Published:Updated:

`4,000 டோனர் பாஸ் எங்கே?'- கொந்தளிக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்!

JAYAVEL B

அத்திவரதர் தரிசனத்தில் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் பாஸ் முறையாக கீழ் உள்ள பணியாளர்களுக்கு போய்ச் சேரவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர் ( பா.ஜெயவேல் )

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், தினமும் 4 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில், பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள், வரிசையில் நிற்பதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தினமும் கண்காணித்து தொடர்ந்து வசதிகளை அதிகரித்துவருகிறது.

அத்திவரதர் தரிசனம்
அத்திவரதர் தரிசனம்
பா.ஜெயவேல்

கடந்த பத்து நாள்களாக பொது தரிசனத்தில் தரிசனம் செய்வதற்கு 6 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. வி.ஐ.பி டோனர் பாஸ் வைத்துள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. வி.வி.ஐ.பி வரிசையில் நிற்பவர்கள் 15 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.

கூட்ட நெரிசல் காரணமாக சில நேரங்களில் இந்தக் கால அளவுகள் கூடவோ குறையவோ செய்யும். வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் இங்குள்ள தரகர்கள் மூலம் சில ஆயிரம் கொடுத்துக்கூட பாஸ் வாங்கி அத்திவரதரை தரிசனம் செய்திருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பட்டு ஜவுளிக்கடைகளில் தங்கள் கடைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பட்டுப் புடவை எடுப்பவர்களுக்கு பாஸ் கொடுப்பதாகவும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பாஸை கூரியரில் அனுப்பி வைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

அத்திவரதர் தரிசனம்
அத்திவரதர் தரிசனம்
பா.ஜெயவேல்

பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது. சிபாரிசுக் கடிதம் அல்லது நேரடி கடிதம் மூலம் எழுதிக்கொடுத்து பாஸ் வாங்குகிறார்கள். அதுபோல் அதிகாரிகளுக்குத் துறை ரீதியாக வழங்கப்படும் டோனர் பாஸ் அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் பலருக்குப் போய்ச் சேரவில்லை என்கிறார்கள்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர், ``அத்திவரதர் தரிசனத்துக்காக பல்வேறு ஊர்களிலிருந்து எங்கள் துறையைச் சேர்ந்த பலர் இங்கு பணியாற்றுகின்றனர். அத்திவரதர் வைபவ பணியில் உள்ள நாங்கள் பல போராட்டங்களைச் சந்தித்துதான் பணிக்கு உள்ளே செல்ல முடிகிறது. எங்க குடும்பத்தினரைக்கூட எங்களால் உள்ளே அழைத்துச் செல்ல முடியவில்லை.

அத்திவரதர் டோனர் பாஸ்
அத்திவரதர் டோனர் பாஸ்
பா.ஜெயவேல்

இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள் தரிசிப்பதற்காகக் கோயில் நிர்வாகத்தில் இருக்கும் முக்கிய அதிகாரிக்கு 4,000 பாஸ் கொடுத்ததாக சொல்கிறார்கள். தியாக மனப்பான்மை கொண்ட அந்த அதிகாரி எங்கள் துறையைச் சேர்ந்த யாருக்கும் பாஸ் கொடுக்கவில்லை. அந்த பாஸ் எங்கே சென்றது? யாருக்குச் சென்றது என்று விசாரணை வைக்க வேண்டும்” எனக் கொந்தளிக்கிறார்.