Published:Updated:

அம்பர்நாத்... ஒரே இரவில் பாண்டவர்கள் கட்டிய கோயில்!

மு.ஐயம்பெருமாள்

பிரீமியம் ஸ்டோரி
மகாராஷ்டிரா மாநிலம் இறை பக்திக்கும் வழிபாடு களுக்கும் ஆன்மிகக் கொண்டாட்டங்களுக்கும் புகழ்பெற்றது. எந்த விழாவாக இருந்தாலும் அதை வாரக் கணக்கில் கொண்டாடுவது மகாராஷ்டிர மக்களின் வழக்கம்.

மும்பை ஸித்தி விநாயகர் கோயில், மகாலட்சுமி கோயில், நாசிக் திரியம்பகேஸ்வரர் கோயில், ஷீர்டி சாயிபாபா கோயில், கோலாப்பூர் மகா லட்சுமி கோயில், பண்டரிபூர் விட்டல்மந்திர், புனே பீமாசங்கர் ஆலயம் என்று புகழ்பெற்ற பல கோயில்கள் இங்குள்ளன. இந்த ஆலயங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கது, அம்பர்நாத் சிவன் கோயில். பழைமையான சிவாலயம் இது.

உலகில் உள்ள 218 புராதனக் கட்டடங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு பாரம்பர்ய புராதனச் சின்னமாக விளங்குகிறது அம்பர்நாத் சிவாலயம்.

சாளுக்கியர்கள் மற்றும் குஜராத்தின் சோலங்கி காலத்துக் கட்டடக் கலையைப் பிரதிபலிப்பது.

அம்பர்நாத்... ஒரே இரவில் பாண்டவர்கள் கட்டிய கோயில்!

`அம்ரேஷ்வர் ஆலயம்' என்று அழைக்கப்படும் இக்கோயில் சில்ஹாரா மன்னர் சித்தராஜாவால் கட்டப்பட்டு 1065-ம் ஆண்டு அவர் மகன் முன்னி யாக் மூலம் புதுப்பிக்கப்பட்டது.

துவாபர யுகத்தில், பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தின்போது, ஒரே நாள் இரவில் இக்கோயிலைக் கட்டியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பாண்டவர்கள் இக்கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. எனவேதான் கோயில் கருவறையின் மேற்பகுதி இன்னும் முழுமை அடையாமல் அப்படியே இருக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

மேலும், பாண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் விதமாக சுமார் ஒரு கி.மீ. தொலைவுக் குச் சுரங்கப்பாதை அமைத்திருந்தனர் என்றும், பிற்காலத்தில் இப்பாதை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.

தற்போது தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வால்துனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் கருவறையில் சுயம்புவாக வீற்றிருக்கிறார். கருவறைப் பகுதி பூமிக்கு அடியில் நிலவறை போன்று அமைந்துள்ளது. 20 படிகள் இறங்கிச் செல்லவேண்டும்.

அனைத்து பக்தர்களும் கோயில் கருவறைக் குள் சென்று சிவபெருமானை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களே சுவாமிக்குப் பூஜையும் செய்யலாம்.

கோயிலின் மேற்கு நுழைவு வாயிலில் இரண்டு நந்திகள் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.கிழக்குச் சுவரில் சிவன், விஷ்ணு, பிரம்மாவின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் விநாயகருக்கும் சிறிய ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. வேறு கோஷ்ட தெய்வங்கள் எதுவும் இல்லை.

அம்பர்நாத்... ஒரே இரவில் பாண்டவர்கள் கட்டிய கோயில்!

கோயில் தூண்களில் சிவனின் பல ரூபங்களை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்போது இக்கோயில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரை இடிந்து விழாமல் இருக்க, இரும்புத்தூண்களால் முட்டுக்கொடுத்துள்ளார்கள். கோயிலில் கோபுரம் கிடையாது.

பக்தர்கள் அனைவருக்கும் தினமும் மதியம் 12 முதல் 2 மணி வரை அன்னதானம் வழங்கப் படுகிறது. இக்கோயில் குறித்து, இங்கு பூஜை செய்து வரும் கைலாஷ் பாட்டீலிடம் கேட்டோம்.

“இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 12 சிவாலயங்களுக்கு நிகரான கோயில் இது. அந்நியர் ஆட்சியில் அவர்களிடமிருந்து பாதுகாக்கும் விதமாக இக்கோயிலை பிரபலப்படுத்தாமல் விட்டுவிட்டனர். ஆனால் அதன் பிறகும் இக்கோயிலின் மகிமை வெளியுலகுக்குத் தெரியாமல் போய்விட்டது!

அம்பர்நாத்... ஒரே இரவில் பாண்டவர்கள் கட்டிய கோயில்!

தற்போது கோயில் மிகவும் மோசமாக இருப்பதால், மாநில அரசு சார்பில் 43 கோடி ரூபாய் செலவில் கோயிலைப் புதுப்பிகும் பணி களை மேற்கொள்ள இருக்கிறார்கள்'' என்றார்.

இதுகுறித்து கல்யான் மக்களவைத் தொகுதி எம்.பி. காந்த் ஷிண்டேவிடம் கேட்டோம்.

“43 கோடி ரூபாய் செலவில் இரண்டு கட்டமாக இந்தக்கோயில் புனரமைக்கப்படவுள்ளது. முதல் கட்ட பணிகளுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது'' என்றார்.

முதல் கட்டமாக ஆலய நுழைவு வாயில், பஸ் நிறுத்தம், பூ மார்க்கெட், வாகன பார்க்கிங், வால்துனி ஆற்றைக் கடக்க வசதியாக இரண்டு சிறு பாலங்கள் அமைப்பது, கோயில் மற்றும் தெப்பக்குள பராமரிப்பு முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இங்கு நடைபெறும் சிவராத்திரி விழா மிகவும் பிரபலம். சிவராத்திரியை மையப்படுத்தி நான்கு நாள்கள் வெகுவிமர்சையாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபடுவது வழக்கம். அதோடு புனித மாதமான ஸ்ராவன் (சிரவண) மாதத்தின் நான்கு செவ்வாய் கிழமைகளிலும் இக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது?!: மும்பைக்கு வரும் ரயில்களில் வந்தால், கல்யான் ரயில் நிலையத்தில் இறங்கி, புறநகர் ரயில்கள் மூலம் அம்பர்நாத்தை அடையலாம். அம்பர்நாத் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு. விமானத்தில் வரும் அன்பர்கள், காட்கோபர் எனும் இடத்தை அடைந்து, அங்கிருந்து புறநகர் ரயில் மூலம் அம்பர்நாத்திற்குச் செல்லலாம்.

அருகில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்...

அம்பர்நாத் சிவாலயத்தை தரிசித்துவிட்டு, கல்யான் வழியே ஷீர்டிக்குச் செல்லமுடியும். பஸ் மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

ஷீர்டிக்குச் செல்பவர்கள், நாசிக் அருகிலுள்ள திரியம்பகேஸ்வரர் கோயில் மற்றும் சனீஸ்வரர் கோயிலை வழிபடலாம். திரும்பும் வழியில் புனே வந்து, மற்றொரு முக்கிய சிவாலயமான பீமா சங்கர் ஆலயத்தையும் தரிசனம் செய்யலாம்.

அம்பர்நாத்... ஒரே இரவில் பாண்டவர்கள் கட்டிய கோயில்!

வண்டிக்காரனும் கடவுளும்!

அரிய தத்துவங்களையும் எளிய உதாரணங்களால் அழகாக விளக்குவார் கிருபானந்தவாரியார். சொற்பொழிவின் போது அவர் கூறிய அற்புத விளக்கக் கதைகளில் ஒன்று இது.

`வண்டிக்குள் மாடு தானாக நுழைந்து தன்னைத் தானே பூட்டிக்கொள்ளாது.

வண்டியும் தானாகச் சென்று தன்னை இழுப்பதற்கேற்ப, மாட்டைப் பிணைத்துக்கொள்ளாது. இரண்டையும் பூட்டி ஓட்டுகிறான் மனிதன்.

அந்த வண்டி போன்றதுதான் நம் உடம்பு; மாடு போன்றது உயிர். மூக்குக்கயிற்றைப் போன்றது சுவாசம்.

கயிற்றைப் பிடித்து மாட்டை மனிதன் ஓட்டுவது போல், சுவாசம் என்ற கயிற்றைப் பிடித்து உயிர்களை நடத்துகிறார் கடவுள்!'

அருமையான கதை. கடவுளின் கருணை இல்லையேல் உடம்பில் உயிர் தங்காது. ஆகவே இறையைப் போற்றுவோம்.

- கே.கீர்த்தனா, சேலம்-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு