Published:Updated:

திருப்பதி ஃபார்முலா... தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் பாதுகாப்புக்காகப் பின்பற்றப்படும் வழிமுறை!

பெரியகோயில்
பெரியகோயில்

பந்தல் எளிதில் தீப்பிடிக்காமல் இருக்க பந்தலுக்கு மேல் பகுதியில் ஃபயர் புரூப் பெயின்டிங்கைப் பயன்படுத்தி பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்து, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தயார் நிலையில் இருக்கிறது.

1997-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது யாகசாலை பந்தலில் ஏற்பட்ட தீவிபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். கோயிலுக்கு உள்ளே செல்லவும் வெளியே வருவதற்கும் ஒரே வழி அமைக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்தான், அந்தச் சோகச் சம்பவத்துக்குக் காரணம் என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறை ஏற்பட்டது போல் தற்போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் அமைத்து கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் பக்தர்கள் ஒவ்வோர் அறையாக உள்ளே சென்று, வெளியே வருவதற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். அந்த முறையைப் பின்பற்றியே பெரிய கோயில் குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் பேசினோம். ``சோழர்கள் கோயில்களில் முதன்மையானதும் உலகப் புகழ் பெற்றதுமான பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எப்படி உபசரித்து அனுப்புவோமோ, அதேபோல் விழாவிற்கு வருபவர்களுக்குச் சிறு சங்கடமும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாகசாலை
யாகசாலை

இதற்கான பணிகளுக்காக தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர்கள் உட்பட 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரத்திற்குள் வரும் பேருந்துகள் புறவழியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நிறுத்தி மக்களை இறக்கி விடும். அந்த இடத்திலிருந்து மக்களை ஏற்றிக்கொண்டு கோயிலுக்கு அருகில் விடுவதற்கு 150 வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். குடமுழுக்கு தினத்தில் மட்டும் 4,500 போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் வளாகத்துக்குள் மக்கள் நிற்பதற்காக இரும்புக் கம்பிகளாலான 16 அடுக்குகள் கொண்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அறையின் வழியாக அடுத்த அறைக்கு மக்கள் செல்வார்கள். ஒவ்வோர் அறையாக மக்கள் நிரம்புவதற்கு ஏற்ற வகையில், கொஞ்சம் கொஞ்சமாகவே நுழைவாயிலிருந்து மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையைப் பின்பற்றுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

வெளியே செல்லும் வழி
வெளியே செல்லும் வழி

கிரிவலப்பாதை, கோயில் உட்புறம், வெளிப்புறம் மற்றும் பூங்கா பகுதிகளில் மக்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு உள்ளே வருவதற்கு ஒரு வழி, வெளியே செல்வதற்கு ஒரு வழி என இரண்டு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே வரும் பக்தர்கள் ஒவ்வோர் அடுக்கின் வழியாகச் சென்று பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிவகங்கை பூங்கா பாதையின் வழியாக வெளியே செல்வர்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த முறை கோயில் வளாகத்திற்குள்ளேயே யாகசாலைப் பந்தல் அமைக்கப்பட்டது. தற்போது கோயிலுக்கு வெளியே வலது புறத்தில் பெத்தண்ணன் கலையரங்கத் திடலில் யாக பூஜைக்கான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் எளிதில் தீப்பிடிக்காமல் இருக்க பந்தலுக்கு மேல் பகுதியில் பயர் புரூப் பெயின்டிங்கைப் பயன்படுத்தி பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உடனே அணைப்பதற்காக அருகில் உள்ள குளத்திலிருந்து பைப் லைன் கொண்டு மோட்டார் அமைக்கப்பட்டிருக்கிறது.

எங்கும் வண்ண விளக்குகள், மிளிரும் ராஜராஜன் சிலை... இரவில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில்!

மேலும், அதி நவீன இரண்டு தீயணைப்பு வாகனங்கள் யாக சாலை பந்தலுக்கு அருகே தயார் நிலையில் நிற்கும். யாகத்தில் இடம் பெறுபவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் எந்த அசம்பாவிதங்களும் நடப்பதற்கு வாய்பில்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் குடமுழுக்கு சிறப்பாக நடைபெறும்'' என்றார்.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜீவகுமார் பேசுகையில், ``குடமுழுக்கு விழாவுக்காகத் தமிழக அரசு ரூ.80 லட்சம்தான் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை ஏற்பாட்டிற்குப் போதுமானதாக இல்லை. மேலும், இரண்டு மாதத்திற்கு முன் அறிவிக்கப்பட்டதால் அவசரகதியில் பணிகள் நடைபெற்றுள்ளன. முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் திட்டமிட்ட பணிகளைச் செய்வதற்குப் போதுமான நேரம் இருந்திருக்கும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு