கள் மூலம் அந்தணர்கள் வரவழைக்கப்பட்டனர். யாகம் தொடங்கும் வேளையில்தான் அந்தணர்களின் எண்ணிக்கையில் ஒருவர் குறைவது தெரிந்தது. மன்னர் கலங்கினார். திடுமென அந்தணர் ஒருவரை எப்படி அழைத்து வருவது என்று திகைத்தார். பிள்ளையார் பெருமானையே மனமுருக வேண்டிக் கொண்டார்.

lord siva
lord siva
kalyana sundari amman
kalyana sundari amman
தடைகளை உடைக்கும் பிரதோஷ பிள்ளையார்


சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். எல்லோருக்கும் மகிழ்ச்சி. யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். எதிர்பாராத விதமாக, 1008-வது நபராக வந்த புதிய அந்தணருக்கும் மன்னருக்கும் இடையே விவாதம் எழுந்தது.

விவாதத்தின் நிறைவில் ``மன்னா! வந்திருப்பது யாரென்று உனக்குப் புலப்படவில்லையா... என்னை நன்றாகப் பார்’’ என்றார் அந்தணர்.

மன்னனும் திகைப்புடன் அவரை உற்றுநோக்கினான். அந்தக் கணத்தில்... துங்கக் கரிமுகத்துத் தூமணியாய் பிள்ளையார் காட்சி கொடுத்தார். பாண்டிய மன்னன் சிலிர்த்தார். `எம்பெருமானே... கஜமுகா... விநாயகா...’ என்று பலவாறு தொழுது வணங்கினார்.

``மன்னா! நீ நடத்திய யாகத்தில் 1,008-வதாக வந்து யாகத்தைப் பூர்த்தி செய்தது நானே. யாகம் நிகழ்ந்த இந்த ஊரிலேயே அருளாட்சி புரிய போகிறேன். எமக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பி வழிபடுவாய்’’ என்று கட்டளையிட்டு மறைந்தார்.

மன்னனும் அப்படியே ஆலயம் எழுப்பினான். அரண்மனையில், தான் அனுதினமும் வழிபடும் விநாயகரைக் கோயிலில் எழுந்தருளச் செய்தான். 1008-வது அந்தணராக வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார்.

பிள்ளையாருக்குத் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள். கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வம். ஆலய முகப்பில் திகழும் ராஜகோபுரம் சமீபகால கட்டுமானம். நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம் ஆகியவற்றை தரிசிக்கலாம். மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம். ஐங்கரனான ஆனை முகத்தான், பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் கற்பக விருட்சமாய் காட்சி தருகிறார்.

ஆதிசங்கரர் அருளிய கீர்த்தனைகள்!

ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்ற திருக்கதையை நாமறிவோம். முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினாராம். அதன்பிறகே திருச்செந்தூர் சென்று வழிபட்டார் என்கிறார்கள்.

இன்றைக்கும் விசேஷ தினங்களில் இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. அவர் பாடிய பாடலின் பிரதி ஓலைச்சுவடி-செப்புப்பட்டயம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.அகத்தியர், ரோமரிஷி, வேதவியாசர், பதஞ்சலி, காகபுஜண்டர் ஆகியோரும் இத்தல விநாயரை வணங்கிச் சென்றுள்ளனர்.

மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காளஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். வெளிப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கோஷ்ட விநாயகர், சுப்ரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் அருள்பாலிக்கிறார்கள்.

பிள்ளையாருக்குப் பிரதோஷ வழிபாடு!

சித்திரைத் திருவிழா இங்கே விசேஷம். இவ்விழாவின் 6-ம் நாளன்று காலையில் தாமிரபரணிக் கரையில் கல்யாண சுந்தரி அம்பிகை விநாயகருக்கு ஞானப்பால் கொடுத்தல் வைபவமும், மாலையில் விநாயகர் பட்டாபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து, ஆதிசங்கரர் அருளிய ‘கணேச பஞ்சரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி-செப்புப் பட்டயம் வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி-செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம்.

7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும்.

`விநாயகர் சதுர்த்தி’ தினத்தன்று காலையில் கணபதி ஹோமமும், 21 வகையான அபிஷேகமும், விசேச அலங்கார தீபாராதனையும் நடைபெறும். மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெறும். பொதுவாக பிரதோஷ தினங்களில் சிவபிரானுக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிரதோஷ நாதராக சிவபெருமான் ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வருவார்.

இந்தக் கோயிலில் சிவன், அம்பாள் சந்நிதி இருந்தாலும், விநாயகப் பெருமானே பிரதான மூர்த்தியாக ஆட்சிபுரிவதால், பிரதோஷத்தன்று விநாயகருக்கும் மூஷிகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மூஷிக வாகனத்தில் பிரதோஷ விநாயக மூர்த்தி வலம் வருகிறார்.

பஞ்சமுக விநாயகர்
பஞ்சமுக விநாயகர்
நடராஜர்
நடராஜர்


தோஷம் நீக்கும் நீராஞ்சன தீபம்!

கேது தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், அந்தத் தடை நீங்க இங்குள்ள பஞ்சமுக விநாயகருக்கு `நீராஞ்சன தீபம்’ ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, ஒரு தேங்காயை உடைத்து அதில் பஞ்சுத்திரி போட்டு நெய் ஊற்றி ஏற்றப்படுவதே நீராஞ்சன தீபம். இங்ஙனம் தீபம் ஏற்றி வைத்து, 16, 32, 44, 54, 64 என்ற எண்ணிக்கையில் தேங்காய்களை மாலையாகக் கோத்து சாத்தி வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் தடைகள் நீங்கும்; கல்யாண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை.

அதேபோல், குழந்தைப்பேறு வேண்டும் அன்பர்களும் பஞ்சமுக விநாயகரை தரிசித்து வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள். விநாயகர் அருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், குழந்தையோடு வந்து பஞ்சமுக விநாயகருக்குக் வெள்ளித் தண்டை அல்லது வெள்ளிக் கொலுசு சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். நீங்களும் ஒருமுறை ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகரை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் நீங்கள் எதிர்கொள்ளும் தடை களை உடைத்து காரியவெற்றி அருள்வார் அந்தப் பிள்ளையார்.

எப்படிச் செல்வது? தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், ஏரலிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ளது ஆறுமுகமங்கலம். பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது. இந்தக் கோயில் காலையில் 6:30 முதல் 12 மணி வரையிலும்; மாலையில் 5.30 முதல் 8.30 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.

கன்னிவிநாயகர்
கன்னிவிநாயகர்

விசேஷ பிரசாதம் தேங்காய் பஸ்ம விபூதி!

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் சமர்ப்பிக்கும் தேங்காய்கள், மறுநாள் கன்னிவிநாயகர் சந்நிதியில் அவரைச் சுற்றிலும் அடுக்கிவைக்கப்படுகின்றன. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் நடைபெறும் ஹோமத்தில் இந்தத் தேங்காய்கள் சேர்க்கப்படுகின்றன. இப்படி ஹோமத்துக்குள் போடப்படும் தேங்காய்கள் ஒன்றுகூட வெடிப்பது இல்லையாம். அவை அப்படியே சாம்பலாகி விடுவதுதான் ஆச்சர்யம் என மெய்சிலிர்க்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

பிரார்த்தனைத் தேங்காய்கள் யாகக் குண்டத்தில் சாம்பலாகிவிடுவது போல, நமக்கு வரும் தடைகளும் துன்பங்களும் சாம்பலாகிவிடும் என்கிறார்கள். இந்த ஹோம பஸ்மத்துடன், சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக விபூதியையும் கலந்து, அதையே பக்தர்களுக்கு விசேஷ விபூதிப் பிரசாதமாகத் தருகிறார்கள்

வேண்டுதல் பலித்தவர்கள் 108 அல்லது 1,008 என்ற எண்ணிக்கையில் தேங்காய்களை வாங்கி வருகிறார்கள். அவற்றை உள் உடைப்புத் தேங்காய்களாக (தேங்காயை உடைத்து), கருவறையில் ஆயிரத்தெண் விநாயகரைச் சுற்றி அடுக்கி வைத்து, தேங்காய் கலந்து செய்யப்பட்ட 108 கொழுக்கட்டைகள் படைத்து வழிபடுகிறார்கள்.

நினைத்ததை நிறைவேற்றும் வழிபாடு!

திருமணத்தடை, வழக்கில் இழுபறி, நிலப்பிரச்னை, கணவன் - மனைவி பிரச்னை, கடன் பிரச்னை, கல்வியில் தடைகள் ஆகிய சங்கடங்கள் அனைத்தும் நீங்கவும்; காரிய வெற்றி, வேலை வாய்ப்பு, கல்யாண வரம், குழந்தைப்பேறு முதலான வரங்கள் கிடைக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன இந்தப் பிள்ளையாருக்கு.

அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு இலையால் அர்ச்சனை செய்யவேண்டும். மேலும் இரண்டு தேங்காய்களை இரண்டு கரங்களிலும் வைத்துக்கொண்டு, `தடைகள் நீங்கவேண்டும் காரியம் கைகூட வேண்டும்’ என்று ஆயிரத்தெண் விநாயகரை மனமுருகப் பிரர்த்தனை செய்துவிட்டு, பிராகாரத்தை 7 முறை வலம் வந்து வணங்கவேண்டும். பின்னர், தேங்காய்களை `பிராத்தைத் தேங்காய்’ எனச் சொல்லி, விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதால், அடுத்து வரும் 90 நாள்களுக்குள் நினைத்த காரியம் கைகூடும்; வேண்டுதல் பலிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism