Published:Updated:

குவியும் சிபாரிசுக் கடிதங்கள்!- அத்திவரதர் தரிசனத்தில் திணறும் நிர்வாகக் குழு

அத்திவரதர்
அத்திவரதர்

அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பெரிய நிறுவனங்கள், அரசுத் துறை தொடர்பான அலுவலர்கள், துறை வாரியாக அலுவலர்கள், விஐபி-க்கள், வி.வி.ஐ.பி-க்கள் எனத் தனித்தனியாக டோனர் பாஸ் வழங்கப்படுகிறது.

அத்திவரதர் தரிசனத்துக்காக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகிறார்கள். பொது தரிசனத்தில் தரிசிக்க 4 மணி நேரத்திலிருந்து 7 மணிநேரம் வரை ஆகிறது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிரமம் இல்லாமல் இருப்பதற்காக தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பெரிய நிறுவனங்கள், அரசுத் துறை தொடர்பான அலுவலர்கள், துறை வாரியாக அலுவலர்கள், வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்கள் எனத் தனித்தனியாக டோனர் பாஸ் வழங்கப்படுகிறது. டோனர் பாஸ் வைத்துள்ளவர்கள் மேற்கு கோபுரம் வழியாக அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள்.

பாஸ்
பாஸ்

பொதுவழியில் வருபவர்கள் கிழக்கு கோபுரம் வழியாக தரிசனம் செய்கிறார்கள். கிழக்கு கோபுரத்திலிருந்து மேற்கு கோபுரத்துக்கு வர ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிவர வேண்டும். ஆனைக்கட்டி தெரு, அஸ்தகிரி தெரு உள்ளிட்ட தெருக்களில் டோனர் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். எந்தப் பக்கம் சென்றாலும் காவலர்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி அலைக்கழிக்க வைக்கிறார்கள். இதனால் காலவிரயம் ஏற்படுகிறது. எம்.எல்.ஏ, எம்.பி., அரசு உயர் அதிகாரிகளின் சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக டோனர் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மேற்கு கோபுரம் வழியாக விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிபாரிசுக் கடிதத்தை வைத்துக்கொண்டு சிலர் அத்திவரதரை சீக்கிரமாக தரிசித்து விடலாம் என மேற்கு கோபுரத்துக்கு வந்து விடுகின்றனர். ஆரம்பத்தில் சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அதேபோல் தற்போது வி.ஐ.பி சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்கள் டோனர் பாஸ் வழியில் செல்ல முயல்கின்றனர். ஆனால், பாஸ் இருப்பர்களுக்கு மட்டுமே அனுமதி என காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். இதனால் இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.

சிபாரிசுக் கடிதங்கள் கொடுக்கும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள், அவர்களுக்கு அந்த சிபாரிசுக் கடிதத்தை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ் வேண்டும் என அறிவுறுத்துவது இல்லை. அதுபோல் சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்களுக்கு வி.ஐ.பி தரிசனத்தில் அனுமதி இல்லை என பேனர்கள் வைக்கப்படவில்லை. இதனால் தென்மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

சிபாரிசுக் கடிதங்களைக் கொண்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) கொடுத்து ஒப்பம் பெற வேண்டும். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அத்திவரதர் உதவி மையத்தில் கடிதத்தைக் கொடுக்க வேண்டும். கடிதங்கள் கொடுத்து பலமணிநேரம் கழித்தே அவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மட்டுமே டோனர் பாஸ் வழங்கப்படுகிறது. சிபாரிசுக் கடிதங்கள் வைத்திருப்பவர்களை தேவராஜ கோயில் பகுதியிலேயே பாஸ் பெறுவதற்கு சிறப்பு மையங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு