Published:Updated:

`சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!' -தேவசம்போர்டு அமைச்சர் சொன்ன அதிர்ச்சிக் காரணம்

சபரிமலை
சபரிமலை

`நாங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கோயிலைத் திறந்தோம். ஆனால், அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதைக் காண்கிறோம்' என்கிறார் கடகம்பள்ளி சுரேந்திரன்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம் குறைந்த நபர்களைக் கொண்டு ஐதிகப்படி சடங்குகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

அதன் ஒருபகுதியாக கேரள மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் செல்லலாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டது. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் தினமும் காலை 9.30 முதல் 1.30 மணிவரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்துக்கு 150 பேர் வீதம் நாளொன்றுக்கு 600 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தினமும் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமணம் செய்துகொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை
சபரிமலை

திருமணத்தில் தம்பதி உட்பட 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வரும் 14-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது.

அந்தச் சமயத்தில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்திருந்தார். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தனி வழி மூலம் சந்நிதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஒருநாள் 3,200 பேரை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. பம்பையில் குளிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தேவசம்போர்டு கமிஷனர் பி.எஸ்.திருமேனிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், சபரிமலை மாதாந்திர பூஜை சமயத்தில் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், வரும் 19-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டுள்ள திருவிழாவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு சேர்மன் வாசு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கோயில்களைத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கோயிலை திறந்தோம். ஆனால், அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதைக் காண்கிறோம். சபரிமலையில் மாதாந்திர பூஜை சடங்குகள் மட்டுமே நடக்கும். அந்தச் சமயத்தில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை. திருவிழாவை இப்போது நடத்தாமல் மாற்றிவைத்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு