Published:Updated:

`ஆறு மொழிகள்.. 14 ஆண்டுகள்..!’- திருவட்டாறு கோயில் வரலாற்றைச் சொல்லித்தரும் பட்டாளம் தாத்தா

`பட்டாளம் தாத்தா' என்றால் திருவட்டாறு சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. அந்த அளவிற்கு பிரபலம் அவர். திருவட்டாறு கோயில் வரலாற்றை அவர் சொல்லக் கேட்கும்போது மிகவும் சிலிர்ப்பாக இருக்கும். சாதாரண பட்டன் மொபைல் போன் கூட அவரிடம் கிடையாது.

 சுகுமாரன் நாயர்
சுகுமாரன் நாயர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் 76-வது கோயில் இது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட இந்தக் கோயிலில் தமிழகம், கேரளம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். இஸ்கான் அமைப்பின் நிறுவனர் சைதன்ய மகாபிரபு இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளார். எனவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்கான் அமைப்பினர் மற்றும் வைணவ பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசிப்பது வழக்கம்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்

திருவட்டாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளில் திருவட்டாறு கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொடுக்கிறார் சுகுமாரன் நாயர். பக்தர்கள் யாராவது மனமுவந்து பணம் கொடுத்தாலும் அதை வாங்குவதில்லை. அவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அன்பாக `பட்டாளம் தாத்தா' என்றுதான் கோயில் ஊழியர்கள் அழைக்கிறார்கள். `பட்டாளம் தாத்தா' என்றால் திருவட்டாறு சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. அந்த அளவிற்கு பிரபலம் அவர்.

``தினமும் காலை 9 மணிக்குக் கோயிலுக்கு வந்துவிடுவார். மதியம் 12 மணிக்கு பூஜை முடிந்து நடை சார்த்தியதும் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். மாலையில் ஆறு மணிக்குக் கோயிலுக்கு வருபவர் இரவு 8 மணிக்கு மேல் கோயில் நடை சார்த்தியதும் புறப்பட்டுவிடுவார். சாதாரண பட்டன் மொபைல் போன் கூட அவரிடம் கிடையாது. பக்தர்கள் கூட்டமாக வந்தாலும் சரி, தனி நபராக வந்தாலும் சரி அவர்களுக்குத் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாற்றைச் சலிக்காமல் சத்தமாகச் சொல்லிக்கொடுப்பார்.

சுகுமாரன் நாயர்
சுகுமாரன் நாயர்

குறுக்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பொறுமையாக பதில் கூறுவார். திருவட்டாறு கோயில் வரலாறு மட்டுமல்ல; 108 திவ்ய தேசங்களில் எந்தக் கோயிலுக்கு என்ன பெருமை. அந்தக் கோயில்களிலிருந்து திருவட்டாறு கோயில் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதுவரை நுணுக்கமாகச் சொல்லிக்கொடுப்பார். கோயில் தூண்களில் வடிக்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி புராண, வரலாற்றுக் கதைகளை வகுத்துச் சொல்லுவார். திருவட்டாறு கோயில் வரலாற்றை அவர் சொல்ல கேட்கும்போது மிகவும் சிலிர்ப்பாக இருக்கும்" என்று சிலாகிக்கிறார்கள் ஆதிகேசவப் பெருமாள் கோயில் பக்தர்கள்.

பக்தர்களிடம் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்த சுகுமாரன் நாயரிடம் பேசினோம், ``நான் 1944-ல் பிறந்தேன், இப்போது எனக்கு 76 வயது நடக்கிறது. 1965-ல் ராணுவத்தில் இணைந்து, 20 வருடம் பட்டாளத்தில் வேலை செய்துவிட்டு 1983-ல் ஓய்வுபெற்றேன். அதன்பிறகு ரயில்வேயில் பணி செய்தேன். 2004-ல் ரயில்வே பணியில் ரிட்டயர்டு ஆனேன். 2005-ம் ஆண்டு முதல் திருவட்டாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குக் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொடுக்கிறேன். ராணுவத்தில் பணிபுரிந்ததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் சரளமாகப் பேசுவேன். ஆங்கிலம், மலையாளம் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டேன்.

திருவட்டாறு கோயில் சிற்பங்கள்
திருவட்டாறு கோயில் சிற்பங்கள்

என் அப்பா இந்தக் கோயிலில் வாட்ச்மேனாகப் பணிபுரிந்தார். ஏழு வயது முதலே கோயில் வரலாற்றைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். இந்தக் கோயில் கட்டிச்சோறு தின்னுதான் வளர்ந்தேன். அதனாலதான் நான் இப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறேன். ரயில்வேயில் வெல்டிங் வேலை செய்ததால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக இருக்கிறது. மற்றபடி உடலில் எந்த நோயும் இல்லை. ராணுவத்திலும், ரயில்வேயிலும் பென்சன் வருகிறது. அது என் குடும்பத்திற்குப் போதுமானது. எனவே, பக்தர்களிடம் நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களாகப் பணம் கொடுத்தாலும் நான் வாங்குவது இல்லை. திருவட்டாறு தலத்தில் நான் பிறந்ததை பெருமையாகக் கருதுகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்தக் கோயில் வரலாற்றையும் பெருமையையும் சொல்லியே கழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.