Published:Updated:

`சேகர் ரெட்டிக்குப் பதவி, லட்டு அடுப்பு புதையல்?!' - திருப்பதி சந்தேகங்களுக்கு சுப்பா ரெட்டி பதில்

திருப்பதி தேவஸ்தானம் பற்றி அண்மையில் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து என்ன சொல்கிறார் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி?

சேகர் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி
சேகர் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி

திருமலை திருப்பதி தேவஸ்தானம், சென்னைக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்காக 32 பேர் நியமிக்கப்பட்டனர். தியாகராய நகரில் அமைந்திருக்கும் தேவஸ்தான அலுவலகத்தில் நேற்று இவர்களில் 28 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டியும் அவருடன் சென்னைக் கிளையின் தலைவரும் திருப்பதி அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளருமான சேகர் ரெட்டியும் கலந்து கொண்டார்.

`` புதிய பதவியை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என சுப்பா ரெட்டியிடம் கேட்டோம்.

`` பெரிய அனுபவம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பணி செய்யும்படி பணிக்கப்பட்டிருக்கிறேன்".

தமிழக பக்தர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?

`` திருப்பதி ஏழுமலையான் உலகப் பிரசித்தி பெற்றவர். ஆந்திரா மாநிலம் ஒன்றுபட்டு இருந்தபோது, அதிகமான எண்ணிக்கையிலான பக்தர்கள், தமிழகத்திலிருந்துதான் வந்தார்கள். தற்போது, ஆந்திரா, தெலுங்கானா எனப் பிரிக்கப்பட்ட பிறகும், தமிழகத்திலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தினமும் திருமலைக்கு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உரிய ஏற்பாடுகளை அதிகக் கவனத்துடன் செய்து வருகிறோம். வழக்கமாக அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓரிருவரைத்தான் நியமிப்பார்கள்.

ஆனால், ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வந்தபிறகு ஐந்து பேரை குழுவில் நியமித்திருக்கிறார். தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு நடைப்பயணம் வரும் பக்தர்கள் தங்குவதற்கு சத்திரம், சாப்பிட உணவு என ஏற்பாடுகளைச் செய்ய நினைக்கிறோம். இதுகுறித்து அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினோம். ஆனால், வெவ்வேறு பாதைகளில் மக்கள் திருப்பதிக்கு வருவதால் யோசித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, வேலூர் மற்றும் சென்னை வழியிலான பயணம் என்றால் வழியில் சத்திரம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யமுடியும். `வேறு என்ன செய்யலாம்?' என்று கமிட்டியில் பேசி அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் முடிவெடுக்க இருக்கிறோம்".

திருப்பதி என்றாலே, வசதி படைத்தவர்களுக்குக் கூடுதல் சலுகைகளும் ஏழை பக்தர்கள் என்றால் பலமணி நேரம் தரிசனத்துக்காகக் காத்துக் கிடப்பதும் தொடர்கிறதே?

சேகர் ரெட்டியுடன் சுப்பா ரெட்டி
சேகர் ரெட்டியுடன் சுப்பா ரெட்டி

`` நாங்கள் பதவி ஏற்று ஐந்து மாதங்கள் ஆகின்றன. பழைய நிலையோடு தற்போதுள்ள சூழலை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்றதற்கு முன்பு - பின்பு என்று இரண்டாகப் பிரித்து, ஏழை பக்தர்கள் எவ்வளவு பேர் தரிசனம் செய்கிறார்கள்.. எவ்வளவு மணிநேரங்களுக்குள் தரிசனம் கிடைக்கிறது, வி.ஐ.பி பக்தர்களுக்குத் தரப்பட்ட சலுகைகள் என்ன என்றெல்லாம் விசாரித்துப்பாருங்கள்.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த சமயத்தில், பிரேக் தரிசனம் என்கிற பெயரில் அதிகபட்சம் நான்கு மணிநேரம் சாதாரண மக்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அதைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணிநேரம் வரையில் குறைத்திருக்கிறோம். இதனால் கூடுதலாக 12 ஆயிரம் பேர் வரையில் தரிசனம் செய்கின்றனர்.

முந்தைய அரசாங்கத்தில் வி.ஐ.பி பக்தர்களுக்கு எல் 1, எல் 2, எல் 3 என்றெல்லாம் முன்னுரிமை தந்திருந்தார்கள். இதை வைத்து வெளியில் புரோக்கர்கள் ஆதாயமடைந்தனர். அவர்கள் மூலம் வி.ஐ.பி டிக்கெட்டுகளை பிளாக் மார்க்கெட்டில் விற்றனர். இதனால், சுமார் மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை சாதாரண பக்தர்கள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது வி.ஐ.பி தரிசன முறையை ஒழித்துவிட்டோம். கடந்த ஆறு மாதத்தில் 70 புரோக்கர்களைப் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ஸ்ரீவாணி டிரஸ்ட் என்கிற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்தமுறையில் தரிசனம் செய்ய பத்தாயிரம் ரூபாய் கட்டணம். சில நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டபூர்மான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். ஒவ்வொரு நாளும் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கூடிவருகிறது. இதன்மூலம் வருகின்ற வருவாயை வைத்து மதமாற்றம் நடக்கும் அட்டவணைப் பிரிவு மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோயில் கட்டவும் திட்டமிட்டிருக்கிறோம்".

