Published:Updated:

சகல வரங்களையும் அருளும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் ( என்.ஜி.மணிகண்டன் )

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் மதுரை. புதனுக்கு உரிய ரத்தினமான மரகதத்தில் மூலவர் மீனாட்சி சிலை உள்ளது. அதேபோல், பஞ்ச சபைகளில் வெள்ளி அம்பலம் மதுரையாகும். கால் மாறி ஆடிய கோலத்தில் நடராஜர் காணப்படுவது விசேஷம்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

சகல வரங்களையும் அருளும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆரத்தி தரிசனம்... ‘திருஆலவாய்’ என்பது மதுரை மாநகரின் பெயர்களுள்...

Posted by Sakthi Vikatan on Monday, April 27, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

‘திருஆலவாய்’ என்பது மதுரை மாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே இறவாப் பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு கிட்டும். 

`மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறும் அளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலம் மாமதுரை. இங்குள்ள திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

worshipathome
worshipathome

இங்குள்ள மீனாட்சி அம்மனின் விக்ரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது. 

மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்டகாலமாக மகப்பேறு இல்லாததால், யாகம் செய்ய, அந்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தையாக காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்தவள் இவள்.

மீனாட்சியம்மை, பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான 'வேப்பம்பூ' மாலையைப் பட்டாபிஷேகத்தின்போது சூடிக்கொள்கிறார். ராமர், லட்சுமணர், வருணன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் பூஜித்துப் பேறு பெற்ற தலம் மதுரை.

விருத்ராசுரனைக் கொன்ற இந்திரன், பிரும்மஹத்தி தோஷம் நீங்க, பாண்டிய நாட்டுக் கடம்ப வனத்தில் சுயம்புலிங்கத்தை வழிபட்டுத் தோஷம் நீங்கப் பெற்றான். இந்தச் சிவலிங்கத்தைத் தேவர்களும் பூஜித்து வந்தார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் மதுரை. புதனுக்கு உரிய ரத்தினமான மரகதத்தில் மூலவர் மீனாட்சி சிலை உள்ளது. அதேபோல், பஞ்ச சபைகளில் வெள்ளி அம்பலம் மதுரையாகும். கால் மாறி ஆடிய கோலத்தில் நடராஜர் காணப்படுவது விசேஷம். மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வேண்டினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவர். திருமணம், குழந்தை பக்கியம் வேண்டுபவர்களுக்கு அளிப்பவர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர்.

அடுத்த கட்டுரைக்கு