Published:Updated:

`கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை!' - குமரி கோயில் சர்ச்சைக்கு அறநிலையத் துறை விளக்கம்

வழிபாட்டுக்கான கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றிய தகவல், கோயில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், விவேகானந்தா கேந்திரா என சுற்றிப்பார்க்கும் பயணிகள், பகவதி அம்மன் கோயில் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வேங்கடாசலபதி கோயிலுக்கும் சென்றுவருவது வழக்கம். அதிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு நடை திறந்து, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக பலவகையில் அம்மனை வழிபாடு செய்வார்கள்.

வழிபாட்டுக் கட்டணமாக அபிஷேகத்திற்கு ரூ.250, சந்தனக்காப்புக்கு ரூ.100, கன்னியாபோஜனத்துக்கு ரூ.150, புடவை சார்த்த ரூ.10, அரவணை ரூ.75, பால்பாயசம் ரூ.50, பொங்கல் ரூ.25, சோறுகொடுப்பு ரூ.20, அஷ்டோத்திரம் ரூ.5, மாதாந்திர அர்ச்சனைக்கு ரூ.15 எனக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

கோயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்
கோயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்

இந்நிலையில், வழிபாட்டுக் கட்டணங்களை மேலும் உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதுபற்றிய தகவல், கோயில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது

புதிய கட்டணமாக அபிஷேகத்திற்கு ரூ.500, சந்தனக்காப்பு ரூ.200, கன்னியாபோஜனம் ரூ.500, புடவை சார்த்த ரூ.50, அரவணை ரூ.200, பால்பாயசம் ரூ.100, பொங்கல் ரூ.100, சோறு கொடுப்பு ரூ.100, அஷ்டோத்திரம் ரூ.10, மாதாந்திர அர்ச்சனைக்கு ரூ.25 என வழிபாட்டுக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட உள்ளதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால், வரும் 20-ம் தேதிக்குள் பக்தர்கள் தெரிவிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

திடீரென கோயில் வழிபாட்டுக் கட்டணம் அதிகரிக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் தரப்பில் இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பைக் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``கட்டண உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படவில்லை. இப்போது பக்தர்களிடம் கருத்துக்கேட்பு மட்டும்தான் நடக்கிறது. இதுகுறித்து கமிஷனர்தான் அறிவிப்பார்" என்றனர்.