அடிப்படையில் நீங்கள் ஒரு கிறிஸ்துவர் என்றும் இந்து கோயிலுக்குத் தலைவராக எப்படி நியமித்தார்கள் எனவும் சர்ச்சை ஏற்பட்டதே?

`` என்னுடைய அரசியல் எதிரிகள் இப்படியெல்லாம் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள். நான் பிறப்பால் ஓர் இந்து. வாழ்க்கை முறையிலும் இந்துவாகத்தான் இருக்கிறேன். அப்படியே தான் இறக்க நினைக்கிறேன். மாண்புமிகு முதல்வரின் உறவினர் என்பதால், நானும் ஒரு கிறித்துவன் என்று கிளப்பிவிடுகிறார்கள். முதல்வரின் இன்ஷியல் ஒய்.எஸ். என்னுடைய இன்ஷியல் ஒய்.வி. இரண்டையும் குழப்புகின்றனர். அது உண்மையல்ல" என விவரிக்க,

அப்போது இடைமறித்த சேகர் ரெட்டி, `` சார்.. வீட்டுக்கு போய்ப் பாருங்கள். 5, 6 மாடுகளை வளர்க்கிறார். தினமும் கோ பூஜை நடத்திக்கொண்டிருக்கிறார்" என்றார். இதையடுத்து, நம்மிடம் பேசிய சுப்பா ரெட்டி, `` ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் ஏரியாவில் எனக்கு வீடு. இன்று நேற்றல்ல.. கடந்த 10, 15 வருடங்களாகவே என் மனைவி முதலில் கோ பூஜை நடத்திவிட்டுத்தான் காலை டிபனையே எங்களுக்குச் செய்து தருவார்".

திருப்பதிக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகிறீர்கள். ஆனால், தங்குமிட அறையின் கட்டணத்தை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரமாக உயர்த்திவிட்டீர்கள். மேலும், இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாகவும் கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு லட்டும் 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல் வந்ததே?

`` முதலில் தங்குமிடத்தின் அறைக் கட்டணம் பற்றிச் சொல்லிவிடுகிறேன். திருப்பதிக்கு வருகிறவர்களுக்கு இலவசமாகவும் 50 ரூபாய், 100 ரூபாய் எனப் பல்வேறு கட்டணங்களில் தங்குமிட அறைகள் உள்ளன. அவரவர் தங்களது வசதியைப் பொறுத்து அறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 15, 20 வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இப்போதும் இயங்கிவருகிறது. வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே தற்போது கட்டணத்தை உயர்த்தினோம். மற்றபடி, ஏழை எளியவர்கள் தங்குமிடங்களின் கட்டணங்களை எங்கே உயர்த்தினோம்? அப்படி வெளியான தகவலில் உண்மையில்லை.

அதேபோல், லட்டு விலை உயர்வது குறித்து வெளியான தகவல்களும் வதந்தியே. லட்டு விநியோகத்தில் முந்தைய நடைமுறையே தொடரும். பொதுவாகக் கவனித்தீர்கள் என்றால் ஒரு லட்டு தயாரிக்க 38 ரூபாய் ஆகிறது. ஆனால், பக்தர்களுக்கு 25 ரூபாய்க்குத் தருகிறோம். கடந்த 15 வருடங்களில் இந்த விலையையும் உயர்த்தவேயில்லை. இதுபற்றி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தோம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர், `லட்டு விலையை உயர்த்தவேண்டாம்' என்றே கருத்து சொன்னார்கள். நாங்களும் அத்துடன் அந்த விவாதத்தை முடித்துக் கொண்டோம். இதுதான் நடந்தது".

Vikatan

லட்டுகள் தயாரிக்கப்படும் அடுப்புகளுக்குக்கீழே புதையல் இருந்ததை எடுப்பதற்காக, தற்போதுள்ள கட்டடத்தை இடித்துக் கட்டியதாகவும் சர்ச்சை தகவல் வெளியானதே?

இந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்த சேகர் ரெட்டி, `` ஒரு கட்டடம் பழுதடைந்தால் அதைச் சரிசெய்வது வாடிக்கையானது. அதையெல்லாம் போய் இப்படியா புரளி பேசுவது? என்றார். இதன்பிறகு நம்மிடம் பேசிய சுப்பா ரெட்டி, `` அதெல்லாம் வழக்கமாக நடக்கும் கட்டடப் பராமரிப்பு விஷயங்கள். சாதாரண சிவில் வேலை. மற்றபடி தவறான தகவல்களைப் பற்றிப் பேசுவதற்கு எதுவுமில்லை. இன்னும் சொல்கிறேன். திருப்பதி புனிதமான ஆன்மிக நகரம். ஏழுமலையான் இந்த உலகத்துக்கான வாழும் கடவுள். இங்கே என்ன நடந்தாலும், அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. வேறென்ன சொல்ல?"

சேகர் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி
சேகர் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி

ஆந்திர மாநிலத்துக்குத் தலைநகரம் அமையுமா.. இந்த விவகாரத்தில் நிறைய ஊழல் நடந்திருப்பதாக முதல்வர் ஜெகன் கூறியிருக்கிறாரே?

`` புதிய தலைநகரத்தை அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கிறார்கள். அவை யாவும் இரண்டு, மூன்று போகம் விளைச்சல் தரும் நிலங்கள். அந்த நிலத்தைச் சுற்றிலும் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரும் அவரின் கட்சியின் முக்கியஸ்தர்களும் இடம் வாங்கிப்போட்டிருக்கிறார்கள். தலைநகரம் அமைந்தால், இவர்களது இடங்களின் மதிப்பு உயரும் என்பதற்காதத்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள். இவை குறித்து பல்வேறு புகார்கள் வந்தன. அதையெல்லாம் விசாரிக்கும்படி கமிட்டி அமைத்திருக்கிறார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

அந்தக் கமிட்டியின் விசாரணை முடிவில்தான் முழு உண்மைகளும் தெரியவரும். இப்போதைக்குத் தலைநகரத்தை வேறெங்கும் மாற்றும் எண்ணத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இல்லை. எதற்காக மாற்றவேண்டும்.. தேர்தல் சமயத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதற்கு முன்னுரிமை தருகிறோம். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பட்டினி கிடக்கும் மக்களின் பசியைப் போக்கவேண்டும். வயிற்றுக்கு உணவிருந்தால், பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஏ.சியில் வசிப்பதா.. ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் வசிப்பதா என்பதை?"

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திராவுக்கு வெளியேயும் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் முறையாகப் பராமரிப்பதில்லை என்கிறார்கள். உதாரணமாக, வேலூரில் மேல்நிலைப்பள்ளி ஒன்றின் நிலைமை படுமோசமாக இருக்கிறதே?

இதற்குப் பதில் கொடுத்த சேகர்ரெட்டி, `` அந்தப் பள்ளிக்கூடம் தொடர்பாக பள்ளியைச் சேர்ந்தவர்கள் தலைவரை சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்" எனக் கூற, தொடர்ந்து பேசிய சுப்பா ரெட்டி, `` ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே இந்திய வெளியுறவுத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரி கார்த்திகேயனைச் சந்தித்தேன். வேலூர் பள்ளியில் படித்ததாக அவராக வந்து என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். அவரைப்போல நிறைய பிரபலமானவர்களை உருவாக்கிய பள்ளி அது என்று கேள்விப்பட்டேன். அடுத்தமுறை நான் நேரில் சென்று பார்க்க இருக்கிறேன்".

திருமலை -திருப்பதி
திருமலை -திருப்பதி

ஆந்திராவின் தலைமைப் பொறுப்பில் சுப்பிரமணியம் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தார். அவரை திடீரென மாற்றியிருக்கிறார்களே?

`` அதெல்லாம் நிர்வாக வசதிக்காக அரசாங்கம் எடுத்த முடிவு. அவருக்கு மாற்றுப்பதவி தந்திருக்கிறார்கள். வேறுறொன்றும் இல்லை".

தேவஸ்தானத்தின் தமிழகக் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சேகர் ரெட்டி ரெய்டு சர்ச்சையில் சிக்கியவர். அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கலாமா எனச் சிலர் கேள்வி எழுப்புகிறார்களே?

`` அவர் ஓர் ஆன்மிக பிரமுகர். ஆன்மிகத்துக்காக நிறைய சேவைகளைச் செய்து வருகிறார். மாதாமாதம் திருப்பதி வந்து போகிறார். இந்தக்கோணத்தில்தான் அவரை நாங்கள் பார்க்கிறோம். மற்ற விஷயங்களை சட்டம் அதன் கோணத்தில பார்த்துக்கொள்ளும். அவர் மீது சொல்லப்பட்ட அனைத்து சர்ச்சைகளிலிருந்தும் வந்துவிட்டார். அதனால்தான், அவர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியைத் தந்திருக்கிறார் முதல்வர். குறிப்பாக, சென்னையில் வாழும் ஏழுமலையான் பக்தர்களுக்கு அவர் நிறைய சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதும் பதவியைக் கொடுத்ததற்கான காரணம்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

`சேகர் ரெட்டிக்குப் பதவி, லட்டு அடுப்பு புதையல்?!' - திருப்பதி சந்தேகங்களுக்கு சுப்பா ரெட்டி பதில் #YVSubbaReddy #SekarReddy #Tirupathi மேலும் விவரங்களுக்கு : http://bit.ly/2OlMDcP

Posted by Vikatan EMagazine on Monday, November 18, 2019