Published:Updated:

`வக்கீல் ஃபீஸைக் குறைக்க முடியுமா சார்...?'- கட்டணத்தால் கதிகலங்கிய சபரிமலை தேவசம்போர்டு

சிந்து ஆர்

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்கள் நுழைவது சம்பந்தமாக கோர்ட்டில் வாதாடிய வகையில் 62 லட்சம் ரூபாய் பீஸ் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கேட்டிருக்கிறார்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் 62 லட்சம் ரூபாய் பீஸ் கேட்டிருப்பதால் தேவசம்போர்டு தலைவர் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.

சபரிமலை
சபரிமலை

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சென்று வழிபட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதை மாற்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதிலும் சில பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த களேபரங்களால் கடந்த மண்டலகால மகரவிளக்கு பூஜையில் சபரிமலையில் வருமானம் சரிந்தது.

இந்த நிலையில் சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்கள் நுழைவது சம்பந்தமாக கோர்ட்டில் வாதாடிய வகையில் 62 லட்சம் ரூபாய் பீஸ் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கேட்டிருக்கிறார். இதனால் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிர்ச்சியடைந்துள்ளது.

அபிஷேக்  சிங்வி
அபிஷேக் சிங்வி

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ``இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களான மோகன் பராசரன் அல்லது கோபால் சுப்பிரமணியத்தையோ நியமிக்கலாமா என தேவசம்போர்டு முடிவு செய்திருந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தேவசம்போர்டு அனுமதி இல்லாமல் காங்கிரஸ்காரரான அபிஷேக் சிங்வியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது" என்றார். சபரிமலையில் வருமானம் கடுமையாக சரிந்ததால் வழக்கறிஞர் கட்டணத்தை குறைத்துக்கொள்ளும்படி சிங்விக்கு வேண்டுகோள் விடுக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.