Published:Updated:

` `குடமுழுக்கு' நன்கொடை பணத்தில் முறைகேடா?'- தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

பெரிய கோயிலில் யாகம்
பெரிய கோயிலில் யாகம்

1960-களில் 60,000 ஏக்கர் சொத்துகள் இருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், தற்போது 20,000 ஏக்கர்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்றுவரும் பணிகள் உபயதாரர்கள் கொடுக்கும் நன்கொடையைக் கொண்டே செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இதில் பெரிய அளவில் நிதி முறைகேடு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

பெரியகோயில் பணிகள்
பெரியகோயில் பணிகள்

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம், தொல்லியல் துறை ஆகியவை இணைந்து குடமுழுக்கு தொடர்பான பணிகளைச் செய்து வருகின்றன. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த துரை.திருஞானம் தலைமையிலும் பல அ.தி.மு.க நிர்வாகிகளையும் கொண்டு குடமுழுக்குவிற்கான விழா கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடமுழுக்கு விழாவுக்காக நடைபெற்றும் வரும் பணிகளில் விழா கமிட்டியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஜீவக்குமாரிடம் பேசினோம், ``23 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதை தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க குடமுழுக்கு சிறப்பாக நடைபெற வேண்டும்; அதில் தம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என உபயதாரர்கள் பலர் லட்சக்கணக்கிலான பணத்தை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். அந்தப் பணத்தைக் கொண்டு 200 கழிப்பிட வசதிகள், கோயில் வளாகம் மற்றும் நகர் முழுவதும் 240 சிசிடிவி கேமராக்கள் பொறுத்துதல், குடிநீர் வசதி, தற்காலிகப் பேருந்து நிலையம், லைட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்தல், கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்கும் வகையில் எல்.இ.டி போர்டு அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரியகோயிலில் யாகம்
பெரியகோயிலில் யாகம்

இவை உபயதாரர்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டே செய்யப்பட்டு வருவதாக விழா கமிட்டியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகளுக்கு சுமார் ரூ.2 கோடி என மதிப்பீடு செய்யபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு 10-ல் இருந்து 15 சதவிகிதம் வரை விழா கமிட்டியினர் கமிஷனாகப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், கமிஷன் பெற வேண்டும் என்பதற்காகவே பணிகளின் மதிப்பையும் அதிகப்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

பெரியகோயிலில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் சதயவிழாவுக்கு தஞ்சையைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது வழக்கம். இதேபோல் மாதம்தோறும் நடைபெறும் பிரதோஷ தினத்தில் நந்திக்குச் செய்யப்படும் சிறப்பு அபிஷேகத்துக்காக பொருளாகவும், பணமாகவும் பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர். இதைக்கொண்டே இந்த விழாக்கள் சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா கமிட்டி
விழா கமிட்டி

இந்த நிலையில், தற்போது குடமுழுக்கு விழாவுக்காக பொதுமக்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை நன்கொடை வழங்கி வருகின்றனர். யார் எவ்வளவு தொகை வழங்கினார்கள் என விழா கமிட்டியினர் வெளிப்படையாகத் தெரியப்படுத்துவது இல்லை. எந்தப் பணிக்கு எவ்வளவு தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பதும் இல்லை. கோடிக்கணக்கான மதிப்பில் வரும் நன்கொடை பணத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுகின்றன.

இதேபோல் பெரியகோயிலுக்கு என 1960-களில் 60,000 ஏக்கர் சொத்துகள் இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், தற்போது 20,000 ஏக்கர்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை. விழா கமிட்டியின் இந்தச் செயலுக்கு அதிகாரிகளும் துணை போவதும் வேதனையாக இருக்கிறது இதைத் தடுக்க வேண்டும்" என்றனர்.

பெரியகோயிலில் யாகம்
பெரியகோயிலில் யாகம்

விழா கமிட்டித் தலைவரான திருஞானம் என்பவரிடம் பேசினோம், ``குடமுழுக்கு தொடர்பான பணிகள் அனைத்தும் கலெக்டரின் பார்வைக்குச் சென்றே நடைபெற்று வருகின்றன. மேலும், நன்கொடையாளர்களிடம் பணமாகப் பெறுவதில்லை. யார் பணி செய்கிறார்களோ அவர்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுக்கச் சொல்லி விடுகிறோம். அதனால் இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்பில்லை. மேலும், கோயில் விஷயத்தில் யாராவது இதுபோன்று செய்வார்களா. பெரிய விழா என்பதால் சிலர் திட்டமிட்டு இதைப் பரப்புகின்றனர்" என்றார்.

பின் செல்ல