Published:Updated:

அமர்நாத் பனிலிங்க தரிசனம்... ஆரத்தி - தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

அமர்நாத் பனிலிங்கம்
அமர்நாத் பனிலிங்கம்

அமர்நாத்தில் பனிலிங்கத்துக்கு நடைபெறும் ஆரத்தி சேவையை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த சில மாத காலமாக அனைத்து இறை வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், காஷ்மீர் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை, ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். ஆனால், இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புனித யாத்திரை தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் பனிலிங்கம்
அமர்நாத் பனிலிங்கம்

நோய்த் தொற்று அச்சம் காரணமாக, பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், அமர்நாத் குகைக்கோயிலின் நிர்வாகமும் அம்மாநில அரசும் இணைந்து அமர்நாத் கோயிலின் பனி லிங்க தரிசனத்தை உலக பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பு செய்தது. அமர்நாத் பனி லிங்க ஆரத்தி மற்றும் தரிசனம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது, வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இமயமலையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் பனி லிங்க ஆரத்தி மற்றும் தரிசனத்தை கோடிக்கணக்கான பக்தர்கள் தொலைக்காட்சியில் கண்டு பரவசம் அடைந்தனர்.

இந்த நிகழ்வில், ஜம்மு-காஷ்மீர் கவர்னர் ஜி.சி முர்மு தலைமை ஏற்று அமர்நாத் பனி லிங்கத்திற்கு சிறப்பு ஆரத்தி செய்தார்.

`380 பேருக்குக் கொரோனா தொற்று; 77 சிவப்பு மண்டலங்கள்!' -ரத்து செய்யப்பட்ட அமர்நாத் யாத்திரை

நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமர்நாத் புனித யாத்திரைக்கு இம்முறை அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அடுத்த மாதம் முதல், பக்தர்கள் பனி லிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் கூறியதாவது, "நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக, இம்முறை அமர்நாத் புனித யாத்திரையை நாங்கள் தள்ளிவைத்திருக்கிறோம். அமர்நாத் யாத்திரைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறோம். அதைப் பின்பற்றும் பக்தர்கள் மட்டுமே யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 பக்தர்கள் வரை யாத்திரைக்கு அனுமதிக்கவிருக்கிறோம்.

காஷ்மீர் பகுதிக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு ஆய்வின் முடிவில் நோய்த் தொற்று இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு யாத்திரைக்கு அவர்களை அனுமதிப்போம். அதுவரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகளை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் முழு முனைப்புடன் செய்துவருகிறது" என்றார்.

இன்றும் மாலை ஐந்து மணிக்கு ஆரத்தி சேவையை நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக, தூர்தர்ஷன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு