கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்!

சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிற்பங்கள்

கலை

சிற்பங்கள் - நம் மண்ணின் கதையை, கலையை, தொன்மையை, பாரம்பர்யத்தை, பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் காலப் பெட்டகங்கள்.

அவற்றில் சில பொக்கிஷங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு...

பிரம்ம சாஸ்தா கோலத்தில் முருகப்பெருமான்!

முருகப்பெருமானின் பலவிதமான உருவபேதங்களை ஞானநூல்கள் விளக்கிச் சொல் கின்றன. அவற்றின் ஒன்று பிரம்மசாஸ்தா திருவடிவம்.

பிரணவப் பொருளறிய பிரம்மனைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்த முருகன், படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டாராம். அதன் பொருட்டு பிரம்மனுக்கு உரிய அக்கமாலை, கமண்டலம் ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் சில ஆலயங்களில் அருள்கிறார், கந்தன்.

சேதி சொல்லும் சிற்பங்கள்!

பெரும்பாலும் நின்ற கோலத்தில் அருளும் முருகனின் இந்தத் திருவடிவம், அமர்ந்த கோலத்தில் திகழ்வது அபூர்வம். படத்தில் நீங்கள் காணும் சிற்பம், முதலால் பராந்தகச் சோழன் காலத்தில் வடிக்கப்பட்டது; புதுக்கோட்டை மாவட்டம் நண்டப்பட்டி எனும் ஊரில் உள்ளது. இடக்காலை மடித்துவைத்து, வலக்காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அருள்கிறார் முருகன்.

யானை வாகனன் முருகன்!

முருகனுக்கு மயில் மட்டுமன்றி யானை, ஆடு போன்ற வாகனங்களும் உண்டு என்கிறது நக்கீரரின் திருமுருகாற்றுப்படை. பரிபாடல் போன்ற நூல்களும் புராணங்கள் பலவும் முருகன் யானை வாகனனாய்த் திகழ்ந்த கதையைச் சொல்கின்றன. முற்காலச் சோழர்களின் கோயில்களில் (11-ம் நூற்றாண்டு வரை) முருகனுக்கு வாகனமாய் யானையையே காட்டியுள்ளனர்.

சேதி சொல்லும் சிற்பங்கள்!

படத்தில் நீங்கள் காணும் முருகன், கொடும்பாளூர் மூவர் கோயிலில் விமானக் கோட்டத்தில் திகழ்பவர். இருக்குவேளிர் மரபினனான பூதிவிக்ரமகேசரி கட்டியது இக்கோயில். நான்கு கரங்கள் கொண்டு, மார்பில் சன்னவீரமும், தலையில் கிரீடமும், செவிகளில் மகரக் குண்டலங்களும் துலங்க, அழகுப் புன்னகையுடன் அருள்கிறார் இந்த முருகன்.

பழுவூர் அழகன்!

அரியலூர் மாவட்டத்திலுள்ள பழுவூர் அக்காலத்தில் பழுவேட்டரையர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அவர்களின் கற்றளிகளும் சிற்பங்களும் தனித்துவம் வாய்ந்தவை. அவற்றுள் அரிய திருவடிவில் திகழும் முருகனையே இங்கு காண்கிறீர்கள்.

சேதி சொல்லும் சிற்பங்கள்!

ஒரு பாதத்தைச் சாதாரண நிலையில் வைத்து, மற்றதை தொடையின் மீது வைத்தபடி திகழும் அர்த்தபத்மாசனக் கோலத்தில் அருள்கிறார்.தலையில் ஜடாபாரம், காதில் குண்டலங்கள், மார்பில் சன்னவீரம் எனும் வீரச்சங்கிலி, வயிற்றுப் பகுதியில் உதர பந்தனம் திகழ, அபய முத்திரையோடு அருளும் முருகனின் அழகைச் சொல்லில் வடிக்க இயலாது; ஆனால் கல்லில் வடித்து வியக்க வைத்திருக்கிறார்கள் சிற்பிகள்!

குடுமியான் மலை சிற்ப அற்புதங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம் குடுமியான்மலை. ஆதியில் பண்டுதிருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் பெயர்பெற்று விளங்கியதாக, கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவ்வூரின் மலை அடிவாரத்திலுள்ள குடைவரைக் கோயில், இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் கருவறையில் திகழும் சிவலிங்கம், சுவரில் கணபதி, துவார பாலகர்கள் என அனைத்தும் நேர்த்தியானவை. அருகிலேயே, பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் எடுப்பித்த சிகாநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலின் தூண் சிற்பங்கள் மிக அழகு!

சேதி சொல்லும் சிற்பங்கள்!
சேதி சொல்லும் சிற்பங்கள்!
சேதி சொல்லும் சிற்பங்கள்!
சேதி சொல்லும் சிற்பங்கள்!
சேதி சொல்லும் சிற்பங்கள்!

முதல் சப்தமாதர் சிற்பங்கள்...

கர்நாடக மாநிலம், ஐகொளேவில் உள்ளது ராவணப்பாடி குடைவரைக் கோயில். 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் புலகேசியால்(புலகேசி என்பதே பெயர்; புலிகேசி அல்ல) அமைக்கப்பட்டது. இங்குள்ள சிற்பத் தொகுப்பில், சிவனாரின் நடனத்தைக் கண்டு வியக்கும் நிலையில் சப்தமாதர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவையே வரலாற்றில் கிடைக்கும் முதல் சப்தமாதர்கள் சிற்பங்களாகும். இந்தச் சிற்பத் தொகுப்பில் இடமிருந்து வலமாய் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி நின்ற கோலத்தில் அருள்கின்றனர். படத்தில் மூவரைக் காண்கிறோம். பெரும்பாலும் கோயில்களில் அமர்ந்த நிலையில் அருளும் சப்தமாதர்கள், இங்கே நின்ற கோலத்தில் காட்சியளிப்பது அரிதான ஒன்று!

சேதி சொல்லும் சிற்பங்கள்!
சேதி சொல்லும் சிற்பங்கள்!

தவ்வை தேவி!

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

திருக்குறள் - இல்லறவியலில் இடம்பெறும் குறள் இது. பிறருடைய செல்வ வளத்தைக் கண்டு பொறாமைப்படுகிறவனைக் கண்டு, பொறுக்க இயலாமல் தன் மூத்தவளை அவனிடம் சென்று தங்குமாறு செய்வாளாம் திருமகள். மூத்தவளையே `தவ்வை’ எனக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். மூத்தவளை மூத்ததேவி, மூத்த லட்சுமி என்றும் அழைப்பர். காலத்தால் முற்பட்ட மூத்ததேவியின் சிற்பமாகக் கருதப்படுவது, பல்லவன் ராஜசிம்மனால் எழுப்பப்பட்ட காஞ்சி கயிலாயநாதர் ஆலயத்தின் தேவகோட்டத்தில் அமைந்த சிற்பமாகும்.

பெருத்தவயிற்றுடனும் கடக முத்திரையுடனும் அமர்ந்துள்ளா இந்த தேவி. அவளின் வலப்புரம் மகன் நந்திகேசுவரன்; இடப்புறம் மகள் அக்னிமாதா. இதே காலகட்டத்தைச் சேர்ந்த மூத்ததேவியின் சிற்பம், பனைமலை தாளகிரீஸ்வரர் கோயிலிலும், செங்கல்பட்டு அருகிலுள்ள வல்லம் குடைவரையிலும் காணப்படுகிறது.