Published:Updated:

7,000 தமிழக கோயில்களை எடுக்கப்போகிறதா மத்திய அரசு? ஆன்மிக அரசியலில் கரம் கோக்கும் தி.மு.க–பா.ம.க!

கோயில்
கோயில்

``மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த உள்நோக்கம் வாய்ந்தது. தமிழகக் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று போராடியதற்கு எதிர்வினையாகத்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்தச் சதியை நாங்கள் கண்டிப்பாக முறியடிப்போம்.''

நாடு முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களை, மத்திய அரசின் குறிப்பாக இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர இருப்பதாக வெளியான செய்திகள் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 7,000 கோயில்களை புராதனக்கோயில்கள் என்று குறிப்பிட்டு மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பேசியதுதான் கொந்தளிப்புக்கான பிரதான காரணம். மத்திய அரசு இதுபோன்ற முயற்சிகளை கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பிரகலாத் சிங் பட்டேல்
பிரகலாத் சிங் பட்டேல்

கடந்த மாதம் 10-ம் தேதி, நாடாளுமன்றத்தில் பேசிய, மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறு பரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ``இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 745 இடங்கள், இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ளன. இதேபோன்று மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய நினைவுச் சின்னங்களை இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரவுள்ளோம். தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள சில நினைவுச்சின்னங்களை மாநிலங்களுக்கு அளித்துவிட முடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பாக மாநிலங்களின் கலாசாரத் துறை அமைச்சர்களுடன் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கையை பத்தாயிரமாக உயர்த்துவதே எங்களின் திட்டம். அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் 7,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழைமையானவையாக உள்ளன’’ என்றார்.

மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். ``தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பின்றிக் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது'' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ``தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள கோயில்களைக் கையகப்படுத்த தொல்லியல் துறை துடிப்பது நியாயமல்ல. தமிழகத்திலுள்ள கோயில்களைக் கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால், அதைக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி மேலே போய், ``தமிழக கோயில்களை மத்தியத் தொல்லியல் துறை தன்வசமாக்க முனைந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும் '' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரிய கருப்பன்
பெரிய கருப்பன்

மத்திய அரசின் இந்த நகர்வு குறித்து, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சரும், தி.மு.க-வின் சிவகங்கை மாவட்டச் செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பனிடம் பேசினோம்...

``மத்திய அரசின் இந்த முடிவு நல்ல உதாரணம் இல்லை. மாநில அரசின் உரிமையைப் பறிக்கின்ற செயல்களில் இதுவும் ஒன்று. எதிர்காலத்தில் மாநில அரசு என்ற ஒன்றே தேவையில்லை என மோடி தலைமையிலான மத்திய அரசு நினைக்கிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு திருப்பணிகள் செய்வதற்கு ஏராளமான உபயதாரர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 12,000 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. அதைக் கொடுப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. மாநில அரசு கேட்பதற்கும் தயாராக இல்லை. இந்த நிலையில், தமிழக திருக்கோயில்களை மத்திய அரசின் வசம் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வழிபாடு நடத்த முடியும். கோயில்களில் திருப்பணி செய்வது என்றாலும் பக்தர்களின் வசதிக்காக ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றாலும் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செய்ய முடியும். ஆனால், கோயில் நிர்வாகம் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது என்றால், அதன்பின் கதவுக்குக் கூடுதலாக ஒரு பூட்டு போடுவது என்றால் கூட டெல்லி வரை சென்று அனுமதி வாங்கித்தான் செய்ய முடியும். அதுமட்டுமன்றி, கோயிலுக்குள் பக்தர்கள் சென்று வருவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மருத்துவர் ராமதாஸ்

இதெல்லாம் மாநில உரிமைகளைப் படிப்படியாக குறைக்கின்ற, தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வழிபாட்டு உரிமைகளை சிதைக்கின்ற காரியமாக இருக்கிறது. அதையும்தாண்டி மத்திய அரசு கோயில்களைக் கையகப்படுத்துகிற நேரத்தில், கோயில்களின் வழக்கமான நடைமுறைகள், பாரம்பர்யப் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் சில மாறுதல்களை, கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவார்கள். ஏற்கெனவே, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்பணிகளும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அதனால் இது தேவையற்ற முயற்சியே'' என்கிறார்.

முனைவர் செந்தில்நாதன்
முனைவர் செந்தில்நாதன்

``மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த உள்நோக்கம் வாய்ந்தது. தமிழகக் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று போராடியதற்கு எதிர்வினையாகத்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த சதியை நாங்கள் கண்டிப்பாக முறியடிப்போம்'' என்கிறார், முனைவரும் வீரத்தமிழர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்நாதன்,

'' தஞ்சை குடமுழுக்கு தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தபோது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து தமிழிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற விஷயங்களில் மாநில அரசுக்கும் இருக்கும் உரிமைகளை மத்திய அரசின் கைக்கு மாற்றும் செயலாகவே இந்த அறிவிப்பைப் பார்க்க முடிகிறது. அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டால் வழிபாடுகளில் தாங்கள் விருப்பப்பட்ட விஷயங்களைச் செய்யமுடியும். தமிழர் கலாசாரத்தை அழித்து வட இந்திய இந்து கலாசாரத்தைத் திணிக்க முடியும். அதற்கான முயற்சியாகவே இந்த அறிவிப்பைப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து மத்திய அரசு இந்த முயற்சிகளைத் தொடர்ந்தால் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடர்வோம். தமிழகக் கோயில்களின் அதிகாரம் டெல்லிக்குச் செல்வதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்கிறார் ஆவேசமாக.

தமிழ்நாட்டுக் கோயில்களின் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து இந்திய அரசுக்குக் கொண்டு போனால், தமிழ் இந்து ஆன்மிகம், தமிழர் கலை, பண்பாடு, வரலாறு, தொன்மை அனைத்தும் அழிக்கப்பட்டு இந்தி, சம்ஸ்கிருத, ஆரியமயமாக்கப்படும். தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும். இந்திய அரசின் இம்முயற்சியைக் கைவிடச் செய்திட தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
பெ.மணியரசன்

`பழைமை வாய்ந்த தமிழகக் கோயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியே இந்த அறிவிப்பு'' என்கிறார், பொறியாளரும் வரலாற்று ஆர்வலருமான கோமகன், அவர் பேசும்போது,

``நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில்களை, இந்திய தொல்லியல் துறை பராமரிப்புக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று 1958-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பூஜை உரிமை, வழிபாட்டு உரிமை, மத ரீதியான சடங்குகள் செய்வதற்கெல்லாம் அந்தச் சட்டத்தில் இடமில்லை. சட்டத்தை மாற்றி வேண்டுமானால் அதைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், 1958-ம் ஆண்டு சட்டத்தின்படி கோயிலை எடுத்துக்கொண்டாலும் பல சிரமங்கள் இருக்கின்றன. கோயிலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை ஒப்பீட்டளவில் நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சரியாகச் செயல்படவில்லை என்றால் அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளைத்தான் எடுக்க வேண்டுமே தவிர அந்த அமைப்பையே கலைக்கும் வேலையைச் செய்யக் கூடாது.

கோமகன்
கோமகன்

இந்து சமய அறநிலையத்துறை இப்போது உருவாக்கப்பட்டது அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே அந்த வேலைகள் தொடங்கப்பட்டு, தற்போது சிறந்த கட்டமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே தொல்லியல் துறையால் எடுக்கப்பட்ட கோயில்களை, நினைவுச் சின்னங்களையே பராமரிக்க முடியாமல் தனியாரிடம் ஒப்படைத்துப் பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்னும் பல கோயில்களை தங்களின் கட்டுப்பாட்டில் எடுப்போம் என்பது மொத்த கோயில்களையும் தனியாருக்கும் ஒப்படைப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இது சரியான முயற்சி அல்ல '' என்கிறார் கோமகன்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளை கேள்விகளாக தமிழக பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் முன்வைத்தோம்,

மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாக அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றனவே?

இல்லை. அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அந்த மாதிரி சொல்லவில்லை. தமிழகத்தில் 7,000 பாரம்பர்யமான கோயில்கள் இருக்கின்றன. இதில், பராமரிப்பில்லாமல் இருக்கின்ற கோயில்களை, தொல்லியல்துறையின் கீழ் எடுத்து பராமரிக்கமுடியுமா என்று யோசிக்கிறோம் என்றுதான் சொல்லியிருக்கிறார். 7,000 கோயில்களையும் எடுத்துக்கொள்ளப் போவதாக எங்கும் சொல்லவில்லை. அனைத்துக் கோயில்களையும் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவர முடியாது. அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. தவிர, மாநில அரசின் அனுமதி ஒத்துழைப்பும் அதில் தேவை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட்டு, தமிழகத்தில் உள்ள கோயில்களை மட்டும் குறிப்பிட்டுப் பேசியிருப்பதற்கான காரணம் என்ன?

இயல்பாகவே, தமிழகம் அதிகமான கோயில்களைக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். வட இந்தியாவை ஒப்பிடும்போது இங்கு இருக்கக்கூடிய கோயில்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அதனால்தான், தமிழகத்தைக் குறிப்பிட்டு பேசியதற்கான காரணமே தவிர வேறெந்த உள்நோக்கமும் இல்லை.

தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை சிதைப்பதற்காகவே, மத்திய அரசு முயற்சியைக் கையில் எடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்களின் மீதான அக்கறையாகவே இந்த அறிவிப்பைப் பார்க்க வேண்டும். தமிழகக் கோயில்களில் உள்ள விக்கிரகத்தையோ, கோயில் சொத்துகளையோ அபகரிக்கும் எண்ணமோ, கையகப்படுத்தும் எண்ணமோ மத்திய அரசுக்கு துளியளவும் இல்லை. ஆனால், இவ்வளவு காலம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள், கோயில்களின் சொத்துகள் காணாமல் போகும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தற்போது அச்சப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களைப் பற்றியெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் கவலைப்படுகிறார் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம் சந்தேகமாகவும் இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இந்து சமய அறநிலையத்துறை சரியாக நடந்திருந்தால் ஏன் இந்த நிலை வரப்போகிறது... தவிர, வழிபாடு, மொழி, ஆராதனை ஆகியவற்றில் தொல்லியல் துறை தலையிடாது. அதனால், அது குறித்தெல்லாம் யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கின்ற செயல் இது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றதே?

மாநிலத்தின் உரிமையை அப்படியெல்லாம் மத்திய அரசு எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒன்று நடந்தால், மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் இருக்கிறது. மாநில அரசின் உரிமை எது, மத்திய அரசின் உரிமை எது என்பது சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் செய்துவிட முடியாது.

இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டில் குற்றங்கள் இருந்தால் அதைச் சரிசெய்துகொள்வோம்... ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்கிற குரல் மொத்தமாக ஒலிக்கிறதே?

இவ்வளவு காலம் சரியாகச் செயல்படவில்லை என்பதால்தான் இந்த முடிவை எடுக்கவேண்டிய சூழல் வந்திருக்கிறது.

கோயில்
கோயில்

உண்மையில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கோயில்களைவிட, அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்கள்தான் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறதே?

அப்படி இருந்தால் மத்திய அரசு ஏன் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் தலையிடப்போகிறது. தேவையில்லாமல், சில கட்சிகள்தான் இந்த விஷயத்தில் அரசியல் செய்கின்றன.

தமிழர்களின் நாகரிகத்தை - கலாசாரத்தைச் சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்”
- மு.க.ஸ்டாலின்

உங்கள் கூட்டணிக் கட்சியான பா.ம.க.வும் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்க்கிறதே?

நான் ராமதாஸ் ஐயாவுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். ஐயா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, `பசுமைத் தாயகம்' என இயக்கம் நடத்துவதைப்போல கோயில்களைப் பாதுகாக்கவும் இயக்கம் நடத்த வேண்டும். ஐயாவுக்கு இந்தப் பேட்டியின் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். பா.ம.க-வுக்கு மட்டுமல்ல, மத்திய அரசின் முயற்சியை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளுக்கும்தான் என் அழைப்பு. தி.மு.க 1000 கோயில்களையும், பா.ம.க 1000 கோயில்களையும், இன்னும் மீதமுள்ள கோயில்களை தமிழர் கலாசாரத்தை காக்க குரல் கொடுக்கும் அனைவரும் எடுத்துக்கொண்டு பாதுகாக்கட்டும். கையகப்படுத்தப்பட்ட கோயில் நிலங்களை, சொத்துகளை மீட்கட்டும். தொல்லியல் துறை கோயில்களை எடுத்துக்கொள்வதை வேண்டாம் எனச் சொல்லிவிடலாம்.

ராமதாஸ்
ராமதாஸ்

கோயில் மேம்பாட்டுக்காக மத்திய அரசு செய்தால் வரவேற்கலாம், ஆனால், `அரசியலுக்காக பா.ஜ.க இதைக் கையில் எடுத்திருக்கிறது' என குற்றம் சாட்டப்படுகிறதே?

நிச்சயமாக இதில் எந்த அரசியலும் இல்லை. நம் முன்னோர்களின் உழைப்பில் விளைந்த கலைப்பொக்கிஷத்தை காப்பதற்கான முயற்சி மட்டுமே. வருகின்ற தலைமுறறைக்கு அதைச் சரியாகக் கையளிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.

CAA-க்கு எதிர்ப்பு, கோயில்களுக்குக் குரல்... தி.மு.க ஆரம்பித்த தேர்தல் உத்தி!
சேவூர் ராமச்சந்திரன்
சேவூர் ராமச்சந்திரன்

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பேசினோம்,

``அந்த மாதிரி மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை'' என்றவரிடம் மத்திய அமைச்சர் பேசியது குறித்து கேட்டதற்கு

``ஏற்கெனவே இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணிகளைச் சரியாகச் செய்துவரும்போது மத்திய அரசிடம் கொடுக்கவேண்டிய தேவை எதுவும் உருவாகவில்லை '' என்பதோடு முடித்துக்கொண்டார்.

ஆன்மிக அரசியல் என்பது இதுதானோ?

அடுத்த கட்டுரைக்கு