Published:Updated:

`500 அடி ஆழ்குழாய் கிணற்றால் பெரிய கோயிலுக்கு ஆபத்து!'-கொதிக்கும் ஆய்வாளர்கள்

`இதற்கு அனுமதி கொடுத்தது யார். உடனே இந்தப் பணியை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் தடுத்து நிறுத்துவோம்'

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை

தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு அருகே ராஜராஜசோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் புதிதாக 500 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் அமைந்துள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கக் கூடாது. அப்படி அமைத்து தண்ணீர் உறிஞ்சினால் கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கோயிலின் பிரமாண்ட கட்டுமானத்தைப் பார்த்து வியந்து புகழ்ந்து பேசி செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கோயிலின் பிரமாண்ட கட்டுமானத்தை பார்த்து வியந்து புகழ்ந்து பேசி செல்கின்றனர்.

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை

இந்தநிலையில் பெரியகோயில் அருகே ராஜராஜசோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் புதிதாக போர்வெல் அமைக்கப்படுகிறது. போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீரை உறிஞ்சுவதன் மூலம் கோயில் கட்டுமானத்திற்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். உடனே ஆழ்குழாய் கிணறு அமைப்பதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் பேசினோம்.``தஞ்சாவூர் பெரியகோயில் தமிழர்களின் பெருமையை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது. இக்கோயில் தமிழர்களின் அடையாளமாகவும் இருந்துவருகிறது. இவற்றை சில செயல்பாடுகள் மூலம் அழிக்கப் பார்க்கிறார்கள் ஆட்சியாளர்களும், கோயிலை நிர்வாகம் செய்து வரும் நிர்வாகத்தினரும். சில மாதங்களுக்கு முன்பு தனியார் அமைப்பு நடத்திய தியான நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றம் சென்று அந்த நிகழ்ச்சி நடத்த தடை வாங்கினோம்.

ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி
ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

தற்போது சோழன் சிலை அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அந்த இடத்தில் 120 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு இருந்தது. அதில் தண்ணீர் வராததால் புதிதாக அமைப்பதாகக் கூறுகின்றனர். இதேபோல் ஆயிரமாவது ஆண்டு விழா சமயத்தில் கோயில் உள் வளாகத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணியைச் செய்தனர். அப்போது அடிப் பகுதியில் இருந்து தண்ணீருக்குப் பதிலாக சிறிய அளவிலான கற்கள் மற்றும் மண் வெளியேறியது. மண்ணைக் கொண்டே கோயிலின் அடிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அப்போதும் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கி பணியை நிறுத்தினர். ஆனால், மீண்டும் கோயிலுக்கு வெளியே ஆழ்குழாய்க் கிணறு அமைத்தால் எதிர்ப்பு இருக்காது என நினைத்து பணியை செய்துவருகின்றனர். இதற்கு அனுமதி கொடுத்தது யார். உடனே இந்தப் பணியை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் தடுத்து நிறுத்துவோம்'' என்றனர்.

கோயில் கட்டடக்கலைஞரும் ஆய்வாளருமான மெய்ம்மன் என்பவரிடம் பேசினோம்.``கோயிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கக் கூடாது. ஆனால், இவர்கள் 500 அடி ஆழத்துக்கு போர்வெல் அமைத்து வருகின்றனர் இது கோயிலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கோயில் கோபுரம் மட்டும் ஒன்றரை லட்சம் டன் எடை கொண்டதாகும். அருகில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்சினால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும். ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு இன்னும் மூடப்படாமல் அப்படியே இருக்கிறது. ஆனால், இப்போது புதிதாக அமைத்து வருகின்றனர். இதற்கு அனுமதி கொடுத்தது யார். இதேபோல் கோயில் உள் வளாகத்தில் வராஹி சந்நிதிக்கு அருகே புதிதாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தது யார். சமீபகாலமாக கோயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைப் பின்னணியில் இருந்துகொண்டு யாரோ செய்ய வைக்கின்றனர். உடனே அவற்றை நிறுத்த வேண்டும். கோயில் காக்கப்பட வேண்டும்'' என்றார்.

ராஜராஜன்
ராஜராஜன்
ம.அரவிந்த்

மாநகராட்சி தரப்பில் விசாரித்தோம், ராஜராஜன் சிலை உள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் இல்லாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்துவிட்டன பழைய ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வருவது இல்லை. அதனால் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கிறோம். ஏற்கெனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இந்த இடம் இருப்பதால் யாரிடமும் அனுமதி வாங்கவில்லை'' என்றனர்.