Published:Updated:

`கலெக்டருக்குத் தெரியாமல் லட்சக்கணக்கில் முறைகேடு?'- தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு சர்ச்சை

பெரியகோயில்
பெரியகோயில் ( ம.அரவிந்த் )

பாஸை ஆயிரக்கணக்கில் பெற்று கலெக்டருக்குத் தெரியாமல் ரூ.500, ரூ 1,000- த்துக்கு விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளனர். மேலும், யாகசாலைப் பந்தலில் நன்கொடை கொடுத்தால்தான் அமர முடியும் என பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்குக்காக வழங்கப்பட்ட நன்கொடையில் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் முறைகேடு செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியகோயில்
பெரியகோயில்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு கடந்த 5-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கான விழா நாள்களில் மொத்தம் 13 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குடமுழுக்கு விழாவைத் துல்லியமாக திட்டமிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறாத அளவுக்கு அனைத்து அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நடத்தி முடித்த கலெக்டர் கோவிந்தராவை சமூக ஆர்வலர்கள் பலர் தற்போது வரை பாராட்டி வருகின்றனர். அத்துடன் விழா சிறப்பாக அமைந்ததற்கு கூட்டு முயற்சியே காரணம் என தெரிவித்த கலெக்டர் அனைத்துத் துறை அலுவலர்களையும் அழைத்து பாராட்டி நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

இந்த நிலையில், அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மற்றும் உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் குடமுழுக்கு விழாவில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைச் செயலாளர், ஊழல் ஒழிப்புத் துறை, தஞ்சை கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி அட்டை
அனுமதி அட்டை

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரிகாலசோழன் என்பவர் கூறுகையில், ``பெரியகோயில் குடமுழுக்கு விழா பெரும் விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கலெக்டர் கோவிந்தராவ், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் இரவு பகல் பாராமல் உழைத்தனர். மேலும், விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என கோயில் திருப்பணிகளுக்காகவும் குடமுழுக்கு பூஜைகளுக்காகவும் கோயில் கோபுரக் கலசம் தொடங்கி யாகபூஜை வரை என அனைத்துக்கும் பல மாவட்டங்களிலிருந்து தொழில் அதிபர்கள், பக்தர்கள் என பலர் தாமாக முன் வந்து பணமாகவும், பொருள்களாகவும் நன்கொடை வழங்கினர்.

இவற்றுக்கு அறநிலையத்துறை சட்டப்படி நன்கொடை ரசீது உடனே கொடுக்க வேண்டும். ஆனால், கோயில் இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கூட்டு சேர்ந்துகொண்டு குடமுழுக்கு முடிந்த பிறகு ரசீது வாங்கிக் கொள்ளலாம் என ரசீது எதுவும் கொடுக்காமல் லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். அத்துடன் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்வதற்காக விவிஐபி, விஐபிக்கு அனுமதி அட்டை தயார் செய்து கொடுக்கப்பட்டது.

தென்னரசு
தென்னரசு

அந்தப் பாஸை ஆயிரக்கணக்கில் பெற்று கலெக்டருக்கு தெரியாமல் ரூ.500, ரூ.1,000-த்துக்கு விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளனர். மேலும், யாகசாலைப் பந்தலில் நன்கொடை கொடுத்தால்தான் அமர முடியும் என பணம் பெற்றுக்கொண்டு பகதர்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

கோயில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமுமில்லாத ரெங்கராஜ் என்பவர் கோயிலுக்குள் ஆல் இன் ஆளாக வலம் வருகிறார். ரெங்கராஜை துணையாக வைத்துக்கொண்டு இருவரும் எப்போதும் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இதனால் அறநிலையத்துறைக்கு வரவேண்டிய வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து முழுமையாக விசாரணை செய்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அனுப்பியுள்ளேன். மிஸ்டர் கிளீன் எனப் பெயர் எடுத்து இருக்கும் கலெக்டர் கோவிந்த ராவ் இதை அக்கறையுடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இது குறித்து இணை ஆணையர் தென்னரசுவிடம் பேசினோம், ``எந்தவிதமான ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்" என்று மட்டும் முடித்துக்கொண்டார்.

பின் செல்ல