Published:Updated:

`பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்; இருமுடியிலிருந்து தொடங்குவோம்!’- சபரிமலை தந்திரியின் கோரிக்கை

ரசாயனம் கலந்திருப்பதால் யாரும் பன்னீர் கொண்டு வர வேண்டாம். சபரிமலை கோயிலில் பன்னீர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறந்தது. கடந்த ஆண்டு இளம் பெண்கள் சந்நிதானத்துக்குச் சென்ற சம்பவங்கள், அதற்கு எதிராக சங் பரிவார் போராட்டங்களால் சபரிமலை பரபரப்பாகவே காணப்பட்டது. இந்த ஆண்டு இளம்பெண்களை சபரிமலைக்கு வரவேண்டாம் என அரசே அறிவித்துள்ளதால், வழக்கம்போல கூட்டம் காணப்படுகிறது. தினமும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் நடத்துகின்றனர். இந்த நிலையில் சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கூறுகையில், "சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடி கட்டுக்குள் பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் வைத்துக் கொண்டுவராதீர்கள். சபரிமலை சந்நிதானத்தை பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான பகுதியாக மாற்ற முதலில் இருமுடி கட்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவோம்.

சபரிமலையைச் சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு பக்தரின் கடமையாகும். அவல், பொரி போன்ற பூஜை பொருள்களை பிளாஸ்டிக் கவரில் கொண்டுவர வேண்டாம். பன்னீரில் ரசாயனம் கலந்திருப்பதால் யாரும் பன்னீர் கொண்டு வர வேண்டாம். சபரிமலை கோயிலில் பன்னீர் ஏற்றுக்கொள்வதும் இல்லை. புண்யமான பூங்காவனம் என்ற திட்டத்தின் மூலம் சபரிமலையில் பெரிய அளவில் துப்புரவுப் பணி நடக்கிறது என்றாலும் கூடுதல் விழிப்புணர்வு அவசியம்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

இருமுடி கட்டும் கோயிலிலிருந்தே தூய்மைப்பணி தொடங்க வேண்டும். பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்க்கும் விஷயத்தில் குருசுவாமிகள் தனிக் கவனம் எடுக்க வேண்டும். சந்நிதானத்தில் பக்தர்கள் தங்கும் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளைத் திருப்பிக் கொண்டுசெல்ல துணிப்பைகள் விநியோகிக்கப்படுகின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு