Published:Updated:

திருச்செந்தூர்: 9 மாதங்களுக்குப் பிறகு கடலில் புனித நீராட அனுமதி! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

’திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் புனித நீராடிட அனுமதி அளிக்க வேண்டும்’ என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு கடலில் புனித நீராடிட இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அறுபடை வீடுகளில், மற்ற முருகன் கோயில்களில் மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமான், இங்கு மட்டும் அலை பாயும் கடலருகே அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச நாள்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தரிசன வரிசையில் பக்தர்கள்
தரிசன வரிசையில் பக்தர்கள்

அத்துடன், கோயில் கடற்கரையில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்குத் தளர்வினால், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் பல நெறிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்திட பக்தர்களுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு. அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாள் ஒன்றுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த 2,000 பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டது.

'சுப்பிரமணியர், சண்முகர் சந்நிதிகளில் மட்டும் தரிசனம் செய்ய வேண்டும், பிராகாரத்திலுள்ள பிற சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, தேங்காய்ப்பழம் உடைப்பதற்கும் பால் அபிசேகம் செய்வதற்கும் அனுமதியில்லை. கடற்கரை, நாழிக்கிணற்றில் புனித நீராட அனுமதியில்லை. அத்துடன் முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் ஆகியவற்றிற்கும் அனுமதியில்லை' என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்ட்டன. தொடர்ந்து, நடைபெற்ற ஆவணித்திருவிழாவின் 7வது, 8வது நாள் திருவிழாவிலும், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மகிழ்சியில் கடலில் நீராடிய பக்தர்கள்
மகிழ்சியில் கடலில் நீராடிய பக்தர்கள்

தொடர்ந்து, இதே நெறிமுறைகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 'குற்றாலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதைப் போல, திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடிட அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12 மணி முதல் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு கடற்கரையில் புனித நீராடினர். கடலில் புனித நீராடிட அனுமதி அளிக்கப்பட்டாலும், நாழிகிணற்றில் பக்தர்கள் புனித நீராடிடத் தடை தொடருவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ராகவேந்திரி, “கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு குடும்பத்தோட 9 மாசம் கழித்து இன்னைக்குதான் திருச்செந்தூருக்கு வந்தோம். எப்பவும் கோயிலுக்குள்ள சுவாமி தரிசனத்துக்குப் போகுறதுக்கு முன்னால கடலிலும், நாழிக்கிணத்துலயும் குளிச்சுட்டுப் போறதுதான் வழக்கம்.

மகிழ்ச்சியில் கடலில் நீராடிய பக்தர்கள்
மகிழ்ச்சியில் கடலில் நீராடிய பக்தர்கள்

ஆனா, ஊரடங்கு கட்டுப்பாடுங்கிறதுனால கடலில் குளிக்க அனுமதி கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. கடலில் கால் நினைக்கவும் அனுமதிக்கலை. மன வருத்தத்தோட கோயில்ல சுவாமி கும்பிட்டுட்டு வெளிப் பிராகாரத்துல வந்து உட்காந்திருந்தோம். சரியா 12 மணி இருக்கும். ’கடலில் பக்தர்கள் புனித நீராடலாம்’னு அறிவிப்புல சொன்னப்போ ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. குடும்பத்தோட கடலில் குளிச்சோம். ஆனா, நாழிக்கிணறுக்கு அனுமதி இல்லைன்னு சொல்லிட்டாங்க.அதே போல முடிக்காணிக்கை செலுத்தவும், காதுகுத்தவும் கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கணும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு