Published:Updated:

`இந்த ட்ரை சைக்கிள்தான் ஆம்புலன்ஸ்!' -கோடிகள் குவிந்தும் பக்தர்களைப் பதறவைக்கும் ராமேஸ்வரம்

சிகிச்சைக்காக டிரை சைக்கிளில் கொண்டு வரப்பட்ட பெண் பக்தர்
சிகிச்சைக்காக டிரை சைக்கிளில் கொண்டு வரப்பட்ட பெண் பக்தர்

கோயிலுக்கு வரும் பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த ஏற்பாடும் இல்லை, ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை.

ராமேஸ்வரம் தீவினை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நிதிகள் முறையற்ற திட்டங்களால் வீணடிக்கப்படுவதால், அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

இந்துக்களின் முதன்மையான புனிததலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ராமேஸ்வரம். காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமியை தரிசிக்கவும் இங்குள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் அமாவாசை, பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இவை தவிர அனைத்து மதங்களையும் சார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இவர்களின் மூலம் இங்குள்ள நகராட்சி நிர்வாகத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில் நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ள வாகன நுழைவுக் கட்டண வசூலிக்கும் உரிமை மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் மத்திய மாநில அரசுகள் பல கோடி ரூபாய்களை ராமேஸ்வரம் மேம்பாட்டுக்காக வழங்குகிறது.

ஆனால், இவ்வளவு நிதி கிடைத்தும் அவை முறையாகச் செலவிடப்படாததால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. பேருந்து நிலையத்தில் முறையான குடிநீர் வசதியோ, இலவசக் கழிப்பிட வசதியோ கிடையாது. கோயிலைச் சுற்றியும் முக்கிய வீதிகளிலும் குப்பைகள் குவிந்தும் சாக்கடைகள் வழிந்தும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகமோ பாதாளச் சாக்கடைத் திட்டத்தைக் காரணம் காட்டிக்கொண்டு இருப்பதுடன், ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் பூங்காக்கள் அமைத்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளது.

இதுதவிர அம்ருத் சிட்டி திட்டத்தில் ரூ 2.50 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை, உடை மாற்றும் அறை போன்றவற்றைப் பயன்பாட்டுக்குத் திறந்துவிடாமல் முடக்கி வைத்திருக்கிறது. கோயிலுக்கு வருபவர்களில் யாராவது விபத்திலோ அல்லது இயற்கையாகவோ உயிரிழந்தால் அவர்களது உடலை எடுத்துச்செல்லக்கூட வாகனம் ஏதும் இல்லாத நிலையில் குப்பை வண்டியில் ஏற்றிச் செல்லும் அவலமான நிலையே உள்ளது.

பயன்பாடில்லா இடத்தில் பூங்கா
பயன்பாடில்லா இடத்தில் பூங்கா

நகராட்சி நிர்வாகம்தான் இப்படியிருக்கிறது என்றால், கோயில் நிர்வாகம் அதைவிட மோசமானதாக இருக்கிறது. பக்தர்கள் உண்டியல் காணிக்கை மட்டுமே மாதத்துக்குச் சராசரியாக ரூ.70 லட்சம் வரை கோயிலுக்குத் தருகின்றனர். இவை தவிர தீர்த்தம், பூஜை, சிறப்பு தரிசனம் எனப் பல லட்சம் வருவாய் கிடைக்கிறது. இத்தனை இருந்தும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படவில்லை.

கோயிலுக்கு வரும் பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்குக் கோயிலுக்கு அருகிலேயே சிகிச்சை அளிக்க எந்த ஏற்பாடும் இல்லை. சுமார் ஒண்ணரை கி.மீ தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. கோயிலைச் சுற்றித் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் இது போன்ற சூழ்நிலையில் பாதிக்கப்படும் நோயாளிகளைத் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதால் ஏற்படும் தாமதத்தினால் உயிர் இழப்பும் நேரிடுகிறது.

அப்படியே நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாலும் அங்கும் அலட்சியபோக்கே நிலவுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களில் வயதானவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தக் குறைபாடு போன்றவற்றுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான தீவிர சிகிச்சை பிரிவோ, நவீன சாதனங்களோ கிடையாது. இதனால் மேல் சிகிச்சைக்காக 55 கி.மீ தூரம் உள்ள ராமநாதபுரத்துக்கே செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் கால தாமதத்தினாலும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதைவிட கொடுமை நோய்களைப் போக்கக்கூடிய மருத்துவமனையில் சுகாதாரத்தைப் பேனும் துப்புரவு ஊழியர்களே இல்லாத அவலம் உள்ளது.

சிகிச்சைக்காக டிரை சைக்கிளில் கொண்டு வரப்பட்ட பெண் பக்தர்
சிகிச்சைக்காக டிரை சைக்கிளில் கொண்டு வரப்பட்ட பெண் பக்தர்

பொதுமக்களும் மத்திய மாநில அரசுகளும் ராமேஸ்வரம் மேம்பாட்டுக்கும் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கும் கோடிக் கோடியாக நிதியினைக் கொட்டிக் கொடுத்தும் அவை முறையாகச் செலவழிக்கப்படாமல் வீணடிக்கப்பட்டே வருகின்றன. இதில் கிடைத்த வரை லாபம் எனக் கருதும் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மனநிலையினால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது யாத்திரை வாசிகளின் உயிருக்கும் உலை வைத்துக்கொண்டிருக்கின்றன நகராட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும்.

அடுத்த கட்டுரைக்கு